இராதிகாவின் வெற்றி ஈழத் தமிழர்களின் வெற்றி! நாடுகடந்த தமிழீழ அரசு வாழ்த்துகிறது

Google+ Pinterest LinkedIn Tumblr +

இராதிகாவின் வெற்றி ஈழத் தமிழர்களின் வெற்றி! புலம்பெயர்வாழ் உலகத் தமிழினத்தின் வெற்றி! எனவே நாடுகடந்த தமிழீழ அரசு நல்ல தமிழ்ப் பணி ஆற்றுக என இராதிகாவை இதய நிறைவோடு வாழ்த்துகிறது

 

உலகத் தமிழினத்தின் வரலாற்றில் இராதிகா சிற்சபைஈசன் ஈட்டிய வெற்றி வரலாற்றில் பதியப்படும் நிகழ்ச்சியாக விளங்குவதோடு அவரே வரலாறாக மாறியுள்ளார். இலங்கையிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் . இந்தியத் துணைக் கண்டத்திலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் எமக்காக குரல் எழுப்ப இதுவரை எவரும் இருக்கவில்லை. உள்ளூராட்சி மன்றங்களிலும் மனித உரிமை அமைப்புகளிலும் தமிழர் உளர் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், ஒரு நாட்டின் தலையாய அமைப்பான நாடாளுமன்றத்தில் முதல் முறையாக ஒரு தமிழனின் குரல்- இல்லை ஒரு தமிழச்சியின் குரல் கேட்கப்போகிறது . இளமைத் துடிப்பும் , அகவையை மிஞ்சிய அரசியல் முதிர்ச்சியும் அவரிடம் குடி கொண்டுள்ளது.

எனவே இப் பெண்மணியை இளமைக் குரிசில்- ஆங்கிலத்தில் infant prodigy என்றும் கூறலாம். அழகு இருக்கும் இடத்தில் அறிவு இருப்பதில்லை. அறிவு இருக்கும் இடத்தில் அழகு இருப்பதில்லை. ஆனால் இவரிடம் இரண்டும் இணைந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இவரை எனக்கு தெரியும். குரலற்ற தமிழினத்தின் குரலாக ( voice of the voiceless Tamils ) விளங்கப் போகிறார். 1879 ல் நல்லை நகர் ஆறுமுக நாவலரின் வாழ்த்துதலுடன் அகவை 28 ல் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார் இராமநாதன். ஐம்பது ஆண்டுகள் அரசியலில் அரசோச்சினார். டொனமூர் எனின் தமிழன் இனிமேல் இல்லை ( Donoghmore means Tamils no more ) என்று முழங்கியவர் இராமநாதன். காலம் அவர் கூறியதை உண்மை என உணர்த்தியுள்ளது. இராதிகா 29 ஆவது அகவையில் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார். நெருக்கடிக்கிடையில் தான் இவர் காலடி எடுத்து வைக்கிறார். இவர் எவ்வளவு தூரம் ஈடு கொடுப்பார் என்பதை காலம் உணர்த்தி நிற்கும். ஈழத் தமிழினம் மட்டுமல்ல உலகத் தமிழினமே இவரை உற்றுக் கவனிக்கின்றது- உகந்து போற்றுகின்றது.

 

ஈழத் தமிழர் இன்னல் துடைத்த யக் லேயிட்டேன்

புதிய மக்களாட்சிக் கட்சி (NDP) தலைவர் யக் லேயிட்டன் (Jack Layton ) அவர்கள் இன்று நேற்று அல்ல அன்று தொட்டே ஈழத் தமிழினத்திற்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருபவர். 2009 பிப்ரவரி ஐந்தாம் நாள் அவர் ஒட்டாவா பாராளுமன்றத்தில் ஈழத் தமிழர் சார்பில் ஓங்கி ஒலித்த குரல் எம் செவிகளில் இன்றும் ஒலிக்கிறது. ஈழத் தமிழர் இன்னல் நீங்க கனடா குரல் கொடுக்க வேண்டும், உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் ஒலித்ததை பாராளுமன்றப் பதிவேடுகளில் இன்றும் நாம் பார்க்கலாம். இனப் படுகொலையின் உச்சம் மே 2009 ல் நடைபெற்றது. ஆனால் 2009 பிப்ரவரியிலேயே இவர் குரல் எழுப்பியது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. ஏனைய கட்சிகள் ஈழத் தமிழினத்திற்கு பேரவலமும் பேரழிவும் ஏற்பட்ட போதுகூட திட்டமிட்ட அமைதி( studied silence ) மேற்கொண்ட நிலையில் யக் லேயிட்டனின் குரல் எம் சார்பில் ஒலித்ததை நாம் எப்படி மறக்க முடியும். நெருக்கடிக்கு ஈடு கொடுக்கின்ற தலைவனாக (leader in crisis )- நாம் ஐயோ என்று அலறிய வேளையில் எமக்காக அபயக் குரல் எழுப்பியவர் யக் லேயிட்டன் அவர்கள். புதிய மக்களாட்சிக் கட்சியும் (NDP ) அவருக்கு ஒத்துழைத்து பக்க பலமாய் இருந்ததையும் நாம் மறப்பதற்கு இல்லை.

 

ஏற்றமிக்க எதிர்க்கட்சித் தலைவர் யக் லேயிட்டன்

இன்றைய புதிய சூழலில் நாம் விரும்பாத அளவுக்கு பழமைவாத கட்சி கொன்செவேற்றிக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது எமக்குக் கவலையைத் தருகிறது. எனினும் பலம் உள்ள எதிர்க் கட்சித் தலைவராக யக் லேயிட்டன் 106 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் எதிர்க் கட்சித் தலைவராக அவர் அமர்ந்து இருந்து எம் சார்பில் அவர் எழுப்புகின்ற குரல் வலுவுள்ள குரலாக- எமக்கு வாழ்வளிக்கும் குரலாக விளங்குவது உறுதி.

 

இராதிகாவின் இனிய இயல்புகள்

புதிய மக்களாட்சிக் கட்சியில் புதுப் பொலிவுடன் அனைத்து ஆற்றலுடன் இராதிகா எமக்காக குரல் எழுப்ப இருக்கிறாள். அனைவரின் கவனத்தை ஈர்க்கின்ற முறையில் ஆங்கிலச் சொல்லாட்சி அவரிடம் இருக்கிறது. இராதிகா சிற்சபைஈசன் எழுப்புகின்ற குரலை எவரும் எளிதில் புறக்கணிக்க முடியாது. அதே வேளையில் அவரின் நெஞ்சை அள்ளும் கொள்ளும் தமிழ்- விஞ்சும் தமிழ் எமக்கு தெம்பு தருகின்றது.

 

சீ-49 மசோதா எம் கண்ணை உறுத்துகின்றது

சீ-49 உட்பட பல பாதகமான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஆபத்து உண்டு. இச் சட்டம் தமிழரை மட்டுமல்ல கனடாவிற்கு வருகை தரும் குடிவரவாளர் அனைவரையும் பாதிக்கும் சட்டமாக அமையும். இச் சட்டம் நீங்கலாக மேலும் பல பாதகமான சட்டங்கள் உருவாகக் கூடும். செல்வி. இராதிகா 18 935 வாக்குகளைப் பெற்றுள்ளவர். இவரோடு போட்டியிட்டவர் 13 935 வாக்குகளை பெற்றுள்ளார்.

எனவே இராதிகா இவரோடு போட்டியிட்டவரை விட 5000 க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார். இது தமிழர் மட்டுமல்ல ஏனைய இனத்தவர்களும் அவர் மீது வைத்த நம்பிக்கைக்கு சான்று. இவ் வாக்குகள் இவரின் தனித் தன்மையை எடுத்துக்காட்டுவதோடு என். டி. பி. கட்சிக்கு கிடைத்த வாக்குகளாகவும் கொள்ளவேண்டும். என். டி. பி. கட்சி பல இனங்களின் உள்ளடக்கம்.

எனவே இராதிகா எழுப்பப்போகின்ற குரல் ஈழத் தமிழினத்திற்காக மட்டுமல்ல தமிழகத்தில் நாளும் பொழுதும் செத்துக்கொண்டு இருக்கின்ற மீனவர்களின் குரலாகவும், மலேசியாவில் அவலமுறும் தமிழரின் குரலாகவும், கனடாவில் வாழும் தொழிலாளர்களின் குரலாகவும் , உலகில் அடக்கி ஒடுக்கப்படும் மானிட சமுதாயத்தின் குரலாகவும் அவரது குரல் ஒலிக்கப்போவது உறுதி. இராதிகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்தியுள்ளதை வரவேற்கிறோம்.

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் அவரை வாழ்த்தியுள்ளன. எமக்கு கிடைத்த செய்திகளின் படி, புலம் பெயர்ந்த மக்களின் சார்பில் இராதிகா எழுப்பப்போகும் குரல் தம்மை நையப்புடைக்கும் குரலாக விளங்கப்போவதனை அறிந்து மகிந்த இராஜபக்ச கதி கலங்குகிறார். இலங்கை ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

 

ஐ. நா. மன்றத்தில் ஏற்படும் மாற்றத்தையும் இராதிகாவின் வெற்றியையும் இணைத்துப் பார்த்தல் வேண்டும்

ஐ. நா. மன்றத்தின் வல்லுநர் குழுவின் விதந்துரையை அடுத்து இராதிகாவின் வெற்றி அமைந்திருப்பது எமக்கு தெம்பு தரும் நிகழ்ச்சியாகும். ஐ. நா. மன்றத்தின் வல்லுநர் குழுவின் விதந்துரையை நடைமுறைப்படுத்துக என உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கையொப்ப வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஐ. நா. மன்றம் இவ் விதந்துரையை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டக்கூடாது . மாறாக இவ் விதந்துரையை நடைமுறைப்படுத்த , பக்கம் சாரா நிலையில் அனைத்து உலக அமைப்புகள் குரல் எழுப்ப வேண்டும் என்பது நாம் விடுக்கும் வேண்டுகோளாகும் .
கனடாவின் தலைமை அமைச்சர் காப்பர் ஈழத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லையெனினும் காலம் கடந்த நிலையிலாவது ஞானம் பெற்று உலக நாடுகளின் கவனங்களை எம்பால் ஈர்க்க ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும் என்பது எம் விடுதல் அறியா விருப்பம். காப்பர் எம்மைக் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது . காலம் தான் பதில் கூற வேண்டும்.

 

இராதிகாவை உருத்திரகுமாரன் வாழ்த்துகிறார்

கனடாவின் தலைமை அமைச்சர் ஈழத் தமிழர் விடயத்தில் இலங்கை அரசையும் உலக நாடுகளையும் தட்டிக் கேட்கத் தவறின் புதிய மக்களாட்சிக் கட்சியின்(என். டி. பி.) தலைவர் யக் லேயிட்டனும் அவருக்கு பக்க துணையாக எங்கள் இராதிகா சிற்சபைஈசனும் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குரல் எழுப்புவது உறுதி. எம் எதிர்பார்ப்பு ஏற்றம் பெற நாம் காணும் கனவு நனவாக நயத்தக்க பணியை புதிய மக்களாட்சிக் கட்சியும் அக் கட்சியோடு ஒன்றிய இராதிகா சிற்சபைஈசனும் செயலாற்றுவார்கள் என்று நாடு கடந்த தமிழீழ அரசு அவர்களை வாழ்த்துகின்றது. ஏற்கனவே நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் திரு. உருத்திரகுமாரனும் உள்ள நிறைவோடு இராதிகாவை வாழ்த்தியுள்ளார். நாமும் வழிமொழி கூறுகிறோம்.

 

 

மா.க. ஈழவேந்தன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை
நாடுகடந்த தமிழீழ அரசின் கனடாப் பேராளர்
mkeelaventhan @gmail .com

Share.

Comments are closed.