அண்ணா ! திலீபன் அண்ணா !

Google+ Pinterest LinkedIn Tumblr +

« ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம். »

தமிழீழ தேசீய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

« அண்ணா.. நீங்கள் இவ்வுலகை நீங்கி 31 வருடங்கள் ஆகின்றன. நீராகாரம் இருந்து, உண்ணாநோன்பிருந்து, உடல் தளர்ந்து, உயிரிழந்தது ஏன் ? நீங்கள் அன்று முன்வைத்த கோரிக்கைகள் ஐந்து. அவை 31 வருடங்கள் களிந்தும் இன்னமும் நிறைவேறவில்லை, அண்ணா… »

இந்திய அமைதி காக்கும் படை 1987இல் இலங்கை இந்தியா ஒப்பந்தத்திற்கேற்ப இலங்கையில் அமைதியை நிலைனாட்ட அனுப்பப்பட்டது.ஆனால் ஈற்றில் அதன் எதிர்மாறாய், இந்திய இராணுவம் சிங்கள அரசோடு இணைந்து தமிழர்களுக்கு எதிராகச் செயல்ப்பட்டது.

தமிழ் அகதிகள் தங்களுடைய சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல முடியாத நிலையை சிங்கள இராணுவம் உருவாக்கியது. வேக வேகமாகச் சிங்கள குடியேற்றங்களை சிங்கள இராணவத்தின் துணையுடன் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வந்தது. தமிழ் மக்களின் பாரம்பரிய மண் மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது. கிழக்கு மாகாணத்தில் பெருவாரியாகச் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கள அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ்ப் பகுதிகளில் மேலும் விரிவாக்கப்பட்டது. சில குழுக்கள் இந்திய சிறிலங்கா இராணுவங்களின் துணையுடன் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற கொடுஞ் செயல்களைப் புரிய ஆரம்பித்தன. நிலைமை விபரீதமாகப் போய்க் கொண்டிருந்தது. அத்துடன் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல விடையங்கள் நிறைவேற்றப் படாமல் இழுத்தடிக்கப்பட்டன. இவற்றை இந்திய அரசும், இந்திய இராணுவமும் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அவற்றை அனுசரித்து,அவற்றிற்குத் துணைபோனது.

இவற்றைத் தவிர்க்குமாறு கேட்டு, இந்திய அரசு தமிழ் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளைக்காப்பாற்றும்படி கோரி தமிழீழ விடுதலைப்புலிகள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தபோதும் அதற்கு எப்பதிலும் கிடைக்கவில்லை.

தமிழீழ மக்களின் ஏமாற்றம் கண்டு, அநீதியினை அகிம்சை வழியால் தட்டிக்கேட்க முன்வந்தார் தியாகதீபம் லெப் கேணல். திலீபன் அண்ணா அவர்கள். தனது 23 வயதினில், மருத்துவக்கல்வியினை விட்டுவிட்டு தனது மக்களுக்காய், தமிழினத்துக்காய் மனம் தளராது, உறுதியுடன் 1987 புரட்டாதி 15ம் நாள் அன்று அவர் தம் உண்ணாவிரதத்தினை நல்லூர் கந்தசாமி கோவிலடியில் ஆரம்பித்தார்.

அவர் முன்வைத்த 5 கோரிக்கைகள் :

1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.

2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

பாடசாலை மாணவர்கள், மக்களென பலரும் திரண்டு அவருக்கு உறுதுணையாக இருந்து, நாளுக்கு நாள் அவர் நிலமை கண்டு தயங்கினர், அழுதனர், கதறினர். இந்திய அரசோ எவ்விதமான முடிவினையும் வழங்கவில்லை. இவற்றிற்கு இந்திய அரசு சாதகமான தீர்வு காணும் வரை, தான் முன்னெடுத்த போராட்டத்தினை நிறுத்தவும் மாட்டேன், அதன் வடிவத்தினை மாற்றவும் மாட்டேன் என்ற உறுதியுடன், ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் இறுதி மூச்சு வரை போராடினார் அண்ணா திலீபன் அவர்கள். இவ்வாறு உண்ணாவிரதமும், நீராகாரமும் இருந்த அவர் 26ம் நாள் புரட்டாதி 1987, தன் கோரிக்கைகளுக்கு இந்திய அரசிடமிருந்து பதில் பெறாமல் வீரமரணம் அடைந்த்தார். அவர் வீரச்சாவடைந்தபோதிலும், தனது இறுதி ஆசைக்கிணங்க தன் உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவப்பீட்ததிற்கு கையளிக்கப்பட்டது. அவர் நடத்திய உறுதியான பொய்யற்ற பெருந்தியாகம் இன்றும் பலரால் போற்றப்படுகின்றது.

இன்று 31 வருடங்கள் களிந்துவிட்டன. எத்தனை மாவீரர்கள் ? எத்தனை பொதுமக்கள் ? எத்தனை இழப்பு ? எத்தனை துன்பம் ? இவை அனைத்தையும் கடந்து வந்த போதிலும் அன்று திலீபன் அண்ணா முன்வைத்த கோரிக்கைகள் இன்றும் நிறைவேற்றப்படவில்லை என்பதற்குமேல், இன்றும் அதே நிலமை நிலவுகின்றது என்பதை அறிவது மிகவும் கவலைக்குரிய விடையமே.

இருந்தாலும்… ஓயமாட்டோம் ! அண்ணா ! ஓயமாட்டோம் !

« இந்த உலகில் அநீதியும் – அடிமைத்தனமும் இருக்கும் வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும்வரை, விடுதலைப்போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி. » என்று தலைவர் அவர்கள் சொன்னதற்கிணங்கவும், நீங்கள் கூறியது போல், அண்ணா,

« மக்கள் புரட்சி வெடிக்கட்டும் ! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் ! »

தியாகதீபம் லெப் கேணல். திலீபன்.

Share.

Comments are closed.