சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த சிங்கள ஊடகவியலாளர் கைது

Google+ Pinterest LinkedIn Tumblr +

சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த சிங்கள ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

பாதுகாப்பு அமைச்சக செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிஷன் படையணி தளபதி சவீந்திர டி சில்வா,சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு, அப்போது அங்கிருந்த சிங்கள ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார்.

இந்த தகவலை இலங்கை அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொன்சேகா, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் இலங்கை அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்தியது.

தற்போது அதிபர் தேர்தல் முடிந்து ராஜபக்ச மீண்டும் வெற்றிபெற்றுள்ள நிலையில், மேற்கூறிய சிங்கள ஊடகவியலாளரை சிறிலங்கா குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரச தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று சிறப்பு அறிவுறுத்தலுடன் பாதுகாப்பு அமைச்சகத்தினால் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இந்த பட்டியலில் மேற்படி ஊடகவியலாளரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து, குறிப்பிட்ட ஊடகவியலாளரை தேடி அனுப்பப்பட்ட குற்ற புலனாய்வு பிரிவின் விசேட குழுவினர் அவரை கடந்த வெள்ளி இரவு கைது செய்துள்ளனர்.

பொன்சேகா தலைமையிலான குழுவினரின் பேச்சாளராக பணியாற்றும் பொறுப்பு, பொன்சேகா தரப்பினரால் இந்த ஒரு ஊடகவியலாளருக்கே வழங்கப்பட்டிருந்தது என்று குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.