
அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமான முறையில் பிரவேசிக்க முயன்ற போது அவுஸ்திரேலிய கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட 78 இலங்கையர்களும் இந்தோனேசியக் கடலில் கடந்த 19 நாட்களாக அவுஸ்திரேலியாவின் சுங்கக் கப்பலான “ஒசியானிக் வைகிங்” இல் உள்ளனர்.
அவர்கள் அரசியற் தஞ்சம் கிடைக்கும் வரை கப்பலை விட்டு இறங்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தால் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இடையில் இராஜதந்திர நெருக்கடி கூட ஏற்பட்டுள்ளது. இந்த அகதிகள் 78 பேர் சம்பந்தமாக அவுஸ்திரேலியா 24 மணித்தியாலங்களுக்கு இடையில் தீர்வு காணவேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசுக்கு இந்தோனேசியா நேற்று முன்தினம் காலக்கெடு விதித்துள்ளது.
இந்த நிலையிலேயே ஐ.நா சபை இலங்கையர்கள் 78 பேரினதும் அரசியற் தஞ்சக் கோரிக்கைகள் வெற்றிபெற வேண்டுமானால் அவர்கள் முதலில் கரையேற வேண்டும் என்று நேற்று ஆலோசனை கூறியுள்ளது. ஐ.நா சபையின் ஆசிய பசுபிக் வலயத்துக்கான பிரதிநிதி ரிச்சர்ட் ரொவ்லே இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு:
இவர்கள் அரசியற் தஞ்சம் பெற வேண்டும் என்பதில் பற்றுறுதி இருந்தால் முதலில் கப்பலை விட்டு இறங்கி வரவேண்டும். அதன் பின் முறைப்படியான சில நடவடிக்கைகளை அரசியற் தஞ்சம் பெறுவதற்காக மேற்கொள்ள வேண்டும். இவர்கள் அரசியல் தஞ்சம் பெறுவதற்கு அருகதையுடையவர்களாவர் என்றார்.