சிவந்த மே

Google+ Pinterest LinkedIn Tumblr +

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு
ஊடக அறிக்கை

வருடம் ஒன்றானாலும் எம் உறவுகளின் கதறல்கள் எம் நெஞ்சைவிட்டுப் போகவில்லை…
காலங்கள் கரைந்தோடினாலும் காவியமாகிய மாவீரர்கள் எம் மனதில் சாவதில்லை…
ஈழத்தமிழரின் விடுதலைகாணும் வரை இளையோர் நாம் ஓயப்போவதில்லை…

 “மே மாதம்” எமது ஈழ வரலாற்றில் ஒரு இனப்படுகொலையில் அம்சமான கூட்டுப்படுகொலை என்றபெரும் இடிவிழுந்த மாதம்;. கடந்த 54ஆண்டுகளாக நடந்த தமிழினப் படுகொலையின் அதிஉச்ச கோர நினைவுகளைச் சுமந்தமாதம். வருடம் ஒன்றானபோதும் எம் உறவுகளின் கதறல்களும் மரணஓலங்களும் எம் செவிப்புலன்களைவிட்டு அகலவில்லை. மரணித்த எமது உறவுகளின் பூதவுடல்களுக்;கு இறுதிஅஞ்சலிகூடச் செலுத்தமுடியாது எமது சமூகம் செய்வதறியாது தவித்துநின்றது. மானுடத்தின்பேரால் நீதிக்காய் ஏங்கிநின்றோம் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. வாழ்வதற்கான போராட்டம் தொடரட்டும் அதேவேளை, ஒவ்வொரு திசைகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டு ஓரிரு நாட்களில் பல்லாயிரம் உயிர்களைப் பறித்த இந்த மே நாளை தமிழினத்தின் துக்கநாளாக சுவிஸ்வாழ் தமிழர்கள் நாமும் நினைவுகூருவோம்.

கடந்த ஆண்டு எமது இனத்தின்மீதான பாரிய படுகொலைத் திட்டத்தை சிங்கள அரசு முன்னெடுக்கும் என்று உலகின் பெரும்பான்மையான நாடுகளில் வீதி வீதியாய் போராடினோம். உண்ணாவிரதம் இருந்தோம். ஏன் தீயில் கூட தங்களை அற்பணித்தனர். ஆனால் சர்வதேசமோ பார்த்தும் பார்க்காமல் இருந்தது. அது மட்டும் இன்றி இவர்களே துணைபோனார்கள். வயதுவேறுபாடின்றி ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் கோரமாகக் கொல்லப்பட்டனர். இன்னமும் எம் இனம் அங்கு முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
 
இதையெல்லாம் மறைத்துவிட்டு பயங்கரவாத சிங்கள அரசு தன் வெற்றி விழாவை எமது மண்ணிலே, எம் உறவுகளின், எம் மாவீரர்களின் உடல்களின்மீது கொண்டாடுகிறது. இதை நாம் பார்த்துக்கொண்டு அமைதி காக்கபோகின்றோமா?

தமிழீழம் எங்கும் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு சிங்கள மயமாகி வருகின்றது. மாவீரர் துயிலும் இல்லங்கள் இடிக்கப்படுகின்றன. சிங்கள மொழி தமிழர்களின் மொழியாக்கப்படுகின்றது. எமது கலாசாரமோ அழிக்கப்படுகின்றது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டும் எகுழியாக சில புலம்பெயர் தமிழர்கள் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். இது எம்மை வருந்தவைக்கின்றது.

எம் அன்பான சுவிஸ் தமிழ் உறவுகளே, சர்வதேசத்தின் மௌனத்தோடு நடாத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கையின் மே 2009 முள்ளிவாய்க்கால் கூட்டுப்படுகொலை நிகழ்வில் படுகொலைசெய்யப்பட்ட எம் உறவுகளின் ஆத்மசாந்திக்காக அனைவரும் ஒன்றுகூடிநின்று பிரார்த்திப்போம். உரிமைகளோடு வாழவிரும்பிய தமிழினத்திலிருந்து ஆயிரமாயிரம் உறவுகள் சிறைக்குள் சித்திரவதைக்கு உட்பட்டிருப்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை எடுத்துரைப்போம். அவர்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் குரல்கொடுப்போம். எமது பூர்வீகத் தாயகம் விடுதலைபெற்று, நாம் எமது தாய்மண்ணில் சுதந்திரமாக என்றோ ஓர் நாள் கால் பதிப்போம் என்ற உறுதியை உலகிற்கு வலியுறுத்துவோம்.

எம் இனம் இன்னும் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் காலங்களை கழிக்கின்றார்கள். இவர்களின் விடிவும், எமது எதிர்கால கௌரவமான வாழ்வும் புலம்பெயர் தமிழர்களாகிய எங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. உலகின் துணையின்றி சிங்களம் எம்மை அடிமைகொண்டிருக்க முடியாது. உலகின் நீதிதேவதையை உலுப்பக்கூடியவர்களாக நாம் எளவேண்டும். ஆண்டான் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுபடவேண்டும். தமிழனின் தேசிய உரிமையினை தமிழன் தலைநிமிர்ந்து கேட்கவேண்டும். அடிமைகள் ஆண்டதாக வரலாறு இல்லை. நாம் அடிமைகள் இல்லை. ஆக்கிரமிப்பாளர்களோ பயங்கரவாதிகளோ அல்லர். நாம் தேசத்தில் நேசம்மிக்க மானுடநேயர்கள் என்பதை உலகம் வெட்கித் தலைகுனிந்து என்றோ ஓர் நாள் ஏற்கும் நிலைதோன்றும். அந்த நிமிடங்களிற்காய் நாம் உழைப்போம்.

மே 15ம் திகதி சுவிஸ், சூரிச், கெல்வெற்றியா பிளாட்ஸில் நடைபெறவிருக்கும் ‘சிவந்த மே’ நினைவஞ்சலி நாழில் அனைத்து சுவிஸ் வாழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 
                                                                                                                                                           சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு

 

Share.

Comments are closed.