டென்மார்க்கில் கொல்பேக் நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

Google+ Pinterest LinkedIn Tumblr +

டென்மார்க், கொல்பேக்கில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவானோர் வருகை தந்து, தமிழீழ தாயக விடிவிற்காக போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் சூரியப் புதல்வர்களுக்கும், அப்போரில் அன்னிய இராணுவத்தாலும் இரண்டகர்களாலும் கொல்லப்பட்ட எம் உறவுகளுக்கும் ஈகைச்சுடர் ஏற்றியும் மலர்தூவியும் தமது வீரவணக்கத்தை தெரிவித்தனர். 27-11-2009 மாலை 17:00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கன மக்கள் கலந்துகொண்டு தங்கள் அஞ்சலிகளை செலுத்தினர்.

கப்டன் பாண்டியன் அல்லது லோக்கர் எனப்படும் இராசையா சசிக்குமாரின் சகோதரன் தேசியக்கொடி ஏற்ற, வீரவேங்கை தீபன் எனப்படும் பேபியன்ஸ் காமினியின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றினார்.

 அதனைத் தொடர்ந்து தமிழீழத்திலிருந்து அனுப்பப்பட்ட உறுதி அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. பின்பு துயிலும் இல்லப்பாடல் ஒளிபரப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாவீரர் கல்லறைகளுக்கும் திருவுருவப் படங்களுக்கும் மாவீரர் குடும்பங்கள், மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள், தமிழ் மக்கள் ஆகிய அனைவரும் தமது வணக்கத்தைச் செலுத்தினார்கள்.

அதன்பின்பு இங்கு மாவீரர் கானங்கள், சிறப்புரை, எழுச்சி நடனங்கள், நாட்டிய நாடகம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் இறுதியில் தமிழ் மக்களால் தமிழீழ தனியரசிற்காக அயராது உழைப்போம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் என்ற பாடல் ஒலிக்கப்பட்டு, தேசியக்கொடி இறக்கத்துடன் இந்நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.


 

Share.

Comments are closed.