மகாவம்ச மனோநிலையில் சிங்களரும் ஈழத்தீவில் தமிழரும் – 02

Google+ Pinterest LinkedIn Tumblr +

ஈழத்தீவில் விஜயனின் வருகையுடன் ஆரம்பமான சிங்களக் குடியேற்றங்கள் ஈழத்தீவை ஆக்கிரமித்துக்கொள்ள தமிழோடு ஆரிய மொழி கலந்து உருவான சிங்களம் வழக்குக்கு வந்தது. விஜயனின் வழி வந்த சிங்கள அரசனான தேவநம்பிய தீசன் காலத்திலே, பாரதக் கண்டத்தின் மௌரியப் பேரரசனான அசோக சக்கரவத்தி, தான் தழுவிய பௌத்த மதம் பிற நாடுகளுக்கும் பரவும்வகை செய்ய வேண்டும் என்றெண்ணி, பல நாடுகளுக்கும் தனது தூதுவர்களை அனுப்பி பௌத்த தர்மத்தை பரப்ப விளைந்தான். இதன் விளைவாய் இலங்கைக்கு மஹிந்தரையும் அவருடன் தூதுக் குழுவினரையும் அனுப்பி வைத்தான்.

இதன் மூலமாக தேவநம்பிய தீசனும் அவனைச் சார்ந்தவர்களும் பௌத்தத்தைத் தழுவ அன்றிலிருந்து இலங்கையில் சிங்களரின் மதமாக பௌத்தம் தோற்றம் கண்டது. ஆயினும் தமிழர்களிலும் பௌத்தத்தை ஆதரித்து வந்தவர்கள் இருந்தனர் என்பதையும் வரலாற்றில் மறுக்க முடியாது.

மகாவம்சம்

 மதங்கள் மனிதருக்கு அன்பையும் அறநெறியையும் போதிக்கின்றன. மனிதனின் ஆழ்மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களால் அவன் மனோநிலையை மகோன்னதமாக்கக் கூடிய சக்தி அந்நெறிகளுக்குண்டு. ஒவ்வொரு மதங்களும் தத்தமது மார்க்கங்களைக் கூறும் நூல்களின் வழிநடக்கின்றன. பௌத்தர்களின் தம்மபோதமும் கௌதம புத்தரின் போதனைகளான அன்பையும் அறத்தையும் வலியுறித்தி நிற்க, அதையும் மேவி சிறிலங்காவில் பெரும்பான்மை சிங்களரிடையே ஆதிக்கும் செலுத்தும் கருவியாக மகாவம்சம் என்கிற சிங்கள வரலாற்று ஏடு அமைந்துவிட்டது என்பது தமிழரின் துன்பமே.

மகாவம்சம், சிங்கள மக்களுக்கு அறநெறிகளைப் போதிக்கும் மறைநூலோ அல்லது சிங்கள இலக்கணத்தின் வரைகளைக் கூறும் காப்பியமோ அல்லது இலக்கியநயம் சொட்டும் கவித்துவம் கொண்ட நவீனமோ கிடையாது. இலங்கைத் தீவில் சிங்கள மக்களின் வருகையையும் இருப்பையும் முன்னிறுத்தி முழு இலங்கையும் சிங்கள இனத்துக்கே உரியதென வரலாற்றுத் திரிபுகளையும் அப்பட்டமான பொய்களையும் சாட்சிகளாக்கி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சிங்கள தேரர்களால் தேரவாத பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி பாளி மொழியில் எழுதப்பட்ட பதிவியல் என்பதே உண்மை.

முழு இலங்கைத் தீவும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று கட்டியம் கூறும் மகாவம்சம், பௌத்த போதனைகளைக் கைக்கொள்ளாத தமிழர்கள் அழிக்கப்படுவதில் தவறில்லை என்பதை வலியுறுத்தி சொல்கிறது.

ஈழத்தில் தமிழராட்சி

இலங்கையில் தமிழ் இனத்துடன் தொடர்பான வரலாற்றுச் சின்னங்கள் மிக முற்பட்ட காலத்திலிருந்தே காணப்படுகின்றன. இவற்றைத் தமிழ் மக்கள் சரியான முறையில் அறியாதிருக்கும் நிலையில், தமிழ் இனத்தைப் பல வகையாலும் தாக்கிவரும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தமிழருடைய வரலாற்றுச் சின்னங்களை மறைத்தும், மறுத்தும், அழித்தும் வருகின்றது. இச் செயல்களுக்கு ஓர் உதாரணம்தான் 2200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த தமிழ் மன்னன் ஒருவனின் சமாதியை, எல்லாளப் பெருமன்னனின் சமாதியை, இன்று துட்டகைமுனுவின் சமாதி என்று கூறுவது.

பண்டைய ஈழத்தை தமிழரும் சிங்களரும் மாறி மாறி ஆட்சி செய்தனர் என்பதை சிங்கள மகாவம்சம் ஏற்றுக் கொள்கிறது. கி.மு 4ஆம் நூற்றாண்டளவில், தேவநம்பிய தீசனுக்குப் பின் அவனது சகோதரன் சூரதீசன் காலத்தில், சேனன், குத்திகன் எனும் தமிழர்களின் ஆட்சி பற்றி குறிப்பிடும் மகாவம்சம் அவர்கள் சூரதீசனைத் தோற்கடித்து அனுராதபுரத்தை தலை நகராக்கி 22 ஆண்டுகள் ஆண்டனர் எனத் தெரிவிக்கிறது. அவ்வாறே, மற்றொரு தமிழ் மன்னனான எல்லாளனைப் பற்றியும் குறிப்பிடுகிறது.

எல்லாள மன்னன்

எல்லாளன், 205 கி.மு இருந்து 161 கி.மு வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு முழு இலங்கையையும் ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான். இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக மாகவம்சமே குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ இளவரசனாவான். இதற்கான ஆதாரங்கள் தமிழ் நாட்டு வரலாற்றில் கிடைக்கப் பெறாததால், எல்லாளன் உத்தர தேசம் என அழைக்கப்பட்ட இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த ஒருவனாக இருக்கக்கூடுமெனச் சிலர் கூறுகிறார்கள். கி.மு 205 ஆம் ஆண்டளவில் அனுராதபுரத்தைக் கைப்பற்றிய எல்லாளன் 44 ஆண்டுகள் சிறப்பானதும் நீதியானதுமான ஆட்சியை வழங்கினான். எல்லாளனைப் பற்றி மகாவம்சம் குறிப்பிடுகையில்;

சோழ நாட்டின் தூமிலாவில் இருந்த நற்குணமும் நேர்மையும் மிகுந்த மன்னர் இலாரா என்பவர் அசீலவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் நண்பர்களையும் பகைவர்களையும் ஒரே விதமாக நடத்திவந்த நற்குணம் பெற்றிருந்தவர்.

அவருடைய படுக்கையறையின் தலை மாட்டுப் பகுதியில் ஒரு மணி கட்டப் பட்டிருந்தது. அதன் கயிறு வெளியில் தொங்கும். அவரிடம் எவருக்கு குறைகள் கூற விருப்பமோ அவர்கள் வந்து மணி அடித்து அவரை எழுப்பிக் கூறலாம். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். ஒரு முறை அவருடைய மகன் திஸ்ஸா ஏரிக்கு வண்டியில் சென்று கொண்டிருந்த போது தவறுதலாக ஒரு பசு மாட்டின் கன்றின் மீது அந்த வண்டி ஏறி அதைக் கொன்று விட அந்தப் பசு வந்து மணி அடித்து மன்னனை எழுப்பி அவனைத் தன்னுடைய கன்று இறந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது. அதை கண்ட மன்னன் தன்னுடைய மகன் மீது அதே வண்டியை ஏற்றிக் கொன்றாராம். ( மகாவம்சம்: 21ஆம் அத்தியாயம், ஐந்து மன்னர்கள் )

இலங்கையில் தென்பகுதியான உருகுணை உட்பட்ட முழு நாடுமே எல்லாளனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. எல்லாளன் ஒரு இந்துவாக இருந்தபோதிலும், பெரும்பான்மைச் சமயமாக இருந்த பௌத்த சமயத்துக்கு மிகுந்த மதிப்பு வழங்கினான் என்பது மகாவம்சம் எடுத்துக் கூறும் விடயங்களினூடாகவே அறிய முடிகிறது.

வேறெந்த வகையிலும் எல்லாளன்மீது குற்றம் காண முடியாத மகாவம்சம், அவன் இந்துவாக இருந்ததால் அவன் நல்லாட்சியைக் கொடுக்க முடியாது என்ற கருத்தையும் வலியுறுத்த முயல்கிறது.எல்லாளன் வயது முதிர்ந்த பருவத்தில் இருந்தபோது, சிங்கள இளவரசனான துட்ட காமினி, எல்லாளனுடன் தனியாகப் போர் புரிந்து அவனைத் தோற்கடித்தான்.

துட்டகாமினியின் பிறப்பைக் குறித்து கூறும் மகாவம்சம், அவளுக்குப் பிறக்க இருக்கும் குழந்தை தமிழர்களை அழித்து ஒன்றுபட்ட சமஸ்தானத்தை ஆண்டவாறு புத்த சமயத்தை வெகுவாக வளர்ப்பான் என்கிறது. அவ்வாறே துட்டகாமினி வளர்ந்த போது அவனது தந்தை தமிழர்களிடம் சண்டை போடா மாட்டோம் என உறுதி மொழி தருமாறு கேட்டதற்கு அதை மறுத்து காலை மடக்கி சுருட்டி வைத்தபடி படுத்துவிட்டான். இதையிட்டு அவன் தன் தாயிடம், தமிழர்கள் கங்கையைத் தாண்டி ஆட்சி செய்து கொண்டிருக்கையில் இங்கே கோதா கடலின் அருகில் மட்டுமே ஆட்சியிலுள்ள நான் எப்படிக் கால்களை நீடிப் படுக்க முடியும் என விசனப்பட்டுக் கொண்டாதாக உரைக்கிறது. இவ்வாறு தமிழர்களை அழிப்பதில் நோக்காகக் கொண்ட அன்றைய சிங்களத்தின் மனோபாவத்தை மகாவம்சம் அதின் பல அத்தியாயங்களில் காட்டுகிறது.

எல்லாளனுடன் போர் புரிந்து ஆட்சியை கைப்பற்றிய துட்டகாமினி போரின் முடிவில் பல்லாயிரக்கணக்கானோர் இறப்புக்கு தான் காரணனாகி விட்டேன் எனக் கவலையுற்றிருக்கும் போது பௌத்த துறவிகள் அவனிடம், „இந்த சம்பவத்தினால் சொர்க்கத்திற்குப் போக வேண்டிய உன் வழி அடைபட்டுப் போகவில்லை மன்னா, நீ கொன்றது ஒன்றரை மனிதரைத் தான். ஒருவர் சொர்க்கத்திற்கு செல்ல விரும்பி உன்னிடம் வந்தார் இரண்டாமவர் ஐந்து போதனைகளை மட்டுமே கற்றறிந்தவர். அவர்களைத் தவிர மற்ற அனைவருமே மூடர்கள். விலங்குகளைப் போன்றவர்கள். உன்னுடைய இந்த நற் செயலினால் புத்த சமயம் பன்மடங்கு பலப்பட்டு உள்ளது. யுத்த தர்மத்தைப் பயன்படுத்தி தீயவர்களை அழித்தாய்.. (மகாவம்சம் 25 ஆம் அத்தியாயம் தத்தகாமினி வெற்றி பெற்றார்) எனக் கூறுகிறார்கள்.

இதிலிருந்து, இலங்கைத் தீவில் தமிழர்களுக்கெதிரான சிங்களரின் இன அழிப்பு நடவடிக்கைகள் காலம் காலமாக இடம்பெற்று வருகின்றது என்பதை மகாவம்சம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதாவது இலங்கை முற்று முழுதான பௌத்த சிங்கள நாடென்றும் இங்கு பெளத்த சிங்களரல்லாதோர் அழிக்கப்படுவது தவறில்லையென்றும் கூறுகிறது. உண்மையான இலங்கைவாசி சிங்களவர் என்பதும்; உண்மையான சிங்களவர் பௌத்தர் என்ற தகவல் குழப்பமும் தர்மபாலாவின் மஹாவம்ச அனர்த்தன வாசிப்பால்தான் ஏற்பட்டவை. சிங்களவர்களின் தேசிய உணர்வைத் தூண்டிவிட இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் சிங்கள அரசனான துட்டகைமுணு தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்ததை ஆரிய சிங்கள பௌத்தத்திற்குக் கிடைத்த வெற்றி என்று தர்மபாலா மறு உருக்கோலம் செய்தார்.இதுதான் பின்னால் ‘மஹாவம்ச மனநிலை’, ‘மஹாவம்ச மன அமைப்பு’ என்று இன அரசியல் கூறுமுறையில் புகுத்தப்பட்டது.இலங்கையின்

அரசியல் திசைமாற்றத்திற்கு இதன் பங்கு மிகக் கணிசமானது.

இவற்றின் வெளிப்பாடாகவே, சிங்கள மக்களும் ஈழத்தீவில் ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் மீதான வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் தெளிவு. நேற்றைய(28-01-2009) பத்திரிகையாளர் சந்திப்பில் மகிந்த தெரிவித்த கருத்தையும் இங்கு கவனிக்கலாம், அதாவது இலங்கையின் பெரும்பான்மை இன மக்கள் (சிங்களர்கள்) ஒப்புதல் அளித்தால் மட்டுமே தமிழர்களுக்கு எந்தவொரு தீர்வும் அளிக்க முடியும். இல்லாவிட்டால், அதை செயல்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார். தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க மகாவம்ச மனநிலையில் சிக்குண்டிருக்கும் சிங்களவர்கள் எவ்வளவு தூரம் முன்வருவார்கள் என்பதும் கேள்வியே.

இதையே எமது தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் 2005 ஆம் ஆண்டின் மாவீரர் தின உரையில், மகாவம்ச மனநிலையில் சிக்குண்டிருக்கும் சிங்கள ஆட்சியாளரிடம் தமிழருக்கேதுவான மாற்றங்கள் எதுவும் நிகழ வாய்ப்பில்லை என்பதை குறிப்பிட்டிருந்தார். தீர்க்கதரிசனமாக அன்று தலைவர் அவர்கள் கூறியது இன்றுவரை தொடர்கிறது.. இனியும் தொடரும்.. தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு செயற்பட்டு எமது விடுதலையை நாமே வென்றெடுக்க முடியுமே தவிர சிங்களத்திடம் மாற்றங்களை எதிர்பார்த்து நிற்பதில் பயனில்லை.இன்னும் சில விடயங்களுடன் மீண்டும் தமிழீழ தாயகத்திலிருந்து சந்திக்கும் வரை..

 

 

 

Share.

Comments are closed.