சுவீடனில் மாவீரர் எழுச்சி நிகழ்வுகள் Stockholm Fittjaskolan விழா மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 6 .00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது. நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் தேசிய எழுச்சி உணர்வுடன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.தங்கள் தேசியப் புதல்வர்களுக்கு ஒவ்வொருவரும் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்திய காட்சி இதயத்தை தொடுவதாக அமைந்தது.
Sweden Miljö Party அமைப்பைச் சேர்ந்த Ardavast Reshouni உருக்கமான ஒரு உரை நிகழ்த்தினார். “ஆர்மேனியர்கள் எப்படி இனப்படுகொலை செய்யப்பட்டார்களோ அதே போல் ஈழத் தமிழர்களும் மாபெரும் இனப்படுகொலைகளுக்கும் போர் குற்றங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் இணைந்து செயற்படுவதன் மூலமே நீதி பெற முடியும்” என்றார்.
சுவீடன் தமிழ் பேரவை அமைப்பைச் சேர்ந்த ஜெகன் மோகன் “மாவீரர்களின் தியாகம் அளப்பரிய ஒன்று. புலம்பெயர்ந்த தமிழர்களான நாம் வாழும் நாடுகளின் சட்ட வரம்புக்கு உட்பட்டு அரசியல் பாதையில் எங்கள் சுதந்திரம் வென்றெடுக்கப்பட வேண்டும்.
மாவீரர்கள் தம் உடலை திரியாகவும், உதிரத்தை எண்ணெயாகவும், உயிரை சுடராகவும் தந்து ஏற்றிய தியாகச் சுடரைத்தான் நாம் இன்று உலகெங்கும் ஏற்றுகிறோம்.” என்றார்.
டிலா கீர்த்திராஜ் உணர்ச்சிக் கவிதை ஒன்றை வாசித்தார். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி இறக்கத்துடன் இந்நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன