இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் சாதகமான முடிவு எதனையும் வெளியிடப் போவதில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் தெரிவித்துள்ளார்.
இது சட்ட முறையற்ற ஆட்கடத்தல் என்பதால் அவுஸ்திரேலியாவின் எந்த பிரதமரும் இதற்கு சாதகமான பதிலை வெளியிட மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள ஆட்கடத்தல்காரர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு அவுஸ்திரேலிய பிரதமர்களுக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அவுஸ்திரேலிய அதிகாரிகள், இதனை ஒரு அச்சுறுத்தலாக பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுள்ளார்.
இது ஒரு சட்டவிரோதமான கைத்தொழிலாக பரிணமித்துள்ள நிலையில், ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றவர்களின் கைகளில் பொது மக்கள் சிக்கிவிடக் கூடாது என அவர் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகள் பேரவையின் இது தொடர்பான அணுகுமுறைகளும் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இருக்காது என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு நபருக்காகவும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.