கரும்புலிகள் நாள் 05.07.2017

Google+ Pinterest LinkedIn Tumblr +

“நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;”

நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை, எமனுக்கும் அஞ்சுவதில்லை..! என்ற இலக்கணத்துக்கான உருவம் தான் கரும்புலிகள்.!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடை நீக்கிகளாக தம்மையே உயிராயுதமாக்கி தம் இனத்திற்காக உடலோடு வெடிசுமந்து எதிரியின் பலத்தை தகர்த்தெறிந்த இரும்பு மனிதர்கள்.

மண்மீதும், தன் மக்கள் மீதும் கொண்ட அளவற்ற நேசிப்பால் முகம் மறைத்து, முகவரி மறைத்து எத்தனையோ பெரும் தாக்குதல்களை நடாத்தி சாதனைபடைத்த அற்புதங்களை நினைவுகொள்ளும் நாள் புனிதமானது.

யாழ்- வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரமரணமடைந்த கப்டன் மில்லர் என்ற போராளியே, விடுதலை போராட்டத்தின் பேரோளி..! முதலாவது கரும்புலி..! இன்றோடு முப்பது ஆண்டுகளை கடந்து நிற்கிறோம். மாவீரர் கனவுகளை நெஞ்சில் கனலாக்கி அவர்களின் இலட்சிய பாதையில் இரண்டறக் கலந்து நிற்கிறோம்..!

இமாலய சாதனைகளை படைத்து வீரகாவியமாகி இன்றும் வெளியில் தெரியா மாணிக்கக் கற்களாய் ஈழவரலாற்றுப் பக்கங்களில் மறைந்து கிடக்கும் தேசப்புயல்களை நினைத்து தலைசாய்த்து வணங்கி பணிசெய்வோம் என இன் நாளில் உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

எமது போராட்டம் நியாயமானதாகவோ அல்லது சத்தியத்தின் வழி நிற்பதினாலோ இந்த உலகம் எமக்கு சாதமாக நிற்கப்போவதில்லை. நாம் பலம் பொருந்தியவர்களாகவும் தகுதியுள்ளவர்களாகவும் எம்மை மாற்றிக் கொள்வதனாலேயே இந்த உலகம் எமக்கான நீதியைப் பேசும். அதற்கு ஏற்றவகையில் உலகத் தமிழ் இளையோர் அமைப்புக்கள் ஒரு பலம் வாய்ந்த அமைப்புகளாகச் செயற்பட்டு ஒரு உயரிய நோக்கத்துடன் தாம் வாழும் நாடுகளில் கிடைக்கக்கூடிய அறிவியல், பொருளாதார வளங்களைப் பயன்படுத்தி தம்மைப் பலப்படுத்தி எம்மினத்தின் விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும்.

எம்தியாகமும் உறுதியும் தான் எமது போராட்டத்தை வளர்த்தது. உலகிற்கு பறைசாற்றியது. அதே உறுதியுடன் தொடர்ந்து செல்வோம். வரலாறு எமக்காக மீண்டும் வரும்.

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு

Share.

Comments are closed.