நான் ஆட்சிக்கு வந்தால் 24மணி நேரத்திற்குள் ஊடகவியலாளர் கொலைக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்துவேன்: சரத்பொன்சேகா

Google+ Pinterest LinkedIn Tumblr +

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை யார் படுகொலை செய்தார்கள் என்ற விபரங்களை அம்பலப்படுத்த முடியும் என எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், இந்தக் கொலைகளின் பின்னணியில் யார் செயற்பட்டார்கள் என்பதனை விசாரணை செய்து 24 மணித்தியாலங்களுக்குள் அவர்களுக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவிலாளர்களின் படுகொலைகளின் பின்னணியில் தாம் செயற்பட்டதாக சிலர் குற்றம் சுமத்தி வருவதாகவும், தாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட 24 மணித்தியாலங்களுக்குள் உண்மையான குற்றவாளிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்த முடியும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அரச ஊடகவியலாளர்களுடன் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். மேலும், அரசியல் சார்பாக செயற்பட்டு வரும் அரச ஊடகங்களை பக்கச் சார்பற்ற சுயாதீன அமைப்பாக உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆட்சியை முன்னெடுக்க உள்ளதாக தம் மீது குற்றம் சுமத்தி வரும் அரசாங்கமே இராணுவ ஆட்சிக்கான முனைப்பு காட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 24 இராணுவ அதிகாரிகளுக்கு அரச உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், நான்கு மேஜர் ஜெனரல்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழலை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

Share.

Comments are closed.