தனித் தமிழீழ இலக்கினை அடைய உலகத் தமிழர்கள் சூழுரைக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.ஒளி பிறந்து நம்மை சூழ்ந்துள்ள அவல இருள் விலகும் என்ற நம்பிக்கையோடு 2010ஆம் ஆண்டினை வரவேற்போம். கடந்துபோன ஓராண்டு கண்ணீரும் தாங்கொணாத் துன்பமும் அதிர்ச்சியும், தமிழினத்திற்கு விளைவித்த ஆண்டாக கழிந்துள்ளது.
இருளுக்கு பின்வெளிச்சம், இரவுக்கு பின்விடியல், வாட்டும் பனிக்குபின் வளம் தரும் வசந்தம், எனும் நியதியில் நம்பிக்கை கொள்வோம். கொல்கதாவில் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்திய யேசு நாதர் கொடூரமான ரணங்களை சிலுவைப்பாடாக சுமந்தபோதும், அவர் பிறந்தநாளில் இருந்து எட்டாவது நாளையே காலஓட்டத்தில் தீர்மானிக்கும் ஆண்டின் முதல் நாளாக உலகம் ஏற்றுக்கொண்டது.
அநீதியும் துன்பமும் நம்மை வளைத்தாலும், அவற்றை எதிர்கொண்டு, போராடவே நாம் வாழ்கின்றோம், தமிழக் குலத்தின் நெடிய வரலாற்றில் எக்காலத்திலும் ஏற்படாத அழிவும் இழிவும், 2009ல் நிகழ்ந்தன. ஈழத்தீவில் நெஞ்சை நடுங்கச் செய்யும் கோரமான தமிழினப் படுகொலையினை சிங்கள இனவாத கொடிய அரசு நடத்திட இந்திய அரசு உடந்தையாக இருந்து பெருந்துணைசெய்த துரோகம் நம் இதயத்தை பிளந்த சோகம் ஆயிற்று.
அவுஸ்திரேலியா, சூடான், கேமரூன், சமோவா, புருனோ, செக்குடியரசு, ஸ்லோவேக்கியா, ஆகிய நாடுகள் சுதந்திர நாடுகளாக விடுதலை பெற்ற நாள் ஜனவரி முதலாம்நாள். கருப்பர்களின் அடிமைத்தளைகளை நீக்கிட ஆபிரகாம்லிங்கன் 147 ஆண்டுகளுக்குமுன் விடுதலைப் பிரகடனம் செய்தநாளும் சனவரி முதலாம்நாள்தான். கொடும் துயரில் வதைபட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ் துன்பத்தை நீக்கும் விடியல் என்பது சுதந்திர தமிழீழம்தான் என்பதால் தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை தனிஈழப்பிரகடனம் எனும் இலக்கனை வென்றிட தரணிஎங்கும் உள்ள தன்மானத்தமிழர்கள் சூழுரைப்போம் என்று தெரிவித்தார் வைகோ.
மேலும் அவர் தெரிவிக்கையில்:
தென்தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு உரிமைக்கும் தென்னாட்டு மக்களின் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தும் தீங்கினை கேரள அரசின் அக்கரமான போக்கினால் கொடவாளாய் தலைக்குமேல் தொங்குகின்றது. வேளான் விளை நிலங்கள் எல்லாம் பன்நாட்டு கம்பனிகள் மற்றும் ஆலைகள், குடியிருப்பு, கட்டடங்கள் என மாற்றப்படுகின்றது.
அறம் வெல்லும் நிச்சயம் நீதி எவ்விதத்திலும் நிலைபெற்றே தீரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்விலும் வளம் காணவும் உரிய சூழ்நிலை மலர 2010ஆம் ஆண்டு பாதை அமைக்கவேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக்கழக செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.