சிறிலங்கா இறைமையை அவமதிக்கும் மிலிபாண்ட் – கடும் சீற்றத்தில் இலங்கை அரசாங்கம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

கடந்த வாரம் பிரிட்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டமை மாபெரும் குற்றம் என்று இலங்கை அரசு கண்டித்துள்ளது.

மிலிபாண்ட் அங்கு வெளியிட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அவை இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடு என்றும் சீற்றத்துடன் கண்டித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் ஜி.எல். பிரீஸ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டதே முதல் குற்றமாகும். அங்கு அவர் உரையாற்றியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகத் தமிழர் பேரவை என்பது இலங்கையைக் கூறுபோடும், நாட்டை அழிக்க நினைக்கும் இயக்கமாகும்.

இவ்வாறான ஓர் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வது என்பது அதன் செயற்பாட்டை அங்கீகரிப்பதற்கு நிகராகும். உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபாண்ட் கலந்து கொண்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது. இது இலங்கையின் இறைமைக்கு எதிரான செயற்பாடு.

உலகத் தமிழர் பேரவை நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிக்கிறது என்றார் . உலகத் தமிழர் பேரவை இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இது இலங்கைக்கு எதிரான ஒரு பிரசார நடவடிக்கை என்றும் அமைச்சர் பிரீஸ் சொன்னார்.

 

Share.

Comments are closed.