
தாயகத்தில் ஏற்பட்டிருந்த மனிதப்பேரவலத்தின் தாக்கத்தால் தன்னெழுச்சி கொண்ட தமிழ் உறவுகள்
தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துங்கள்
தமிழர் தாயக போர்ப்பிரதேசத்திற்குள் மனிதநேய தொண்டு நிறுவனங்களை அனுமதியுங்கள்
உணவு மருந்து உட்பட்ட அத்தியாவசியப்பொருட்களை அனுப்புங்கள்
சுயாதீன ஊடகவியலாளர்களை அனுமதியுங்கள்
போன்ற அடிப்படை மனித நேயக்கோரிக்கைகளை முன்வைத்தும் சிங்கள இனவெறி அரசின் சர்வதேச நியமங்களையும் மனிதாபிமான வரைமுறைகளையும் மீறிய அரக்கத்தனத்தைக் கண்டித்தும் கனடிய அமெரிக்க மற்றும் ஐநா அதிகாரமையங்களை நோக்கி,
2009,ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00 மணியளவில் மொன்றியல் நகரப்பகுதியில், ரெனிலெவெஸ்க் மற்றும் சென் அலெக்சாந்திரா சந்திப்பில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதுவராலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டமானது கடந்த யூலை மாதம் 10 ஆம் திகதி இரவு 10:00 மணியுடன் தொடர்ச்சியான கவனயீர்ப்பின் 75 நாட்களை பூர்த்தி செய்தது. தொடர்ந்து யூலை,17,2009 தொடக்கம் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் காலை 10:00 மணி தொடக்கம் இரவு 10:00 மணிவரைக்குமாக நடைபெற்று வந்தது.
மனிதச்சங்கிலிப் போராட்டமாகவும், ஊடாக முற்றுகைப் போராட்டமாகவும், மெழுகுவர்த்திக் கவனயீர்ப்பாகவும், வீதியோர நடைபயணமாகவும், வீதிமறியல் போராட்டமாகவும், அமைதிப் போராட்டமாகவும், ஊர்திப் பவனி கவனயீர்ப்பாகவும் பல்வேறு வடிவ மாற்றத்துடன் தொடர்ந்த இத்தொடர் கவனயீர்ப்பில் வெயில் மழை பனி என காலநிலை மாறிவந்த போதும் அவற்றிற்கெல்லாம் முகம்கொடுத்து எமது உறவுகளின் உயிர்காக்கவும் தமிழர்களின் உரிமைக்காகவும் உறுதியோடும் கடமை உணர்வோடும் வீதியிறங்கிய உறவுகளினதும் உணர்வாளர்களினதும் பயணம் தொடர்ந்து வருவதுடன் தமிழரின் தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை நோக்கிய பயணத்திற்கும் வலுச்சேர்த்து நிற்கின்ற இத்தொடர் கவனயீர்ப்பானது,
தற்போது குளிர்கால கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு 25.09.2009 வெள்ளி தொடக்கம் பிரதி வாரமும் பிற்பகல் 3:00 மணி தொடக்கம் இரவு 8:00 மணிவரைக்குமாக நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழினப் படுகொலை செய்து கொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டின் முன் நிறுத்துவோம்
வதைமுகாம்களில் சிறைப்பட்டுள்ள எமது உறவுகளை மீட்டெடுத்து மீள்குடியேற்றுவோம்
சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம்
என்னும் உறுதிமொழியுடன் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
ஊடகப்பிரிவு
கியுபெக் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு