தமிழீழ கொள்கையினை ஆதரித்து செயற்பட தமிழர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்க கூடாது. மேலும் புலிகளின் தடையினை நீக்க விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத ஒழிப்பு தடுப்புச் சட்டமூலம் நேற்று முன்தினம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ், விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிந்துபோன பின்னரும் ஏன் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் அதனை வைத்திருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் டேவிட் ஹன்சன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கீத் வாஸ் உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:
பிரிட்டிஷ் அரசு தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலைத் தொடர்ந்து பரிசீலிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட விடயம் குறித்து அனைவரும் அறிவோம். அனைவரையும் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் இயக்கம் அற்றுப்போய் விட்டது. இலங்கை அரசே இது குறித்து நம்பிக்கையாகவுள்ளது.
இப்படியான சூழ்நிலையில் அந்த இயக்கத்தைத் தொடர்ந்து ஏன் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் பிரிட்டன் வைத்திருக்க வேண்டும்? விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால் அதனுடன் தொடர்பில்லாத அமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது.
இவ்வாறான தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் கூட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
இதற்குப் பதிலளித்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் குறிப்பிட்டவை வருமாறு:
பிரிட்டனில் பயங்கரவாத தடைச் சட் டம் கொண்டு வரப்பட்ட 2000ஆம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கம் இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டிலிருந்து அந்த அமைப்பு தமிழர் தாயகத்தை உருவாக்கும் தனது முயற்சிக்காகப் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது. கொள்கையை ஆதரிக்கும் உரிமை உண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்குவது சட்டவிரோதமானது என்ற போதிலும் தமிழ் சமூகத்துக்கு இந்தக் கொள்கையை ஆதரிப்பதற்கான உரிமை உள்ளது. இந்த விடயம் தொடர்பாகத் தமது கருத்துக்களை தெரியப்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு.
பிரிட்டனுக்கு கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவை குறித்த நீண்ட பாரம்பரியமுள்ளது. மேலும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிப்பவர்கள் இதனை நாடாளுமன்ற சதுக்கத்தில் வெளிப்படுத்த அனுமதியளிக்கப்படுவது அவசியமானது. தடைசெய்யப்பட்ட அமைப்புகளைத் தனிநபர்கள் ஆதரவளித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் நாடாளுமன்ற சதுக்கத்தில் தனி நபர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலை வைத்துள்ளோம். விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பாக உள்துறை அமைச்சர் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவார். மேலும் தடைகளை அகற்றுவதற்கும் அவரிடம் விண்ணப்பிக்கலாம் என்றார்.