சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சிறீலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை நன்கு ஆராய்ந்த பின்னரே தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் இந்த விடயத்தில் சிறீலங்கா அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை தற்காலிகமானது என்றும் மனித உரிமை குறித்த விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் திருப்திகரமான விதத்தில் செயற்படும் பட்சத்தில் தமது நிலை மீளாய்வு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை பிரசல்சில் உள்ள சிறீலங்காத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார். தான் இந்தத் தகவலை கொழும்புக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் இது குறித்த அரசாங்கத்தின் பதில் நாளைய தினம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்