தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவிற்குப் பின்னரான புலிகளின் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது என லக்பிம பாதுகாப்பு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது யுத்த முடிவின் பின்னர் இழைக்கப்பட்ட தவறுகளைப் போன்று இலங்கையிலும் தவறிழைக்கப்படக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்கொலைப் போராளிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சரியான மதிப்பீடுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை எனவும், தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என உத்தரவாதங்களை வழங்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முக்கிய போராளிகள் கொல்லப்பட்ட போதிலும், யுத்தம் பூரணமாக முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான இலங்கைப் பாதுகாப்பு தொடர்பில் ஒர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது.
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை உருவாக்கியவர்கள் அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ள போதிலும், புலிகள் மீளவும் ஒன்றிணைந்து ஆயுதங்களை ஏந்த மாட்டார்கள் என்பதற்கு இதுவரையில் எவ்வித உத்தரவாதமும் வழங்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
செய்மதி தொலைபேசிகளின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வருவதாக புலனாய்வு பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்கொலைப் போராளிகளை யார் கட்டுப்படுத்தியது, அவர்களுக்கான கட்டளைகளை யார் வழங்கியது என்பது சரியாக தெரிந்து கொள்ளும் வரையில் தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்களை மறுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.