இலங்கை தமிழர்களின் கைகளையும் கண்களையும் கட்டி, நிர்வாணமாக்கி சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகளை இங்கிலாந்து டி.வி. சமீபத்தில் வெளியிட்டது.
இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவருமான சூசன் ரைஸ் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.
அப்போது அவர், ‘தமிழர்களை சுட்டுக் கொன்றதாக வெளியான படக்காட்சிகள் மிகவும் துயரமளிப்பவையாக உள்ளன. அவை மிகவும் கண்டனத்துக்குரியவை.
அமெரிக்காவின் சொந்த தேசிய பொறுப்புணர்வின் அடிப்படையில் இது தொடர்பாக மேலும் பல தகவல்களை நாங்கள் திரட்டுவோம் என்றார்.
இராணுவம் இப்படியான ஒரு செயலில் ஈடுபடவில்லை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம
இது தொடர்பில் சர்வதேச அளவில் சில பகுதிகளில் இருந்து வெளியாகும் விமர்சனங்களால் தாங்கள் கவலையடைந்துள்ளதாக இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் இருப்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமது அரசு மறுப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அது முற்றிலும் புனையப்பட்ட செய்தி என்றும், திட்டமிட்டு இலங்கை அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
தீய எண்ணத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோ கடந்த ஜனவரி மாதம் அடையாளம் காணப்படாத ஒரு இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த சமயத்தில் இலங்கையில் மோதல் நடைபெற்ற இடங்களில் சர்வதேச அமைப்புகளின் பிரசன்னம் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது என்றும் ரோஹித போகல்லாகம அவர்களின் பெயரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் அப்பகுதியில் விடுதலைப் புலிகளும் ஒரு சண்டையிடும் படையாக தீவிரமாக செயற்பட்டு வந்தனர் எனவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இப்படியான ஒரு செயல் இடம் பெற்றிருக்குமாயின் எட்டு மாதங்களுக்கு சர்வதேச சமூகம் சும்மா இருந்திருக்காது என்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.