இலங்கை சமாதானத்தை தொலைத்து விட்டது: த எக்ஸாமினர் ஆங்கில இணையத்தளம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

 1945ம் ஆண்டு ஜேர்மனி, ஏலியஸ் படையினரிடம் சரணடைந்தன் பின்னர், ‘யுத்தத்தில் வெற்றி பெற்றாலும், சமாதானத்தை தோற்றுவிட்டோம்” என்ற வின்சனட் சேர்ச்சிலின் கருத்துப்படியே இலங்கை அரசாங்கத்துக்கும் நிகழ்ந்திருப்பதாக த எக்ஸாமினர் என்ற ஆங்கில இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் 26 வருடங்கள் இடம்பெற்ற பாரிய தொடர் யுத்தத்தில் வெற்றி கண்டுவிட்டதாக அறிவித்தாலும், அது உண்மையான சமாதானத்தை முழுமையாக தொலைத்து விட்டதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்களும் அல்லாதவர்களும், நாட்டின் அடிப்படை கைதிகளாகவே அரசாங்கத்தினால் நடத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பருவ பெயர்ச்சி மழை காலத்தில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கைக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கையின் சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினை நிரப்புகின்ற சிங்கள இனத்தவர்களே, நாட்டின் அரசாங்கம் மற்றும் இராணுவத்திலும் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ளனர். இந்த நிலையில், தமிழர்களின் உரிமைகளுக்காக உருவான ஒரு போராட்டக் குழுவே தமிழீழ விடுதலைப் புலிகள் என விபரித்துள்ள அந்த இணையத்தளம் அவர்கள் மிகவும் நேர்த்தியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் 26 வருடகால யுத்தத்தை இலங்கை அரசாங்கமே வென்றெடுத்ததாக அறிவித்து வருகிறது, எனவே இலங்கையில் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே இருப்பதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. தமிழர்கள் நல்லெண்ண அடிப்படையிலேயே தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வரும் அரசாங்கம், அதற்கு நிலக்கண்ணி வெடிகளை காரணம் காட்டி வருகிறது. எனினும் அரசாங்கத்தின் இந்த வாதம் பொய்யானது என சுட்டிக்காட்டியுள்ள அந்த இணையத்தளம், வெடிக்காத துப்பாக்கிகளும், நிலக்கண்ணி வெடிகளும் தமிழ் கிராமங்களில் மாத்திரமா புதைத்து வைக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளது. குறிப்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும், தமிழர்களே தவிர, சிங்களவர்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அந்த இணையத்தளம், பாதுகாப்பான தடுத்து வைப்பு என்ற போர்வை அரசாங்கத்தின் போலி வித்தை என தெரிவித்துள்ளது. தற்போதேனும், இலங்கையின் நிலவரம் தொடர்பில் சர்வதேசத்தின் ஆழமான பார்வை பதிந்துள்ள நிலையில், அனர்த்தத்துக்கு உள்ளான மக்களின் இயல்பு வாழக்கை மீள கிடைக்கப்பெறும் என த எக்ஸாமினர் இணையத்தளம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது

Share.

Comments are closed.