எம்தேசத்தின் இறைமையை மீட்டெடுக்கும் வரை தியாகங்களை மறவாது மனதில் நிறுத்தி உறிதியாக தமிழ்த்தேசியம் காப்போம் – தமிழர் மாணவர் ஒன்றியம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

பொங்குதமிழ் நிகழ்வின் 9ம் ஆண்டு நிறைவு அனுஷ்டிக்கபடும் இவ்வேளையில் பல்கலைக்கழக சமூகம் அழுத்தங்கள் குறைந்த இந்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி பொங்குதமிழ் தீர்மானங்களை மக்கள் மனதில் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என தமிழர் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீண்டு செல்லும் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இணைந்த வடக்கு கிழக்கு தமிழர்களின் மரபுவழித்தாயகம், தமிழர் ஒரு தனித்துவமான தேசிய இனம் (Distinctive Nation), தன்னாட்சி உரிமை (Right of self Determination) என்ற தீர்மானங்களை வலியுறுத்தி பல்கலைக்கழக சமூகம் நடாத்திய பொங்குதமிழ் நிகழ்வுகள் எமது அரசியல் அபிலாஷைகளை சர்வதேச சமூகத்திற்கு முதன் முதலில் வெளிச்சம் போட்டுக்காட்டியது.

ஊடகங்கள், பொதுமக்கள், புத்திஜீவிகள் என அனைவரும் பல்கலைக்கழக சமூகத்துடன் கரம் கோர்த்து கொள்கையில் உறுதியாக நின்று செயற்பட்டதாலேயே மிகநெருக்கடியான காலகட்டத்தில் எமது உணர்வுகளை உறுதியாக வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. பொங்குதமிழ் நிகழ்வில் நாம் ‘வெற்றுக் கோசங்களை’ எழுப்பவில்லை. மாறாக வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட நியாயமான அடிப்படை கோரிக்கைகளையே முன்வைத்தோம்.

கட்சி சார்பில்லாது தமிழ் மக்களின் ஏகோபித்த குரல் அன்று உரமாக ஒலித்தது போல் இன்றும் ஒலிக்க வேண்டிய தேவை உள்ளது. அன்று எம்மோடு ‘தடம் மாறாது’ செயற்பட்ட ஊடகங்கள், பொதுமக்கள் இன்றும் அதே உறுதியோடு செயற்படவேண்டிய வேளை இது. தமிழ் மக்களது ஆயுதப் போராட்டம் வலிமையுடன் இருந்தபோது அதை சிதைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒட்டுக்குழுக்கள் ‘தமிழ் தேசியத்தை’ சிதைப்பதில் பெரும் பங்குவகித்தன.

மர்மப் படுகொலைகள், வெள்ளைவான் கடத்தல்கள், கப்பம் கோரல்கள் என தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கி ‘உயிர்பயத்தை’ உருவாக்கி அவர்களின் உணர்வுகளை மங்கச்செய்யும் கைங்கரியங்களை சிறப்பாக செய்தன. எமது கொள்கைக்கான போராட்டம் உச்சம் பெற்றவேளை இனவாதம் அதனை சிதைப்பதற்காக வழங்கப்பட்ட சலுகைகள் கூட தற்சமயம் மறுக்கப்படுகின்றன.

உதாரணமாக ஆயுதப்போராட்டம் உறுதியாக இருந்தபோது இவ்வொட்டுக்குழுக்கள் கட்சிகள் ஆக்கப்பட்டு தமது சின்னங்களில் போட்டியிட அனுமதித்த அரசு போராட்டம் முடிவுக்கு வந்ததாக சிங்கள தலைமைகளால் அறிவிக்கப்பட்ட உடனேயே அவர்களின் கட்சிச்சின்னங்களில் போட்டியிட முடியாதவாறு நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

அரசாங்கமானது பேச்சு மூலம் எமக்கு எதையும் தரத்தயாரில்லை என்பது கடந்தகால பட்டறிவு. மாவீரர்களின் தியாகம், தாயகத்தில் இருந்த பொதுமக்களின் அர்ப்பணிப்பு, புலம்பெயர் சமூகத்தின் இடைவிடாத போராட்டம் ஆகியன மூலமே எமக்கு ஒரளவு உரிமைகள் வழங்கவேண்டும் என்ற அழுத்தங்கள் ஏற்படத்தொடங்கின.

சொந்த வாழ்விடங்களில் கௌரவமாக வாழ்ந்த எம்மை ஒடஒட விரட்டி முட்கம்பிவேலிகளுக்குள் அம்மணமாக்கிய சிங்கள தலைமைகள் இன்று தமிழ் மக்களின் வாக்குகள் தேவை என்பதற்காக ‘கோவணத்துண்டுகளை’ தரமுற்படுகின்றன. உயர்பாதுகாப்பு வலயம், மீள்குடியேற்றம் சாத்தியமில்லை, முகாம் மக்களை விடுவிக்கமுடியாது, A-9 பாதையை திறக்கமுடியாது, பாதுகாப்பு அனுமதி முறையை நீக்கமுடியாது என எக்காளமிட்ட சிங்கள தலைமைகள் இன்று தமிழ் மக்களின் வாக்குகளை வெல்ல சடுதியாக வாரிவழங்குகின்றன.

இது ஒரு முக்கிய காலகட்டம் ! தமிழ் மக்கள் ஒருமித்து உறுதியாக நிற்பதுடன் ஊடகங்களும் தடம்புரளாது மக்களின் உணர்வுகளை வெளிப்பத்தவேண்டிய நேரம் ! இன்று எமது அரசியலில் தோன்றியுள்ள வெற்றிடத்தில் எம்மை வழிநடத்த எத்தனிப்பவர்கள் தூரநோக்கு சிந்தனையுடன் எமது அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி இலட்சியத்துடனும் அர்ப்பணிப்புடனும் நேர்மையாக இயங்குவதே தமிழ் மக்களின் இதுவரையான தியாகங்களுக்கும் பதில் அளிப்பதாக அமையும்.

பொங்குதமிழ் நிகழ்வின் 9ம் ஆண்டு நிறைவு அனுஷ்டிக்கபடும் இவ்வேளையில் பல்கலைக்கழக சமூகம் அழுத்தங்கள் குறைந்த இந்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி பொங்குதமிழ் தீர்மானங்களை மக்கள் மனதில் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

இழந்த எம்தேசத்தின் இறைமையை மீட்டெடுக்கும் வரை தியாகங்களை மறவாது மனதில் நிறுத்தி உறிதியாக தமிழ்த்தேசியம் காப்போம்.

இவ்வண்ணம்

மயில்வாகனம் . செந்தூரன்
Share.

Comments are closed.