உழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.

0

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. இவ்விழாவானது தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கு  நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் விழாக்கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புதடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கலாக்கிச் சூரியனுக்கும், அடுத்தநாள் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

இந்நாளில் தமிழர்கள் இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவித்து, புதிய ஆடைகள் அணிந்து, தமது உற்றார் உறவினர்களுக்கு பரிசுகள் வழங்கி மிகவும் சிறப்பாகவும், மகிழ்வாகவும் கொண்டாடுகின்றனர்.

Share.

Comments are closed.