கடந்த 1983ம் ஆண்டு முதல் இலங்கையில் இருந்துவரும் அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு பிரான்ஸ் கோரியுள்ளது. பிரான்சின் மனித உரிமைகள் அமைப்பின் தூதர் பிரான்சுவா சிமெரி இன்று சனிக்கிழமை இந்தக் கோரிக்கையை சிறீலங்காவிடம் விடுத்துள்ளார்.
பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்னாட் குஷ்னர் அவர்களால் அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையாளர் பிரான்சுவா சிமெரெய் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறீலங்கா இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக மூன்று நாள் சுற்றுப் பயணத்தை சிறீலங்காவில் மேற்கொண்ட இவர் அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் மக்களை மீள குடியமர்த்துவது மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தினார்.
பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புவதற்கு முன்பாக இலங்கை நிலவரம் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில், யுத்த மற்றும் மனித உரிமை வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியவர், போர்க் குற்றம் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
கடந்த மே மாதத்துடன் போரை முடிவுக்கு கொண்டுவந்துள்ள அரசாங்கம், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பை நிறுத்த வேண்டும் அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை சிறீலங்கா தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கு இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் சிறீலங்கா அரச தலைவர்களுக்கு வலியுறுத்தி வருவதாகவும் கொழும்புச் செய்திகள் கூறப்படுகின்றது.
இதேவேளை, இவரது பயணத்தின் பின்னர் கருத்து வெளியிட்டிருந்த சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு தரப்பு, ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை வழங்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாகவும் சிறீலங்கா தொடர்பான சாதகமான புரிந்துணர்வை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் எனக் கருதுவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளது.