மகாவம்ச மனோநிலையில் சிங்களரும் ஈழத்தீவில் தமிழரும் – 03

Google+ Pinterest LinkedIn Tumblr +

ஈழத்தீவில் விஜயனின் வருகையும் பௌத்த சமய பரவலும் ஈழத்தின் பூர்வீகக் குடிகளின் இருப்பைக் கேள்விக்குறியாக்கிய நிலையில் முழு இலங்கையும் பௌத்த பூமியாக்கப் பட வேண்டும் என்ற கோட்பாட்டுடன் தமிழின அழிப்பு அரங்கேற்றப்பட்ட அரங்கிலே எல்லாள – துட்டகைமுனு சமர் பௌத்த சிங்களத்தின் வெற்றியாக முடிவடைகிறது.போரின் முடிவில் சிங்களத்தின் வெற்றி பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. எல்லாளனையும் மற்றும் 32 தமிழ் குறு நில மன்னர்களையும் வென்றதன் மூலம் பண்டைய ஈழத்தில் தமிழர்களுக்கெதிரான மாபெரும் மனிதப் பேரவலத்தை நிகழ்த்தி தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது சிங்களம்.

சிங்களம் உணரத் தவறிய பௌத்த போதனைகள்

அனைத்துத் தமிழர்களையும் கொன்றுகுவித்த பின் யுத்த பூமியிலிருந்து அரண்மனைக்கு திரும்பினார் மன்னர்.(மகாவம்சம் 25 ஆம் அத்தியாயம்) . மாபெரும் மன்னன் தான் வெற்றி பெற்ற இடங்களை ஒன்றமைத்து அதில் சில இடங்களை தனக்கு வெற்றி கிடைக்க வழி வகுத்த படை வீரர்களுக்கு அவர்களுடைய தகுதிகளுக்கு ஏற்ப பரிசாக வழங்கினார்.தேரபுட்ட பாய தனக்கு கொடுத்த இடத்தை ஏற்க மறுத்தார். ‚ „இது எதற்காக இன்னும் யுத்தம் முடியவில்லையே“ என்று கூறி அதைப் பெற்றுக் கொள்ள மறுத்தார். „யுத்தமா அனைத்துப் பகுதிகளையும் இணைத்து ஒரு முழு இராச்சியமாக்கி விட்டேனே இனி எங்கே யுத்தம் தொடர உள்ளது“ எனக் கேட்ட மன்னனிடம் „என் மன எதிரிகளான ஆசை காமம் குரோதம் ஆகியவற்றுடன் போராட்டத்தில் இருக்கிறேன்“ என்றார் தேரபுட்டபாய. எத்தனை கூறியும் இராச்சியத்தை ஏற்க மறுத்தவர் மன்னனின் அனுமதியுடன் பப்பஜ்ஜா உபதேசம் பெற்று துறவியாகி ஐநூறு புத்த பிக்குகளுடன் வாழத் தொடங்கினார்.(மகாவம்சம் 26 ஆம் அத்தியாயம் மாரிகவட்டி விகாரை )

பௌத்த சிங்கள பிரதியாக விளங்கும் மகாவம்சம் மறைவடக்கமாக மானுட விடுதலையை பற்றிக் கூறும் இவ் உரையின் ஆழத்தை அன்று மட்டுமல்ல இன்றும் உணர மறுக்கிறது சிங்களம். போரின் வெற்றி மட்டுமே மானிட விடுதலை என்பதை உருவகித்து நிற்கும் சிங்களம் மானிட மனங்களை வெல்ல முடியாது தோல்வியையே சந்தித்து நிற்கிறது. பல்வேறு சூழ்ச்சிகளால் தமிழர் சேனையை வென்றதைக் கூறும் மகாவம்சம் மானிட அறத்தை சிங்களம் வெல்ல முடியாமலிருப்பதை கோடிட்டு காட்டவும் தவறவில்லை.

நிற்க, மறப்போரிலும் அறம் வழுவாதிருந்த பண்டைய தமிழர் போர்முறை பற்றி தொல்காப்பியப் புறத்திணையியல் விளக்கிக் கூறும் விதத்தை இங்கு பகிர்வது சாலப் பொருத்தமே. போர் பொருத நிற்கும் மன்னன் ஆநிரைகளையும் அந்தணரையும் பெண்டிரையும் பிணியாளரையும் குழந்தைகளையும் மகப்பேறு இல்லாதவர்களையும் அப்புறப்படுத்தல் கருதி பறை அறிவிப்பான்.

பறை அறைவதன் கருத்தை உணராத ஆநிரைகளை தன் ஆட்களை ஏவிக் கவரச் செய்வான். அவ்வீரர்கள் ஆநிரைகளைக் கவர்தலும் ஆநிரைகளுக்கு உரியவர் அவற்றை மீட்டலும் வெட்சி எனப்படும்.

அரசன் வஞ்சி சூடிப் பகைவர் நாட்டில் படையெடுத்துச் செல்லலும் படைஎடுக்கப்பட்டவன் எதிர் நின்று தாக்குதலும் வஞ்சி எனப்படும்.

நகரத்தின் புறமதிலை முற்றுகையிடுதலும் முற்றுகையிடப்பட்ட அரசன் மதிலைக் காத்தலும் நொச்சி எனப்படும்.

இருபெரும் வேந்தரும் களங் குறித்துச் செய்யும் கடும்போர் தும்பை எனப்படும்.

போரில் வெற்றி பெறுதல் வாகை எனப்படும்.

போரில் வெற்றி பெற்றோர் வாகைப் பூமாலை சூடுவர். ஒவ்வோர் போர்முறையிலும் உள்ள படிகள் துறைகள் எனப்படும். இவ்வாறு போர் செய்யும் போது ,சோர்ந்த மனம் உடையவனையும் மகப்பெறாதோனையும் ,முன் வைத்த அடியைப் பின் வைத்தவனையும், பெண் பெயர் கொண்டவனையும் ,படை இழந்தவனையும் ,ஒத்த படை எடாதோனையும் கொல்லாது விடுதலும் கூறிப் பொருதலும் உண்டு என்பதை தொல்காப்பியர் உரையால் அறியலாம். இப்போர் இலக்கணங்கொண்டே சங்கத் தமிழரின் போர்த் திறனையும் அறியலாம்.

தன்னை இந்நாள் துட்டகைமுனு எனப் பிரகடனப்படுத்தி எதுவித யுத்த தர்மமுமின்றி மாபெரும் வன்னிப் போர் அரங்கிலே பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று அழித்து தமிழர்களின் சொத்துக்கள் வளங்களைச் சூறையாடி இலட்சக்கணக்கான தமிழர்களைச் சிறைப்பிடித்து நிற்கும் இராஜபக்சேயிடமும் சிங்கள அரசாங்கத்திடமும் எதுவித போரியல் அறத்தையோ பௌத்த தர்மத்தையோ எதிர்நோக்க முடியாது. இன்னமும் ஈழத்தீவு பௌத்த சிங்களருக்கே உரியது என்ற மகாவம்ச மனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இவர்களால் தமிழர்களுக்கு நீதியான தீர்வைத் தரமுடியாது என்பதை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் அன்றே சொன்னார்.

இற்றைவரை சிங்களம் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள மறுக்கிறது. சிங்களத்தின் மகாவம்ச உரையின் படி ஈழத்தீவை அது ஒரு போதும் தனிச் சிங்கள இன நாடாகவோ தனிப் பௌத்த நாடாகவோ குறிப்பிடவில்லை. ஈழத்தீவின் அரசியல் அதிகாரங்களில் சிங்கள ஆட்சியாளர்களின் காலங்களில் கூட தொடர்ச்சியாக தமிழர்களின் செல்வாக்குகள் பரம்பிக் காணப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. அத்துடன் எல்லாளனது காலத்துடன் மட்டும் ஈழத்தில் தமிழரின் ஆட்சி முடியவில்லை, அதன் பின்னரும் தொடர்ச்சியாக பல தடவைகள் தமிழரால் ஈழத்தீவு ஆட்சி செய்யப்பட்டு வந்திருப்பதையும் மகாவம்சம் சுட்டிக் காட்டத்தவறவில்லை.

இதன் ஒருபடியாக கி.மு முதலாம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனப்படும் ஏழு பிரதானிகளின் ஆட்சி பற்றி விபரிக்கும் மகாவம்சம் இவர்களால் முழு இலங்கையும் கால் நூற்றாண்டளவுக்கு ஆட்சி செய்யப்பட்டதெனக் கூறுகிறது. புலகத்தன், பாகியன், பனையமாறன், பிளையமாறன்,தாடிகன் என்போரே மாறிமாறி ஆட்சி செய்தனர் என்கிறது மகாவம்சம். 

கி பி இரண்டாம் நூற்றண்டளவில், தமிழகத்தில் சோழப் பேரரசு திருமாவளவன் தலைமையில் உருக்கொள்கின்றது. தனது உள்நாட்டுக் கலகங்களை அடக்கி சோழ அரியணையைப் பெற்று வடக்கே வச்சிரம், அவந்தி, மகதம் ஆகிய ஆரிய நாடுகளை வென்று இமயம் வரை சென்று புலிக்கொடி நாட்டிய சோழப் பேரரசன் கரிகாலன் தெற்கே ஈழத்தீவையும் ஆட்கொண்டான். வெண்ணிப் போரில் சேர பாண்டியர் அவர்களுடன் சேர்ந்து நின்ற வேளிர்களென பெரும் கூட்டாக நின்ற எதிரிகளை வென்ற கரிகாலனின் போர்த்திறம் பற்றிப் பாடுகிறார் வெண்ணிக்குயத்தியார் எனும் புறநானூற்றுப் புலவர். வாகைப் பெருந்தலையில் ஒன்பது குறுநில மன்னர்களை தோற்கடித்த இவன் படைப்பலத்தை நன்கே கூறுகிறது பட்டினப்பாலை. ஈழத்தீவில், வசபன் ( கி பி 65 – கி பி 109 ) எனும் மன்னனின் மகனான வங்கநாசிக தீசன் காலத்தில் கரிகாற் சோழனின் படையெடுப்பு நிகழ்ந்ததாகக் கூறும் வரலாற்றாளர், கரிகாற் சோழன் முழு ஈழத்தீவையும் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்து ஆயிரக்கணக்கான சிங்களக் கைதிகளையும் ஈழத்திலிருந்து தமிழகம் கொண்டு சென்றானென கூறுகின்றனர்.

 

இவ்வாறு காலங்காலமாக ஈழத்தீவில் தமிழரின் அதிகாரங்கள் கோலோச்சியிருந்தமையை வரலாறு கூறும். விஜயனின் வருகையுடன் சிங்களக் குடிகள் ஈழத்தீவின் வடமத்திய, தெற்கு பிரதேசங்களில் தம் குடியேற்றங்களை நிறுவி, தமிழரின் பூர்வீக வரலாற்றை அழித்து ஒழித்து ஈழம் முழுமையையும் தமக்கேயுரிய சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதிலேயே முனைப்பைக் காட்டினர். ஆயினும் கால ஓட்டத்தில் ஈழத்தீவில், தமிழரின் செல்வாக்கும் தமிழ் இராச்சியங்களும் சிங்களத்தின் கனவைச் சிதைத்துக் கொண்டிருந்தன. இன்னும் சில விடயங்களுடன் மீண்டும் தமிழீழ தாயகத்திலிருந்து சந்திக்கும்வரை…

Share.

Comments are closed.