அரசியல் இராஜதந்திர வழிமுறை ஊடான முன்னெடுப்பு ஏன்?: செ.பத்மநாதன் விளக்கம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும் அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஜதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என நாம் கருதுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் இணையத்தளத்தில் இன்று சனிக்கிழமை அவர் எழுதியுள்ள வலைப்பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தற்போதைய சிக்கல் நிறைந்த காலகட்டத்தினை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதனை இந்த வாரம் நோக்கலாம் எனக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன். இக் காலகட்டத்தினை எவ்வாறு எதிர் கொள்ளப்போகிறோம் என்பது தொடர்பாக சிந்திப்பதற்கு தாயகத்தின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களும் விபரங்களும் முக்கியமானவை.

தற்போது தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு மிகவும் மூர்க்கமான முறையில் சிங்கள தேசியவாத அரசினால் முன்னெடுக்கப்படுகின்றது. வன்னி மண்ணிலிருந்து சுமார் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டு அனைத்துலகத்தின் கண்காணிப்புக்கு அப்பால் சிங்கள இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

முள்ளு வேலிக்குள் மக்கள்

இதனை விட மேலும் மூன்று லட்சம் மக்கள் ஏனைய தமிழர் பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தமது வாழ்விடங்களை இழந்து மிகுந்த துயருடன் அல்லலுற்று வாழ்கின்றனர்.

மேலும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் போராளிகள் அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக  இலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்பட்டும் வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் மக்களின் ஜனநாயக உரிமைகளும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்டு வருகின்றது. கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் எதுவித நீதி கோரும் உரிமைகளும் அற்று அநாதரவாகவுள்ளனர்.

 

வறுமையும், மோசமான வாழ்க்கைச் சூழலும்

மக்களின் பொருளாதார, கல்வி மற்றும் பிற வாய்ப்புக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடி நிவாரணங்கள், மத்திய கால மற்றும் நீண்டகால திட்டங்கள் எதுவுமற்ற சூழல் நிலவுகின்றது. இது வறுமையையும், மோசமான வாழ்க்கைச் சூழலையும் தமிழ் மக்களிற்கு ஏற்படுத்துகின்றது.

இதேவேளையில் தமிழீழ மக்கள் அடைந்துள்ள மனிதப் பேரவலத்தினையும் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளினையும் முன்வைத்து அனைத்துலகத்திடம் பெருமளவில் வெளிநாட்டு வளங்களினையும் உதவிகளினையும் திரட்டுவதில் இலங்கை அரசு கொள்கையளவில் வெற்றி பெற்று வருகிறது.

அந்த வளத்தினைக் கொண்டு புனர்வாழ்வு புனரமைப்பு செயற்பாடுகளினை முன்னெடுப்பதாக கூறுவதன் மூலம் தமிழ்மக்களின் நலன்களில் சிங்கள அரசு மிகுந்த அக்கறை கொண்டிருப்பது போல் காட்டித்தான் மேற்கொண்ட தமிழின அழிப்பு பழியிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வழிதேடுகின்றது.

தனது இராணுவ ஆளணியினரால் கட்டுப்படுத்தப்படும் சிவில் நிர்வாக இயந்திரத்தின் கீழ் மீள்கட்டமைப்பும் அபிவிருத்தியும் என்ற பெயரில் தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகத்தின் இனத்துவ சமநிலையினை சிங்கள மக்களின் பெரும்பான்மைக்கு சார்பாக மாற்ற சிங்கள அரசு முனைகிறது.

தமிழ் மக்களின் சமூக பொருளாதாரக் கட்டமைப்பினை தற்சார்பு நிலையற்றதும் இலங்கையின் தென்பகுதியினால் கட்டுப்படுத்தக்கூடியதுமான தங்கி வாழும் பொருளாதாரமாக மாற்றுவதற்குரிய திட்டங்களினையும் சிங்கள அரசு முன்நகர்த்தியுள்ளது.

தமிழ்மக்களின் அரசியல் சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் சிங்கள அரசு குறியாகவுள்ளது.

இது மட்டுமன்றி  இலங்கை அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து ஒரு நாடு, ஒரு மக்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்களை சிங்கள ஆதிக்கத்துக்குள் சிறைப்பிடிக்கவும் பார்க்கிறது.

தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இன பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தேசிய தனித்துவத்தினைப் பேணிக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலை உருவாகி வருகிறது.

இத்தகைய ஒரு சூழலில், நாம் எவற்றையும் நமது தாயகத்தின், நமது தாயக மக்களின் இன்றைய யதார்த்த நிலையிலிருந்து சிந்திக்க தொடங்குவதுதான் நேர்மையானதும் சரியானதுமாகும்.

தாயகத்தின் தற்போதைய நிலையில், இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களது நலன்களைப் பேணுதல், மக்களைத் தத்தமது வாழ்விடங்ககளில் இயன்றளவு விரைவாக குடியமரச் செய்தல், மக்கள் தமது இயல்பு வாழ்விற்குத் திருப்புவதற்கு ஆதரவாகவும் ஆதாரமாகவும் செயற்படுதல், போரில் தமது அவயங்களை இழந்து அங்கவீனமாகி நிற்கும் நமது மக்களுக்கும் போராளிகளுக்கும் புதுவாழ்வளித்தல் போன்ற அடிப்படை புனர்வாழ்வு வேலைத்திட்டங்களை தமிழர் நலன் என்ற நோக்கு நிலையிலிருந்து எவ்வாறு கையாளப் போகிறோம் என்கின்ற மனிதாபிமான விடயங்கள் முதற்கொண்டு தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை வென்றெடுத்தல் என்பது வரையாக நாம் கடந்து செல்ல வேண்டிய பாதை மிக நீண்டதும் சவால்கள் நிறைந்ததுமாகும்.

 

இத்தகைய ஒரு சிக்கலான ஒரு காலகட்டத்தில், மக்களின் தற்போதைய கடினமான வாழ்க்கை நிலையை முன்னிறுத்தியும், அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும் அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஜதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என நாம் கருதுகிறோம்.

இந்த அடிப்படையில், முள்ளிவாய்க்காலில் வைத்து நமது தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு அமைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு, நமது விடுதலை இலட்சியத்தினை வென்றெடுப்பதற்கான அடுத்தகட்டப் பயணம் அரசியல், இராஜதந்திர வழிமுறைகளுக்கூடாகத் தொடரும் என்கின்ற நிலைப்பாட்டினை விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்துள்ளது.

இது நமது அடுத்தகட்டப் போராட்டம் குறித்த முக்கியமான ஒரு அரசியல் நிலைப்பாடு.

ஏனைய விடயங்கள் குறித்து நாம் அடுத்த வாரம் (25.07.2009) நோக்குவோம்.

என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் கருத்துக்களை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இவற்றில் பொருத்தமானவற்றைப் இப்பகுதியில் பிரசுரிக்கவும் நான் விரும்புகிறேன். உங்கள் கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவதனைத் தாங்கள் விரும்பாவிடின் அதனையும் குறிப்பிடுங்கள்.

உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ltte.ir@gmail.com

 

நன்றி. மீண்டும் நாம் அடுத்த வாரம் சந்திப்போம்.

என்றும் அன்புடன்
கே.பி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.