மிகப்பெரிய மனித பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் பட்டியலை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு (M.S.F) வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையையும் அது பட்டியலிட்டுள்ளது. பாகிஸ்தான், சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஏமன், கொங்கோ ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன.
மோதல்களின் போது பொதுமக்கள் அவர்களுக்கான உயிர்க்காப்பு உதவிகளை பெறுவதில் இருந்து தடுக்கப்படுவது அதிகரித்து வருவதாக பிரான்சைத் தளமாகக் கொண்டு செயற்படும் எம்.எஸ்.எஃப் அமைப்பு கூறியிருக்கிறது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசாங்கத்தின் இறுதிக்கட்டப் போரின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் உதவிகள் துண்டிக்கப்பட்டும், மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பராமரிப்புடனும் பெரும் அவதிக்கு உள்ளானதாகவும் அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது.
இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற வேளையில் அந்தப் பகுதிக்கு செல்ல தாம் அனுமதிக்கப்படவில்லை என்றும், மோதல் வலயத்ததுக்கு வெளியேயே தாம் பணிசெய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பைச் சேர்ந்த வனசா வான் ஸ்கோர் தெரிவித்தார். அதனால் தாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.