ஐநாசபை முன்பாக தீக்குளித்த ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

Google+ Pinterest LinkedIn Tumblr +

ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு அவர் தீக்குளித்த ஐநாசபை முன்பாக 13.02.2010 அன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெற்றது.

அத்தோடு தாயக விடுதலைக்காகவும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவும் வீரத்தமிழன் முத்துக்குமார் தொடக்கம் ஈகைப்பேரொளி முருகதாசன் வரையிலான பத்தொன்பது தியாகிகளுக்கும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
 
 முதலாவதாக தேசிய கொடி ஏற்றலுடன் அகவணக்க நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் தந்தையார் அவர்கள் ஏற்றிவைக்க மீதி பதினெட்டு தியாகிகளுக்கும் ஐரோப்பா வாழ் இளையோர்கள் சுடரினை ஏற்றிவைத்தனர். ஆதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும் நடைபெற்றது.
 
 ஈகைப்பேரொளி முரகதாசன் இறுதியாக தீயிட்டு மடிந்த இடத்தில் அவருக்கான நினைவுதூபி வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. கடும் குளிருக்கு மத்தியிலும் கலந்து கொண்ட மக்கள் கண்களில் கண்ணீர் மல்க அவர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
 
 மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகைதந்த இளையோர் யேர்மன் பிரெஞ் ஆங்கில மொழிகளில் தற்போதைய தமிழர் அடக்குமுறைகள் பற்றியும் ஈகைப்பேரொளிகளின் தியாகங்கள் பற்றியும் எடுத்துக்கூறியிருந்தனர். அதேசமயம் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இவ் நிகழ்வில் பல்வேறுபட்ட ஊடகங்கள் கலந்து கொண்டு இவ் நிகழ்வை பதிவாக்கியமை குறிப்பி;டத்தக்கது. 

சுவிசில் நடைபெற்ற விடுதலைத் தீ தீர்மானம்

தமிழீழத் தனியரசுக் கனவுடன் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் விடுதலைத் தீமூட்டித் தன்னுயிரை ஆகுதியாக்கிய ஈகப்பேரொளி – வீரத்தமிழ்மகன் முருகதாசன் மீதும், தமது உயிரை வேலியாக்கி களமாடி வீரகாவியமாகிய மாவீரர்களின் ஈகவரலாறு மீதும், தாய்மண்ணை இறுதிவரை நேசித்து மானச்சாவெய்திய எமது மக்கள் மீதும், மாபெரும் இயங்கு சக்தியாக நின்று இன்றும், நாளையும், என்றும் எம்மையும், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் வழிநடத்திச் செல்லும் எங்கள் பெருந்தலைவர் – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழத் தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும், எமது தேசியக் கொடி மீதும் ஆணையிட்டு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்:

• ஈழத்தமிழர்கள் என்ற தேசிய அடையாளத்தைக் கொண்ட தமிழீழக் குடிமக்களாகிய நாம், எமது பாரம்பரிய – வரலாற்றுத் தாயகமாக விளங்கும் தமிழீழ மண்ணில், எமக்கே உரித்தான தன்னாட்சியுரிமையின் அடிப்படையில், சுதந்திரமும் இறையாண்மையும் பொருந்திய தமிழீழத் தனியரசை நிறுவுவதில் அசையாத உறுதியும், தணியாத வேட்டையும் கொண்டுள்ளோம் என்பதை உலக சமூகத்திற்கு இடித்துரைக்கின்றோம்.

• வரலாற்றுக்கு முந்திய காலம்தொட்டு அரசும், கொடியும், கொற்றமும் கொண்டு ஈழத்தீவில் ஆட்சிசெய்த நாம், எமது தாயக பூமியாகிய தமிழீழ மண்ணில் மீண்டும் சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவி எமது இறையாண்மையை நிலைநாட்டுவதில் உறுதிபூண்டுள்ளோம்.

• எத்தனை இடர்களை எதிர்கொண்டாலும், எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும், எத்தனை இழப்புக்களுக்கு ஆளானாலும், எமது இலட்சியத்தில் இருந்து விலகமாட்டோம் என்றும் இத்தருணத்தில் நாம் உறுதிகொள்கின்றோம்.

அதேநேரத்தில்:

• தேசிய இனமாக விளங்கும் எமது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொண்டு, எமக்கேயுரித்தான எமது தாயக பூமியில் நாமே எம்மை ஆட்சிசெய்வதற்கும், தேசிய அரசுகளின் சமூகத்தில் எமது தமிழீழ தேசமும் இணைந்து கொள்வதற்குத் தேவையான அனைத்துலக அங்கீகாரத்தையும், இராசரீக உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு, ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கும், உலக சமூகத்திற்கும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

• தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான மக்களாணை வாக்கெடுப்புக்களை நாம் நிகழ்த்துவதற்கு தாராண்மை – சனநாயக நல்லாட்சி கொண்ட மேற்குலக தேசங்கள் இடமளித்து ஒத்துழைப்பு வழங்கியமை போன்று, எமது தமிழீழ தாயக பூமியில் எமது உறவுகளும் நிகழ்த்துவதற்கு வழிவகைசெய்து, தமது அரசியல் தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்கான அரசியல் இடைவெளியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்திடமும், உலக சமூகத்திடமும் நாம் கோருகின்றோம்.

எமது இந்தக் கோரிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு ஏதுவாக:

• தமிழீழ தாயக பூமியை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள அந்நிய ஆயுதப் படைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் வெளியேற்றுவதற்கும்;

• தமது சொந்த நிலங்களில் எமது உறவுகளை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கும்;

• நவநாகரீக உலகின் மனச்சாட்சிக்குப் பெரும் கேடாக விளங்கும் வதைமுகாம்களை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கும்;

• எமது தாயக பூமியில் சிங்கள அந்நியக் குடியேற்றங்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும்;

• எமது மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்புப் பொறிமுறைகளை எமது தாயக பூமியில் ஏற்படுத்துவதற்கும்;

• எமது மக்களின் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கும்;

• எமது மக்களை மனிதநேய உதவிகள் சென்றடைவதற்கும்;

• மூன்று தசாப்தகால இடைவெளியில் இரண்டரை இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவித்து இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழித்தொழிப்பையும், இனப்படுகொலையையும், இனச்சுத்திகரிப்பையும் அரங்கேற்றிய சிறீலங்கா அரசையும், அதன் ஆட்சியாளர்களையும், ஆயுதப் படைகளையும், நீதியின் முன்னிறுத்துவதற்கும்;

• சிறீலங்கா அரசு மீதும், அதன் ஆட்சியாளர்கள் மீதும், ஆயுதப் படைகள் மீதும் இனவழித்தொழிப்பு, போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் போன்ற சட்டபூர்வத் தளங்களில் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கும்;

விரைவாகவும், காலம்தாழ்த்தாதும், காத்திரமான முறையிலும் நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

விடுதலை கிட்டும் வரை எமது விடுதலைத் தீ அணையாது!
தனியரசை நிறுவும் வரை எமது சுதந்திரத் தாகம் தணியாது!

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

 FOTO: CLICK HERE

Share.

Comments are closed.