தமிழகத்தில் இருந்து நாடுதிரும்பும் ஈழத்தமிழ் அகதிகளை கொழும்பு விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யும் நடவடிக்கையில் சிறீலங்காப்படை புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகத்தின் நூற்றுக்கு மேற்பட்ட முகாம்களில் ஒரு இலட்சம்வரையான ஈழத்தமிழ்மக்கள் வாழ்கின்றார்கள்.
இம்மக்கள் ஒருவழி கடவுச்சீட்டுடன் நாடுதிரும்புகின்றார்கள். இவ்வாறு நாடுதிரும்பும் ஈழத்தமிழர்களை விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தும் சிறீலங்காப்படைபுலனாய்வாளர்கள் அவர்களை கைது செய்கின்றார்கள்.
இவ்வாறு தமிழகத்தில் இருந்துவரும் ஈழத்தமிழர்களை கண்காணிப்பதற்காக சிறீலங்காப்படையின் சிறப்பு புலனாய்வு பிரிவினர் கொழும்பு விமான நிலையத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகத்தில் முகாம்களில் வாழும் ஈழத்தமிழ்மக்கள் நாடுசெல்ல கோரிக்கை விடுத்து பின்பு கியூப்பிரிவு காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர் அனுமதிவழங்கப்படுகின்றது. இவ்வாறு நாடுதிரும்புவதற்கு தமிழகத்தில் உள்ளஅகதிகளில் பெரும்பாலானவர்கள் விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்நிலையில் விமானம் மூலம் வரும் ஈழத்தமிழர்களை கொழும்பு விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளமையினால் மக்கள் அச்சமடைந்துள்ளார்கள். இதேவேளை இந்திய அரசின் அனுமதி இன்றி படகுகள் ஊடாகவும் மக்கள் நாடு திரும்புகின்றார்கள். இவ்வாறு அண்மையில் ஆறுபேர் நெடுத்தீவுக்கருகில் சென்றடைந்த வேளை இவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். கடந்த வாரங்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட திருகோணமலையினை சேர்ந்த மக்கள் ஒரு வழி பயணச்சீட்டுடன் தமிழகத்தில் இருந்து நாடுதிரும்பியுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.