சமஷ்டி போன்றே அதிகாரப் பகிர்வும் இலங்கையில் காணாமற் போய்விடும்: கேணல் ஹரிகரன்

Google+ Pinterest LinkedIn Tumblr +

சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போது எல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள்; செய்வார்கள். அவர்கள் முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி பற்றிப் பேசினார்கள். இப்போது அதனைத் தூக்கி வீசி விட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள்.
சமஷ்டி போன்றே எதிர்காலத்தில் அதுவும் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய்விடும். இந்தியாவின் அரசியல் ஆய்வாளரும் இலங்கை அரசியல் பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான கேணல் ஹரிகரன் இவ்வாறு தனது நீண்ட கட்டுரை ஒன்றில் எதிர்வு கூறியுள்ளார்.
இந்தியப் படையினர் இலங்கையில் இருந்தபோது அதனது புலனாய்வுத்துறையின் தலைவராகச் செயற்பட்டவர் கேணல் ஹரிகரன். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கீழான சிறிலங்கா அரசு, நாட்டின் சுதந்திரத்திற்கான போர் என்ற கூச்சலுடனேயே விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டைக்குத் தான் சென்றதாகக் கூறியது.
மக்கள் அவர்கள் பேசும் மொழியின் அடிப்படையில் பாகுபடுத்தப்படாது வாழும் ஒரு நாடு பற்றிய கனவு குறித்தும் அது பேசியது. இப்போது, பெரும் தொகையான ஆட்களையும் பொருள்களையும் அழியக் கொடுத்து போரை முடித்துவிட்ட பிறகு, அங்கு மேற்கிளம்பவரும் சமூக அரசியல் சூழல் அந்தக் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கவில்லை.
அந்தக் கனவு கனவாகவே போய்விடக்கூடும். இப்போது ஒன்று தெளிவாகிவிட்டது, இலங்கை அரசியலில் வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கிற சொற்களின் பட்டியலில் “சமஷ்டி” போன்றே “அதிகாரப் பகிர்வு” என்ற சொல்லும் தூக்கி வீசப்பட்டுவிடும். அந்தப் பட்டியலில் “சிறுபான்மையினர்” என்ற சொல்லும் விரைவில் சேர்ந்துகொள்ளக்கூடும்.
Share.

Comments are closed.