ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் 20 முக்கியஸ்தர்களுக்கெதிராக நோர்வேயில் வழக்குத் தாக்கல்

0

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்கள் இருபது பேருக்கெதிராக நோர்வேயில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அது தொடா்பாக நோர்வே நாட்டு முன்னணிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்ட தலைவர்கள் 20 பேருக்கு எதிராக போர்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பிரஸ்தாப பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் உத்தியோகபூர்வ ரீதியில்  வேறு நாடுகளுக்கு விஜயம் செய்யும் போது அவர்களுக்கு அந்நாடுகளின் அரசு முறைப் பாதுகாப்பு உண்டு. அதன் காரணமாக அவ்வாறான பயணங்களின் போது அவர்களைக் கைது செய்ய முடியாது.  ஆனால் அரசு முறைப் பயணத்தைத் தவிர, தனிப்பட்ட ரீதியாக அவர்கள் வேறு நாடுகளுக்குச் செல்லும் போது கைதாகும் வாய்ப்பு இருப்பதாக நோர்வே பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக நோர்வேயில், பிரதிவாதிகளாக 20 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு தொடரப்பட்டுள்ள வழக்கில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிஸ்தர்கள் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. போர் நடைபெற்ற காலத்தில், மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் என பல்வகையான சான்றுகள் நோர்வே நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இனி நோர்வே நாட்டினுள் இலங்கை உயர் அதிகாரிகள் எவரும் வரமுடியாதவாறு தற்போது போடப்பட்டுள்ள வழக்கு கடுமையாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நோர்வே அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பெரும் சிக்கல் நிலை தோன்றும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறு இருப்பினும் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகள் பலவற்றில் இலங்கை அரசுத் தலைவர்களுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றது. இதே நிலை நீடித்தால் இன்னும் சிறிது காலத்தில் இலங்கைத் தலைவர்கள் எந்த ஒரு வெளிநாட்டிற்கும் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைதோன்றும் என்பதில் சந்தேகமில்லை எனலாம்

Share.

Comments are closed.