மகாவம்ச மனோநிலையில் சிங்களரும் ஈழத்தீவில் தமிழரும் – 04

Google+ Pinterest LinkedIn Tumblr +

விஜயனின் வருகையுடன் ஈழத்தீவில் ஆரம்பமான சிங்களக் குடியேற்றங்கள் தீவை ஆக்கிரமித்துக் கொள்ள, சிங்கள பௌத்தருக்கே ஈழம் முழுமையும் உரிமை என்கின்ற கோட்பாட்டோடு சிங்களரிடையே வளர்க்கப்பட்ட பௌத்த தேரவாத மகாவம்ச சிந்தனைகள் ஈழத்தின் அமைதியைக் குலைத்த முக்கிய காரணிகளாகின. இக்கோட்பாடுகளின் பிறிதொரு தாக்கமாக, பௌத்தத்தின் மற்றொரு பிரிவான மகாயான பிரிவும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

தேரவாத – மகாயான பிரிவினைகள்

புத்தரின் பரிநிர்வாணத்தின் பின் வைசாலியில் நடைபெற்ற இரண்டாம் பௌத்தக்கழகத்தின் மாநாட்டின் போது உருவான பிளவு மாநாட்டின் முடிவையேற்காத கிழக்குப் பகுதிப் பிக்குகள் தம்மை மகாசங்கிக பிரிவாக அமைத்துக் கொள்ளவும் மாநாட்டின் முடிவையேற்ற மேற்குப் பகுதிப் பிக்குகள் வைதீக நெறியான தேரவாதப் பிரிவாக அமைத்துக் கொள்ளவும் வழிகோலியது. இதன் பின்னரும் அசோகனது காலத்தில் பரவிய பௌத்தத்தின் கருத்துக்கள் பல்வேறு இன மக்களாலும் கைக் கொள்ளப்பட்டதால் புதிய பல மாற்றங்களுக்குட்பட்டு பௌத்தத்தில் மகாயான எனும் பிரிவு உருவானது. தேரவாதம் உட்பட மற்றைய அனைத்து பௌத்த பிரிவுகளையும் „ஸ்ராவகயான“ எனும் பொதுப் பெயரில் மகாயானத்தவர் அடக்குவர்.

கி.பி இரண்டாம் நூற்றாண்டளவில் வட்டகாமினி மன்னனின் காலத்திலேயே சிங்களரிடையே மகாயானக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. அபயகிரி விகாரை இக்கருத்துக்களை வரவேற்றுக் கொள்ள ஈழத்தீவில் சிங்களரிடையே முதன்முதலில் பௌத்த சங்கத்தில் பேதம் ஏற்பட்டது. வொகாரிக தீசன் காலத்தில் இப்பிளவின் விளைவாக மகாயான பௌத்த பிரிவின் நூல்கள் யாவும் தீக்கிரையாக்கப்பட்டு தேரவாதமே உண்மையான பௌத்தம் எனும் முடிவு திணிக்கப்பட்டது. மீண்டும் கொடபாயன் ஆட்சிக் காலத்தில் மகாயான பௌத்தக் கருத்துகள் எழுந்த போது, தேரவாத பௌத்தத்தின் அடக்குமுறையால் அனைத்து மகாயானக் கோட்பாட்டு நூல்களும் எரிக்கப்பட்டு அபயகிரி விகாரைக் குருமார்கள் குறிசுடப்பட்டு நாடுகடத்தப்பட்டார்கள். இவர்களனைவரும் சோணாட்டின் காவிரிப்பூம் பட்டினத்தில், விகாரை ஒன்றில் அடைக்கலம் புகுந்தனர்.

மகாசேனன் அரசுக்கட்டிலேறிய கி.பி மூன்றாம் நூற்றாண்டளவில் மீண்டும் மகாயான பௌத்தம் தலை தூக்கியது. இம்முறை மகாசேனன் தேரவாதத்தை ஆதரித்த மகாவிகாரையினரைத் தண்டிக்க தேரவாத பௌத்தம் சரியத் தொடங்கியது. தேரவாதத்தின் மத்தியநிலையமாக நின்ற மகாவிகாரை அழிக்கப்பட்டது. தேரவாதப் பிக்குகள் தஞ்சம் தேடி பிற தேசங்களுக்கு தப்பி ஓடினர். அபயகிரி விகாரையும் மகாயான பௌத்த பிரிவும் இந்நிலையில் மேன்மையடையத் தொடங்கின. ஆயினும் காலவோட்டத்தில் மகாயான பிரிவுக்கெதிரான கருத்துக்கள் மகாசேனனது காலத்திலேயே வலுப்பெற மகாயான பிரிவைப் பரப்புவதில் முன்னின்ற சங்கமித்திரர் மற்றும் சொண எனும் அமைச்சன் உட்பட பல மகாயான பிரிவினர் தேரவாத பிரிவினரால் கொல்லப்பட்டு மீண்டும் சிங்களரிடையே தேரவாத பௌத்த கொள்கைகள் மேலோங்கின. மகாசேனன் காலத்து இந்நிலைமை மகாயான பௌத்தத்திற்கு மட்டுமல்ல திருக்கோணமலையில் கோணேச்சரத்தை அழித்து கொகர்ண விகாரையை அமைக்க முற்பட்டதன் மூலம் தமிழர்களுக்கெதிரானதான விளைவுகளையும் கொண்டுவந்தது.

இவ்வாறு சிங்களரிடையே கூட பௌத்த தேரவாத கருத்துக்களே விதைக்கப்பட்டு மாற்றுக் கருத்துக்கள் – கருத்தாளர்கள் அழிக்கப்பட்டனர். மீண்டும் மகாசேனனது காலத்திலேயே சிங்களரிடையே மீள உருவாக்கம் பெற்ற தேரவாத பௌத்தத்தின் எழுச்சியை குறிப்பிட்டு முடியும் மகாவம்சம் இறுதிவரை தேரவாத பௌத்த சிங்களத்தின் பிரதியாக தனது உள்ளடக்கத்தைக் கொண்டு நிற்கிறது.

தமிழர் படையெடுப்புகள்

தமிழகத்தில் கரிகாலன் தலைமையில் உருவாக்கம் பெற்ற சோழப் பேரரசு கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் வலுவிழக்கத் தொடங்கியது. அக்காலப் பகுதியில் இந்நிலையைத் தமக்குச் சாதகமாக்கி இனந்தெரியாத ஒரு குலத்தவர் தமிழகத்தை கைப்பற்றிக் கொண்டனர். இவர்கள் களப்பிரர் என்றும் களப்பாளர் என்றும் குறிப்பிடப்பட்டார்களேயன்றி

அவர்களைப் பற்றிய மேலதிக விபரங்கள் எதனையும் பிற்கால நூல்கள் குறிப்பிடவில்லை. இவர்களின் ஆட்சியில் பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் மேல்நிலை எய்தின. அக்காலத் தமிழ் நூல்களிற் பல அம்மதங்களைச் சேர்ந்த புலவர்களாலேயே பாடப்பட்டன. ஆயினும் இவர்களின் ஆட்சிக்காலத்தை தமிழகத்தில் சங்க காலத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒரு நீண்ட வரலாற்று இரவு என்றே குறிப்பிடுகின்றனர் அறிஞர்.
க்காலத்தில் வீழ்ச்சியடைந்த சோழர்கள் காவிரிக்கரையிலே தொடர்ந்து வாழ்ந்துவந்தார்கள் எனக் கல்வெட்டுகள் உரைக்கின்றன. இதன் காரணமாக 4 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களைச் சுற்றி நீண்டதோர் இருண்ட காலம் சூழந்து கொண்டது. இக்காலத்தில், கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும் என்ற நிலையில் இருந்தனர் என்றே கூறலாம். அக்காலப்பகுதியில் அவர்கள் தங்களுக்கென்று இரண்டாம் புகலிடத்தைத்தேடிக் கொண்டனர். பழைய நாட்டிலோ, தமக்கெதிராக ஏற்பட்ட, ஒவ்வொரு புயலுக்கும் வளைந்து கொடுத்து, தம் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். வெற்றிபெற்ற மன்னர்களுடன் தம் சந்ததியினருக்குத் திருமணங்கள் செய்து வைத்தும், அக்காலத்திய சமய இயக்கங்களை ஊக்குவித்தும், தம் அரசியல் செல்வாக்கை வளர்க்கப்பாடுபட்டனர்.

தமிழகத்தில் களப்பிரரின் ஆட்சிக்கலத்தில் தோன்றிய குழப்ப நிலையில் ஈழத்திற்கு ஒரு தமிழ்ப் படையெடுப்பு நிகழ்ந்தது.கி பி 430 இல் மகாநாமன் எனும் சிங்கள மன்னனுக்குப் பின் அவனது தமிழ் மனைவியொருத்தியின் மகனான செங்கோடன் என்பவன் அரசனான போது ஏற்பட்ட கலகத்தை அனுகூலமாக்கி பாண்டு என்பவன் தலைமையில் தமிழர் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்தது. இராஜாவலீ, பூஜாவலீ எனும் சிங்கள ஆதார நூல்கள் இவர்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடுகின்றன. இதனால் மீண்டும் ஈழத்தீவு முழுமையும் தமிழரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு பாண்டு மற்றும் பாரிந்தன், குட்டப்பாரிந்தன், திரீதரன், தாடியன், பீடியன் என ஆறு தமிழ் மன்னர்களால் தொடர்ச்சியாக கால் நூற்றாண்டளவுக்கு ஆளப்பட்டது. உருகுணைப் பிரதேசத்தில் பெறப்பட்ட கல்வெட்டுக்களிலிருந்து இவர்கள் பௌத்த விகாரைகளை ஆதரித்திருந்தனர் என்பதையும் அறியக்கூடியதாகவிருந்தது. கி பி 459 வரை நிலவிய தமிழர் ஆட்சி, மீண்டும் தாதுசேனன் எனும் சிங்கள மன்னன் மூலம் சிங்களரின் கைக்கு மாறியது.
 

 

ஈழத்தீவின் அரசியற் களம் காலத்துக்குக் காலம் இரு இனத்தவரிடமும் மாறி மாறி சாதக நிலைகளைத் தோற்றி அரசுக்கட்டிலைத் தக்கவைக்க ஏதுவாயிருந்ததேயன்றி விஜயனின் வருகைக்குப் பின் ஒருபோதும் தனி ஒரு இனமாக ஈழத்தீவை ஆட்கொள்ள இடமளிக்கவில்லை. ஆயினும் இற்றைவரை சிங்களம், ஈழம் முழுமையையும் பௌத்த சிங்கள நாடெனக் கூறிவருவது அப்பட்டமாக தமிழினத்தின் வரலாற்று ஆணிவேரை அழிப்பதற்கு சமானமானது. தமிழராகிய நாம் எம் முன்னோர் எமக்கு விட்டுச்சென்ற எமது பூர்வீக மண்ணில் சகல உரிமைகளுடனும் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்பதை ஒருபோதும் மறந்து விட முடியாது. எமது உரிமைகளை மறுத்து தரப்படும் சில சலுகைகளுக்காக அடிமைகளாக வாழ முடியாது என்பதையும் உணர்ந்து செயற்படுவோம். காலங்காலமாக ஈழத்தில் பறந்த புலிக்கொடி மீண்டும் பறக்குமென உறுதி பூணுவோம். எம் தாயக விடியலை நோக்கி நடப்போம். இன்னும் சில விடயங்களுடன் தமிழீழ தாயகத்திலிருந்து சந்திக்கும் வரை..
Share.

Comments are closed.