யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கான உள்ளுராட்சி தேர்தல்கள் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளன. இந்த தேர்தலில் அரசுக்கு சார்பானவர்களை நிறுத்துவதன் மூலம் அடிமட்டத்தில் இருந்து தமிழ் மக்களின் விடுதலை வேட்கையையும், தாயகத்திற்கான கோட்பாடுகளையும் அழித்துவிட சிறீலங்கா அரச முயன்று வருகின்றது.
தமிழ் மக்களின் கோரிக்கைகளையும், உரிமைகளையும் வலுப்படுத்தக் கூடியதாக இந்த தேர்தலில் போட்டியிடும் தகமையை தழிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே கொண்டுள்ளது. தமிழ் மக்களின் குரலாக சிறீலங்காவின் நாடாளுமன்றத்திலும், அனைத்துலகத்தின் வீதிகளிலும் முழங்கிய இந்த குரல்கள் தான் தற்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஓரளேவேனும் வெளியில் கொண்டுவரும் தகமை கொண்ட குரல்களாக உள்ளன.
தற்போது நடைபெறவுள்ள தேர்தலை அதிக முக்கியத்துவம் அற்ற உள்ளுராட்சி தேர்தலாக நாம் கருதிக்கொள்ளலாம். ஆனால் இந்த தேர்தலிலும் தமிழ் மக்களின் உரிமைகளையும், தாயககோட்பாடுகளையும் விட்டுக்கொண்டுக்காத இனப்பற்றுள்ளவர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் தான் எமது இனத்தின் விடுதலை வேட்கையை அடிமட்டத்தில் இருந்து நாம் தொடர்ந்து பேணமுடியும்.
தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்கும் பலம் கொண்ட விடுதலைப்புலிகளின் மரபுவழியிலான படைத்துறை கட்டமைப்புக்களை பிராந்திய வல்லரசுகளின் உதவியுடன் முறியடித்துள்ள சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக பேரம்பேசும் எமது வலிமையை மழுங்கடித்துள்ளது.
அதன் பின்னர் இந்திய மத்திய அரசின் உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை உடைத்துவிட சிறீலங்கா அரசு முயன்று வருகின்றது. அதன் மூலம் நாடாளுமன்றத்திலும், அனைத்துலகத்திலும் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக எழுப்பப்படும் குரல்களை அடக்க முற்பட்டுவருகின்றது.
தற்போது உள்ளுராட்சி தேர்தலிலும் அரச தரப்பு வெற்றியீட்டுவதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை வேருடன் பிடுங்கிவிடலாம் என அரசு கருதுகின்றது. அதற்கு ஏதுவாக தனக்கு சார்பான கட்சிகளை உற்சாகத்துடன் களமிறக்கியுள்ள அரசு எந்த வழியிலாவது வெற்றீயீட்டிவிட அரும்பாடுபட்டு வருகின்றது.
ஏ-9 பதை திறப்பு, ஊரடங்கு தவிர்ப்பு என பல சலுகைகளை அவசர அவசரமாக அறிவித்துள்ள சிங்கள அரசு, தேர்தலிலும் பல தில்லுமுல்லுகளை மேற்கொள்ள முற்பட்டுவருகின்றது. அரச ஆதரவு குழுவினர் யாழ்மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று 1500 இற்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகளையும் பலவந்தமாக பறித்து சென்றுள்ளனர்.
யாழ் மாநகரசபை பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 20.6 விகிதமான வாக்காளர்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாலும், மேலும் 11.6 விகிதமானவர்கள் “தடை முகாம்களில்” அடைத்து வைக்கப்பட்டுள்ளதாலும் அங்கு பாரிய மோசடிகள் இடம்பெறலாம் என கருதப்படுகின்றது.
இதனிடையே தமிழரசு கட்சிக்கு வாக்களிக்குமாறும், வன்னியில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை மூலம் வன்னியில் இருந்து முற்று முழுதாக வெளியேற்றப்பட்டு “தடை முகாம்களில்” அடைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் மறுவாழ்வு தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பே அக்கறை செலுத்தி வருவதாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எமது மக்களின் தாயகக்கோட்பாடு எமது ஒவ்வொரு அசைவிலும் காப்பாற்றப்பட வேண்டும் எனில் அதனை நாம் ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும். அரசையும் அதன் கூட்டணி அமைப்புக்களையும் முறியடிக்கவேண்டும் எமது மக்களின் உரிமைகளை காப்பாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எமது வாக்குக்களை வழங்குங்கள்.