இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து கவனத்தில் எடுக்காமல் விட்டு அதன் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் எடுக்க வேண்டும் என்றும் இலங்கையுடனான உறவுகளைப் பலப்படுத்த வேண்டும் எனவும் கடந்த திங்கட்கிழமை அமெரிக்க செனட் சபை தனது வெளிநாட்டு உறவுகள் குறித்த அறிக்கையில் கூறியிருந்தது. இந்த அறிக்கையானது “நம்பவே முடியாத அளவுக்கு மட்டமானதாக உள்ளது” என மனித உரிமைகள் அமைப்புகள் பலத்த பதிலடி கொடுத்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள நபர்களுக்கு இலங்கையைப்பற்றி எதுவித அறிவுமே கிடையாது எனவும் மனித உரிமைகள் அமைப்புகள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகளைக் கடைப்பிடிக்காத இழிவான அல்லது தமது அதிகாரத்துக்கு கீழேயே அனைத்தும் இருக்கவேண்டும் என எண்ணும் சீனா, பர்மா, ஈரான், சூடான் மற்றும் சிரியா போன்ற நாடுகளுடன் ராஜாங்க உறவுகளை ஒபாமா கொள்கை வளர்ப்பதாக பல செயற்பாட்டாளர்களிடையே கவலையையும் இந்த அறிக்கை வளர்த்து வருவதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
மேற்படி செனட் அறிக்கை குறித்து மனித உரிமைகள் சேவையாளர்கள் கருத்துக் கூறுகையில், இலங்கை அரசாங்கம் புரிந்த மனித உரிமைகள் மீறல்களை இந்த அறிக்கை மூடிமறைத்துள்ளதாகக் கூறியுள்ளனர். மனித உரிமைகள் கண்காணிப்பக ஆசிய இயக்குனர் பிரட் அடம்ஸ் கூறும்போது, இலங்கையைப் பற்றித் தெரியாத எழுத்தாளர்களால் அந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது, இலங்கையில் இப்போதும் தொடர்ந்துவரும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சிக்கல்களைச் சிறிய விடயதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.
இல்லினொய்ஸ் சட்டக்கல்லூரி பேராசிரியர் பிரான்சிஸ் பொய்லி, இந்த அறிக்கை ஒரு நகைச்சுவை என்றும் புத்திசுவாதீனமற்றவர்களின் மோசடி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மனித உரிமை அமைப்புகள் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுக்க முனைந்தபோது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் 7000-20000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறி கடனைத் தடைசெய்ய முனைந்த அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் கடைசியில் தோல்வியையே சந்தித்த விடயம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.