இருதரப்பு முறுகல் முற்றுகிறது:
இலங்கையில் எங்கு, எவ்வாறு பணியாற்றுவது என்பது தொடர்பாக, அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அறிவித்திருக்கின்றது.இதன் காரணமாக இலங்கை அரசுக்கும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவுக்கும் இடையில் முறுகல் நிலை முற்றுகின்றது என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
“நாங்கள் எப்படியான பணிகளைச் செய்யவேண்டும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளதைத் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என செஞ்சிலுவைக்க குழுவின் தலைவர் ஜக்கோப் கெலென்போக்ர் ரொய்ட்டர் செய்திச் சேவைக்குக் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் எப்படி எங்கு பணியாற்றுவது என்ற விடயத்தில் அரசுடன் நாம் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளோம். இது குறித்து இலங்கை அரசுடன் பேச்சுகளை மேற்கொண்டு விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது” என மேலும் தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தலைவர் கெலென் பேர்கர், எதிர்வரும் வாரங்களில் இது குறித்த பேச்சுகளை தாம் மேற்கொள்ளப்போகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பணிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு செஞ்சிலுவைக்குழுவை அரசு கேட்டுள்ள நிலையில் அதன் தலைவரின் இக்கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜெனிவாப் பிரகடனத்தையும் இது தொடர்பான சர்வதேச சட்டங்களையும் தரமுயர்த்தவேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அநேகமான மோதல்கள் தற்போது நாடொன்றின் எல்லைக்குள்ளேயே இடம்பெறுகின்றன. நாடுகளுக்கு மத்தியில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள கெலென்பேர்கெர் இதில் அநேகமாக ஈடுபடுபவர்கள் கிளர்ச்சிக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இதனாலேயே ஜெனிவா பிரகடனத்தைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளர்.
அரசு சாராத ஆயுதக் குழுக்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்காதமையே பாரிய பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஜெனிவா பிரகடனம்இன்றுவரைபொருத்தமானதாகவுள்ளது. இலங்கை உட்படப் பல நாடுகளில் மனிதாபிமானப் பேரழிவுகள் மோசமான நிலையை அடைவதை தடுப்பதற்கு, சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவதே ஒரே வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.