சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற “தமிழ் இளையோர் அமைப்பின் 20 வது ஆண்டு விழா”
தாயகத்திலும் புலத்திலும் இயங்கிய மாணவர் அமைப்பு, தூரநோக்கு பார்வையின் அடிப்படையில் 2004ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் “தமிழ் இளையோர் அமைப்பு” என மாற்றப்பட்டு, பல புலம்பெயர் நாடுகளில் தனது செயற்பாட்டை ஆரம்பித்தது.
“தமிழ்த் தேசியத்தைக் கட்டி வளர்ப்பதற்கும் புலத்தில் வாழும் தமிழ் இளையோரின் சிறந்த எதிர்கால வாழ்விற்கும் உழைப்பது” என்ற உயரிய நோக்குடன் கடந்த 20 ஆண்டுகளாக இளையோர் அமைப்பு தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து வருகின்றது. இன்றைய காலத்துக்கேற்ப அரசியல் செயற்பாடுகளினூடாக எம் இனம் எதிர்கொண்டுவரும் இன அழிப்புக்கு எதிராகவும் சர்வதேச முன்னிலையில் நீதிக்காகவும் போராடி வருகிறது.
சுவிட்சர்லாந்தில் தமிழ் இளையோர் அமைப்பு கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இந்த காலகட்டத்தில் அரசியல், விளையாட்டு, கலை, கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் தடம்பதித்ததுடன், இன்றும் சுவிட்சர்லாந்தின் அரசாங்கத்துடன் இணைந்து இன அழிப்புக்கு எதிரான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
தமிழ் இளையோர் அமைப்பின் 20வது ஆண்டு விழா சூரிச் மாநிலத்தின் Albis பகுதியில் மிக விமரிசையாக நடைபெற்றது.
விழா தொடக்க நிகழ்வில்:
பொதுச் சுடர் ஏற்றல்
தமிழீழத் தேசியக் கொடி ஏற்றல்
ஈகைச் சுடர் ஏற்றல்
அகவணக்கம்
சுடர் வணக்கம் மற்றும் மலர் வணக்கம் ஆகியவை இடம்பெற்றன.
நிகழ்வின் தொடர் நிகழ்ச்சிகளில்:
வரவேற்பு உரை, முன்னாள் பொறுப்பாளர்களின் அனுபவப் பகிர்வு,
பேச்சு, நடனம் மற்றும் சொல்லிசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், 2004ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்த அனைத்து முன்னாள் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு, இளையோர் அமைப்பின் செயற்பாடுகள், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்களைப் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அதிகமான இளையோர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். எதிர்காலத்தில் இளையோர் அமைப்பின் செயற்பாடுகளை மேம்படுத்தும் விதமாக பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. இவ்விழா, இளையோருக்குள் ஒற்றுமையை உருவாக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் நிறைவில் “நம்புங்கள் தமிழீழம்” என்ற பாடலை அனைவரும் ஒன்றாக பாடி, தமிழீழத் தேசியக் கொடி கையேந்தி, எங்களின் தாயக மந்திரத்தை உரத்த குரலில் முழங்கினர். இதன் மூலம் நிகழ்வு வெற்றிகரமாகவும் இனிதாகவும் அமையப்பெற்றது.