தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது.

ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம்.
 
காலம் காலமாக அரசியல் அனாதைகளாக இருந்த எம் இனத்தை தலைநிமிர்ந்து நடக்க வைத்த கரிகாலன் ஈழத்திலே வந்துதித்த நாளாகவும் (கார்த்திகை-26), தமிழர் நிமிர்விற்கு முதல் வித்தாகி வழிகாட்டிய மாவீரன் லெப்டின்ட் சங்கர் வீரச்சாவடைந்த நாளும் (கார்த்திகை-27)  சேர்ந்ததனால் கார்த்திகை மாதமே பெருமை அடையும்படி அமைந்துவிட்டது.

அவ்வாறு சிறப்புப் பெற்ற கார்த்திகை 27 அன்று எம் பெரும் தலைவன் ஆற்றும் உரை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கடந்த கால கார்த்திகை மாத அந்த நாட்களை அசை போட்டுப் பார்த்தால் ஒவ்வொரு தமிழனும் தலைவன் உரை கேட்டு உற்சாகத்துடன் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தி நெக்குருகி நின்று தியாகச் சுடர் ஏற்றுவதோடு நின்று விடாது புதிய புலிகளாக புறப்படும் காட்சிகள் மனத்திரையில் தோன்றி சிலிர்க்க வைக்கின்றது.

ஆனால் இந்த கார்த்திகை 27 என்றும் இல்லாதவாறு மாறுபட்ட எதிர்பார்ப்புடனே இம்முறை அமைந்துள்ளது. மே மாத முள்ளிவாய்க்கால் சமர்க்களத்தின் விவரிப்புக்கள் பலவாறாக அமைந்ததனால் ஏற்பட்ட குழப்பகரமான நிலைக்கு இன்றுவரை எந்தவித திருப்திகரமான பதில்களும் அமைந்து விடவில்லை.

அதனால் தலைவர் உரையில் என்ன விடயம் இடம்பெறும் என்பதை விடுத்து தலைவர் உரையாற்றுவாரா… இல்லையா… என்ற எதிர்பார்ப்புடன் கூடிய தவிப்பே உலக தமிழர்களது நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றது.

இப்போதைய நிலையில் கடவுள் என்றொரு சக்தி இருந்தால் தமிழர்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்பதற்கு முன்னரே தலைவரது இருப்பு தொடர்பான கேள்வியே எழும்.

தலைவர் இருந்தால் போதும் மற்றவைகளை நாம் பார்த்துக் கொள்வோம் என்ற மனநிலைக்கு கடந்த பல மாதங்களில் ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களும், அவை ஏற்படுத்திய மனச்சோர்வுமே காரணமாகும். அந்நிலை முற்றிலும் உண்மையானதும் அர்த்தமுள்ளதுமான எதிர்பார்ப்பாகும்.

அனைத்துலக ரீதியிலான விடுதலைப்பணி தற்போதும் முன்னெடுக்கப்பட்டுவரினும் முன்னரைப்போன்ற வீச்சு அற்றதாகவே காணப்படுகின்றது.

தலைமை தொடர்பான மாறுபட்ட செய்திகளால் ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாக செயலற்றவர்களாக மாறியவர்கள் போக இதனையே காரணமாகக் கொண்டு பிளவுகளை ஏற்படுத்தி தனி ஆவர்த்தனம் செய்ய முற்பட்டவர்கள் என இருவகையிலானவர்களது எதிர்பார்ப்பிற்குரிய நாளாக கார்த்திகை 27அமைந்து விட்டது.

மனச்சோர்வடைந்து விட்டவர்கள் தலைவர் மீள் வருகையினை அடுத்து புதிய உற்சாகத்தோடு களம் காண காத்திருக்கையில் இரண்டாமவர்கள் அவமானப்பட்டு ஒதுங்கி நிற்கவோ இல்லை குழப்பகால செயற்பாடுகளை மறந்து மீண்டும் ஒன்றிணைந்து கொள்ளவோ வாய்ப்பை ஏற்படுத்தும்.

மாறாக எதிர்வரும் 27ம் திகதி தலைவர் நேரில் தோன்றாவிடில் மனச்சோர்வடைந்தவர்கள் முற்றிலுமாக எமது விடுதலைப்போராட்ட பயணத்தில் இருந்து தம்மை விடுவித்து கொண்டு ஓய்வெடுக்க முற்படலாம். ஆனால் இரண்டாமவர்கள் இதுவே தமக்குரிய களமாக கருதி உணர்வாளர்களை மேலும் மேலும் நம்பிக்கை இழக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடலாம்.

தமிழின விடுதலை என்ற பரந்துபட்ட இலட்சியத்தினை தமது மூச்சிலும் மேலாக கருதி களமாடிவந்த தலைவரது வருகையினை எமது குறுகிய நலன்களுக்குள் இவ்வாறு வரையறை செய்து கொள்ளவேண்டிய துர்ப்பார்க்கிய நிலையில் நாமுள்ளோம் என்பதே வேதனை மிக்கதாக உள்ளது.

இதனையே எதிரியானவன் விரும்பினான். எமக்குள் பிளவுபட்டு தமிழீழ விடுதலை, தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை ஆகிய அடிப்படை கொள்ளையில் இருந்து விடுபட்டு உணவு, மருந்துப் பொருட்களுக்கும் கையேந்துபவர்களாகவும், வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே விட்டாலே போதும் என்ற நிலைக்கும் எமது போராட்ட இலக்கினை சிறுமைப்படுத்தி கொள்ளும் அளவிற்கு சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன.

சாதகமற்ற நிலையில் அமைந்துள்ள புறச்சூழல்

நமது உற்சாகத்திற்காகவும் குழப்பவாதிகளாக உருவாகியுள்ளவர்களது முகத்தில் கரியை பூசுவதற்காகவும் கண்டிப்பாக தேசியத் தலைவர் வெளிப்பட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தை விடுத்து அதற்கேற்ப புறச் சூழல் உள்ளதா என்பதை இவ்விடத்தில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது.

தமிழீழ தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை ஆகிய இலட்சியங்கள் ஏதுமறியாத காலகட்டத்தில் எமது மக்களை கொன்று குவிக்கும் சிங்களவனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தோடு களமாட புறப்பட்ட பதினைந்து வயது பிரபாகரனை அப்போது யாரும் கண்டு கொண்டதில்லை.

இராணுவ அச்சுறுத்தல் நெருக்கடிகள் பலகடந்து முழுமையான கட்டமைப்பை ஏற்படுத்தி தமிழர்களது பாதுகாப்பு அரணாக விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற மாபெரும் இயக்கத்தை கட்டி எழுப்புவதற்கு தலைவர் உள்ளிட்டவர்கள் கொடுத்தவிலை பட்ட துன்பங்கள் யாவரும் அறிந்ததே.

இடைப்பட்ட காலத்தில் காட்டிக்கொடுப்புக்கள், நம்பிக்கைத் துரோகங்கள் போன்ற இடர்பாடுகளையும் தாண்டியே எமது விடுதலை இயக்கத்தை வழிநடாத்தி வந்தார் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். எல்லா இடர்பாடுகளையும் மிஞ்சும் வகையில் தற்ப்போது ஏற்பட்டுவிட்ட நெருக்கடி நிலை முற்றிலும் மாறுபட்டதாகும்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் இதுவரை காலம் கண்டிராத ஒரு நெருக்கடி மிகுந்த காலகட்டமாக இது அமைந்துள்ளது. தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளை உணர்ந்து கொண்டுதானே சிங்களத்துடன் கைகோர்த்து முள்ளிவாய்க்காலில் மிக்ப்பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தியதுடன் எமது விடுதலைப் போராட்டமும் அதன் கட்டமைப்புக்களும் முற்றிலுமாக சிதறடிக்கப்படுவதற்கு துணைநின்றன இந்த சர்வதேச நாடுகள்.

விடுதலைப் போராட்டங்கள் தொடர்பான வல்லரசுகளின் நிலைப்பாடு.

1990 களிற்கு பின்னர் ஏற்பட்ட உலகமய அரசியல், விடுதலைப் போராட்டங்களை தமது சந்தை ஆதிக்கத்திற்கு ஏற்படும் இடையூறாக பார்க்கத் தொடங்கியதன் விளைவே இந் நிலைக்கு அடிப்படையாகும்.

எமது விடுதலைப் போராட்டம் மட்டுமன்றி கடந்த 20 வருடங்களில் 30ற்கு மேற்பட்ட ஆயுதப் போராட்ங்கள் தேசிய தன்னுரிமைக்காக நடைபெற்றுள்ளன. மிகப்பெரும் இரத்தக்களரிக்கு பிறகே சிலவற்றில் உலக நாடுகள் தலையிட்டன.

தத்தமது ஆதிக்க போக்கினை நிலைநிறுத்துவதற்கு ஏற்றவாறாக ருவாண்டா, சோமாலியா, கொசோவா, சூடான் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த தேசியப் போராட்டங்களில் இவ் உலக நாடுகள் தலையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமது தன்னாட்சி உரிமையினை நிலை நிறுத்துவதற்காக போராடும் இனங்கள் ஒடுக்கும் அரசுகளின் இறையாண்மைக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகவே உலக நாடுகளால் நோக்கப்படுகின்றது.

வல்லரசுகளின் ஆதிக்க நலன்களும் அவற்றிகிடையிலான மோதல்களும்தான் இந்நிலைக்கு அடிப்படை காரணம். இருப்பினும் தன்னாட்சிக்கான போராட்டங்களில் எந்தவகையில் எத்தகைய சூழலில் உலக நாடுகள் தலையிடலாம் என்பதற்கான தெளிவான சர்வதேச சட்டங்கள் இல்லாததும் அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது.

இதனால் தன்னாட்சி கோரிக்கையும், நாட்டின் இறையாண்மையும் எதிரெதிராக நிறுத்தப்படுவதற்கு எளிதாகிறது.

அவ்வாறே தன்னாட்சிகோரி புறப்படுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அடக்கி ஒடுக்கியும் அரச பயங்கரவாதத்தை தட்டிக்கொடுத்தும் தமது பிராந்திய ஆதிக்கத்தை உறுதி செய்து வருகின்றன உலக வல்லரசு நாடுகள்.

உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய கட்டுக்கோப்பை பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கடமைகளை தேசியத் தன்னுரிமைப் போராட்டங்களிற்கு எதிராக நிறுத்துவது வழமையாக நடந்து வருகின்ற ஒன்றே. 1980ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் ஆணைக்கிணங்க தேசிய தன்னுரிமை பற்றி விவாதித்து அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்டவர்களுள் ஒருவரான கெக்டர் குரோசு எசுபீல்  (Hector Gros Espiell) கூறுகையில்:

தற்போதைய சர்வதேச மெய்நிலையை கணக்கில் கொண்டால் தேசிய இனமக்களின் தன்னுரிமை என்பது வேறு எந்த சட்ட உரிமைகளையும் விட முதன்மை பெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது என தெளிவுபடுத்துகிறார்.

தேசிய தன்னுரிமை அமைதிவழியில் மறுக்கப்படும் போது ஆயுத மோதல்களாக வடிவெடுக்கின்றது என்று கூறும் எசுபீல், அந்த மோதலை உள்நாட்டுப் போராக வரையறுக்கக் கூடாது, அது தேசங்களுக்கிடையில் நடக்கும் மோதல் என்பதாகவே பார்க்கப்பட வேண்டும் எனவும் தெளிவுபடுத்துகின்றார்.

தேசிய தன்னுரிமை பற்றி விவாதித்து அறிக்கை தாக்கல் செய்த மற்றொருவர் தெரிவிக்கையில் “தெளிவான வரையறுக்கப்பட்ட எல்லைப்பகுதியில் தன்னாட்சி நடாத்திய வரலாறும், தனித்த பண்பாடும், இழந்த தன்னாட்சியை மீண்டும் பெறுவதற்காண பொதுவிருப்பமும் ஆற்றலும் உள்ள (தேசிய இனம்) மக்களே தேசிய தன்னுரிமை பெறத் தகுதி பெற்றவர்கள் என வரையறுத்து கூறுகின்றார்.

இவ் இரு அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பல்வேறு உறுப்பு நாடுகளிடம் விரிவான கருத்து கேட்கப்பட்டு பின்னர் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆவணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் தேசிய தன்னுரிமைப் போராட்டங்களை ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும் என்ற மனிதநேய ஆர்வலர்களது குரல்கள் தொடர்ந்து ஒலித்ததன் காரணமாக 2000ம் ஆண்டு ஆவணி மாதத்தில் தேசிய தன்னுரிமை குறித்த முதல் உலக மாநாடு செனீவாவில், அய்க்கிய நாடுகள் சபையினால் கூட்டப்பட்டது. பலதரப்பட்ட சட்ட அறிஞர்கள் பல கோணங்களில் ஆய்வறிக்கைகளை இம் மாநாட்டில் முன்வைத்தனர்.

சட்ட வல்லுனர் கரேன் பார்க்கர் அம்மையார் (Karen Parker) தமது ஆய்வறிக்கைகளில் தமிழீழம், திபெத், காசுமீரம், மேற்கு சகாரா போன்ற தேசிய இனப் போராட்டங்களை வரலாற்று வழிப்பட்டு விளக்கமாக முன்வைத்தார்.

குறித்த தேசிய இனங்கள் எவ்வாறு ஏகாதிபத்திய நாடுகளால் ஆளப்பட்டு பின் விட்டு செல்லும் போது பல்வேறு தேசிய இன மக்களை ஒன்று சேர்த்து ஒற்றை ஆட்சி கோட்பாட்டின் கீழ் ஓர் குறித்த இனத்தவரிக் கைளில் ஆட்சி அதிகாரங்களை ஒப்படைத்து சென்றதையும் குறிப்பிட்டு அதனால் ஏற்பட்ட அதிகார கையாடல் மூலம் ஏற்பட்ட இனப்பிளவை சரிசெய்வதே ஐக்கிய நாடுகள் சபையின் கடமை என்று கரேன் பார்க்கர் அம்மையார் வலியுறுத்தினார்.

செப்டெம்பர் 11 தாக்குதலும், தன்னுரிமை கோரும் இனங்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகளும்.

இவ்வாறு உலகளாவிய ரீதியில் தன்னாட்சி உரிமைக்காக போரடிவரும் தேசிய இனங்களது நியாயபூர்வத் தன்மையினை ஏற்றுக் கொள்ளும் ஏது நிலை உருவாகி வந்தவேளையில்தான் 2001 செப்டெம்பர் 11ல் நடைபெற்ற அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்புச் சம்பவம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது.

செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் உலகில் நடைபெற்றுவரும் அனைத்து உரிமைப் போராட்டங்களையும் பயங்கரவாதம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் வரையறுப்பதில் உலக வல்லரசு நாடுகள் பெருமளவில் வெற்றி அடைந்தன.

பயங்கரவாத அடைமொழி வழங்கப்பட்ட பின்னர் தன்னாட்சி கேட்டு போராடி வந்த தேசிய இனங்களும் அவை சார்ந்த போராட்ட இயக்கங்களும் முற்றிலும் மாறுபட்ட நெறிமுறைகளை கையாள வேண்டிய நிலை உருவாகியது.

உலக வல்லரசுகளின் காய்நகர்த்தல்களை திறம்பட எதிர் கொண்டு அவர்களுக்கு வாய்ப்பான கள சூழல்களையும் இனம் கண்டு விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது வேண்டியது அவசியமாகியது.

ஏன் என்றால் இன்று அப்பழுக்கற்ற சனநாயக வழிப்பட்ட சர்வதேசியம் எதுவும் நடப்பில் இல்லை. அந்தந்த நாடுகளும் தமது தேவைகளை அல்லது ஆதிக்க நலன்கள் ஆகியவற்றிற்கு உட்பட்டே உலகை அணுகுகின்றன. இந்த மெய்நிலையை உணர்ந்து கொண்டு மாற்று வியூகம் வகுத்து செயற்படும் விடுதலைப் போராட்டமே வெற்றிபெற முடியும் என்ற நிலையிலேயே எமது போராட்ட வடிவமும் மாற்றமடைந்தது என்பதனை எம்மவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வல்லரசு நாடுகள் கூட்டுச்சேர்ந்து உலகப்பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதாக கூறி தன்னாட்சி கேட்டு போராடிவந்த விடுதலை அமைப்புகள் மீதும் அவை சார்ந்த இனத்தின் மீதும் எல்லையில்லா அடக்கு முறையை திணிக்க முற்பட்டு நின்றனர்.

இக்காலப் பகுதியில் யசீர் அரபாத்தின் தலைமை அகற்றப்பட்ட பின் அமைந்த பாலசுத்தீன அரசாகட்டும் தாலிபான்களது பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆப்கானித்தானில் ஏற்படுத்தப்பட்ட அரசாகட்டும் சதாம் குசைனின் மணிமகுடம் இறக்கப்பட்ட பின்னர் அமைந்த ஈராக் அரசாகட்டும் எல்லாமே அமெரிக்கா சார்ந்த வல்லாதிக்க நாடுகளது ஏவல் பணியாளர்களாகவே செயல்பட்டு வந்தனர்- வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் அரசுகள் தமிழக முதல்வர் கூறியது போன்று எசமானர்களை கோபப்படுத்தும் விதமாக செயற்படாது எள் என்றால் எண்னெயாக உருகிநிற்கும் தலைமைகளின் வழிகாட்டுதல்களில் இயங்கி வருகின்ற போது, ஆக்கிரமிப்பு சக்திகளிற்கு அசைந்து கொடுக்காது தனித்துவமாக செயற்பட்டு வந்தது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையிலான தமிழர்களது விடுதலைப் போராட்டம்.

இராணுவ மேலாண்மை நிலையிலும் மக்கள் தளத்திலும் நின்று தலைவன் எடுத்த முடிவுகள் தன்னலமற்றது.

இக்காலப்ப பகுதியில், நூற்றாண்டு வலிமை மிக்க ஆனையிறவு முகாம் மூச்சு விடும் நேரத்திற்குள்ளாக பொடிப்படியாக்கப்பட்டு உலக நாடுகளிடம் இரந்து பெற்ற அதி உச்ச ஆயுதபலம் கொண்டு தீச்சுவாலையாக எரிக்க முற்பட்ட போது வீரம் செறிந்த எதிர்ச்சமர் புரிந்து ஆரம்பித்த இடத்திலேயே பலத்த இழப்புக்களுடன் புகைந்து போகச் செய்தும் சிங்களத்தின் இதயமான கட்டுநாயக்கா வான்படைத்தளத்தை தகர்த்து பல்லாயிரம் கோடி இழப்புக்களை ஏற்படுத்தியதோடில்லாது மீள் எழுச்சி கொள்ள முடியாதவாறு பொருளியல் ரீதியாகவும் பலத்த அடி கொடுத்து யுத்த களத்தில் மேலான்மை பெற்றே இருந்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.

இருந்தும் புறச்சூழல் சாதகமற்று இருந்தமையினால் போராட்ட வடிவத்தினை மாற்றியமைக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு எமது தேசியத்தலமை தள்ளப்பட்டது என்பதே உண்மையாகும்.

தேசியத்தலைவர் எந்த முடிவு எடுப்பதாகிலும் எமது மக்களது நலன் கருதியே எடுப்பார். கொண்ட கொள்கையில் பற்றுறுதி கொண்டு தமிழீழ தனியரசு ஒன்றே தமிழ் மக்களிற்கு நிரந்தர தீர்வாக அமையும் என்பதில் உறுதியாக இருப்பவர் எம் தலைவர். இதனை காடந்த காலங்களில் எத்தனையோ முறை பதவி ஆசை உள்ளிட்ட இன்னபிற விலைபேசல்களுக்கும் சமரசத்திற்கும் உட்படாது நின்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இராணுவ சமநிலையில் மேலோங்கி நின்றபோது போர் ஓய்வு முடிவை எடுத்து சமாதான பாதையில் பயணப்பட எடுத்த முடிவும் அறிவிக்கப்படாத நான்காம் கட்ட ஈழப்போரில் கிளிநொச்சி வரையான இராணுவ முன்னகர்வை வீரத்துடன் எதிர்த்து நின்று களமாடிவந்த நிலையில் எவ்வித எதிர் தாக்குதலும் இன்றி கிளிநொச்சி பரந்தனை விட்டகன்றதும் அதன் பின்னர் மேற்கொண்ட முடிவும் தலைவர் தன் சார்ந்தோ அல்லது தன்சார்ந்தவர்கள் நலன் கருதியோ எடுத்திருக்கவில்லை.

இலங்கையில் நிகழ்த்தப்பட்டுவரும் அரச பயங்கரவாதத்திற்கு ஒத்திசைவான போக்கையே சர்வதேச நாடுகள் பிராந்திய நலன் அடிப்படையில் கடைபிடிக்க முற்பட்ட போது அந்த நாசகார கூட்டணியை எதிர் கொள்வதற்கு மாற்றுவழி தேடியே எந்த முடிவாக இருந்தாலும் எடுத்திருப்பார் என்பது உறுதி.

தலைவரது முடிவினை மறுதலிப்பதற்கோ விமர்சனம் செய்வதற்கோ யாருக்கும் தகுதியும் இல்லை உரிமையும் இல்லை. பெயர், புகழ், பணத்தை சம்பாதிப்பதற்காக குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து அதிமேதாவித்தனமான கருத்துக்களை தமிழக ஊடகத்தளத்தில் இருந்து வெளிப்படுதிவருபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எவ்வளவு பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்ட போதிலும் அதிலிருந்து மீள்வதற்காக எந்த முடிவை எடுப்பதென்றாலும் களத்திலே நின்று அந்த மக்கள் மத்தியில் அவர்களுக்கு கவசமாக இருந்தே எம் தலைவர் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக போரியல் கோட்பாடுகளை கநற்றறியாது முற்றிலும் எமது தாயக சூழலுக்கேற்றவாறான போர் பயிற்சி முறைகளையும், நெறிமுறைகளையும் தயாரித்து அதன் அடிப்படையில் பயிற்றப்பட்ட ஆயிரம் ஆயிரம் புலி வீரர்களது சாதனைகள்தான் மேற்சொன்ன இராணுவ சமநிலையில் மேலாண்மையினை பெறுவதற்கு அடிபப்டையாக இருந்தது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எந்தவித வெளிசக்திகளது ஆதரவோ ஒத்துழைப்போ இன்றி தனியே எமது மக்களின் தார்மீக ஆதரவு தளத்தில் நின்றே இவ் உயரிய நிலையை அடைந்தார்கள். இதுவே சர்வதேசத்திற்கு உறுத்தலாக அமைந்தது.

அபரிமிதமான வளர்ச்சி கண்டு பலம் பெற்ற முப்படை கட்டமைப்பினை ஏற்படுத்தியதுடன் செயற்திறன் மிக்க நடவடிக்கை மூலம் வியத்தகு மேன்மைநிலையை நோக்கி சென்று கொண்டிருந்த எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச நாடுகளை அச்சம் கொள்ள வைத்தது என்றால் மிகையாகாது.

அதனால் பிராந்திய வல்லாதிக்க நிலையும் அதோடிணைந்த வர்த்தக ஆதிக்க நிலையும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.

இதனை தவிர்ப்பதற்கு முதலில் பலதடவைகள் பேசிப்பார்த்தும் முடியவில்லை என்றான பின்னரே முற்றிலுமாக அழித்தொழித்து தமது பிராந்திய வல்லாதிக்க நிலைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை போக்கிக் கொள்ள முடிவெடுத்து நடாத்தியும் விட்டனர் இவ் உலகவல்லரசு நாடுகள்.

தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக்கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு.

முள்ளிவாய்க்கால் களமுணையுடன் எமது விடுதலைப் போராட்ட கட்டமைப்பு முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதான ஒரு நிலைபாட்டின் அடிப்படையிலையே சர்வதேச நாடுகள் தமிழ் மக்களது தீர்வு தொடர்பாக  இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கி வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை பெறவேண்டுமாயின் அவசரகால சட்டத்தை உடணடியாக நீக்க வேண்டும் எனவும் சரத்துகளில் ஒத்துக் கொண்டதற்கிணங்க மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். அத்தோடு இறுதிப்போர் நிகழ்ந்த காலப்பகுதியில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுதந்திர விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளது பிரான்சு நாடு.

இலங்கை  அரசிற்கு அரசியல், பொருளியல் பெரும் ரீதியிலான நெருக்கடிகளை சர்வதேச நாடுகள் ஏற்படுத்தி வந்தாலும் அதனால் முற்றுமுழுதாக எதுவும் ஆகிவிடப் போவதில்லை என்பதே உண்மைநிலையாகும்.

ஆனால் சர்வதேச மாறுதல் நிலையானது தற்போதைய நிலையில் மிகவும் அவசியமானதாகும்.ஏனெனில் இலங்கையை நெருக்கடிக்குள் வைத்துக் கொண்டுதான் எமது அடுத்த கட்டத்தை நாம் முன்னெடுத்து செல்லமுடியும்.

எது எவ்வாறாயினும் எமது உரிமைப்போராட்டத்தை ஏற்றுக் கொண்டு தமிழீழ தனியரசினை அங்கீகரிக்க வேண்டும், தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ் மக்களது ஏகபிரதிநிதிகள் என்ற எமது அடிப்படை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் செயற்படுவதற்கு இந்த சர்வதேச நாடுகள் இதுவரை முன்வரவில்லையே..!

இறுதிப்போர் முடிவடைந்து ஆறுமாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் அந்த போரின் வடுக்களை தமது உடலிலும், உள்ளத்திலும் சுமந்து நடைபிணங்களாக முட்கம்பி வதைமுகாம்களில் சிக்கித்தவித்து வரும் மக்களை பார்வையிடவோ, மாபெரும் இனப்படுகொலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலைய பகுதிகளை பார்வையிட்டு அதற்கான ஆதாரங்களை பெற்று இன அழிப்பிற்கு காரணமானவர்களை தண்டிக்கவோ இவ்வல்லரசு நாடுகள் இதுவரை ஆக்கபூர்வமான முன் முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை.

இந்நிலையில் இறுதிப்போரிற்கு பின்னரான காலப்பகுதியில் மக்களது மறுவாழ்விற்கென பல ஆயிரம் கோடிகளை வாரிக் கொடுத்தனவே இவ்வல்லரசு நாடுகள். அவ் நிதியாதாரத்தை பயன்படுத்தி உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு முட்கம்பி முகாம்களில் அடைபட்டிருக்கும் எமது மக்களை பார்வையிடவோ முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலையப் பகுதியை பார்வையிடவோ அனுமதிக்குமாறும் இல்லாவிட்டால் மறுவாழ்விற்கான நிதி உதவியை வழங்கமாட்டோம் என்ற கோரிக்கையினை வைத்திருக்கலாமே…!

அவ்வாறு வலுவான நிலையில் நின்று தட்டிக்கேட்பதை விடுத்து நிதியுதவிகளையும் செய்துவிட்டு ஒப்பிற்கு கோரிக்கைகளை வைத்துவருவதானது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது போலல்லவா உள்ளது.

உலகநாடுகளது வழிகாட்டுதலில் சமாதானப் பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையினை நீக்குவதற்கு இன்றுவரை எந்த நாடும் முன்வரவில்லை. மாறாக ஒபாமா அரசாங்கமோ போர் முடிவுற்றதன் பின்னரும் கூட இன்னும் சில வருடங்களிற்கு தடையினை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகள் தற்போது  இலங்கை அரசிற்கு அரசியல் பொருளியல் ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்தாலும் மேற் சொன்ன நிலைகளை எட்டாத வரை அம்முயற்சிகள் எமது மக்களது துயரங்களிற்கு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரப் போவதில்லை என்பதே யதார்த்தமாகும்.

தமிழக குழுவினரது வருகையும் தொடரும் தமிழரின் அவல நிலையும்.

தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்ட நாட(க)hளுமன்ற குழுவினரது வேண்டுதலுக்கிணங்க முட்கம்பி வேலி முகாம்களில்(தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தது போன்று தங்கக்கூண்டில்) இருந்து பெருமளவில் விடுவிக்க படுவதாக ஒரு மலிவான விளம்பரத்தை தமிழக ஆளும் தி.மு.க. அரசு தனது ஊடகபலத்தினை கொண்டு தேடிக்கொண்டுள்ளது. தமிழக நாட(க)hளுமன்ற குழு செல்வதற்கு முன்னரே ஆயிரக்கணக்கிலான மக்கள் வதைமுகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இவ்வாறு உலகறிந்த வதைமுகாமில் இருந்து வெளியேற்றப்படும் தமிழ் மக்கள் உலகறியா வேறு முகாம்களில் சிறைவைக்கப்படுவதுதான் உண்மைநிலை ஆகும்.
இவ்வாறு முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்றிவிடுவதுடன் பிரச்சினைகள் தீர்ந்து விடப்போவதில்லை. எமது மக்கள் கேட்பது சுதந்திரமான வாழ்க்கையினை.
படுக்கையறைக்கு வெளியிலும், குளியலிடத்திற்கு சுற்றிவரவும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நிலைபெற்று நிற்கும் சுதந்திரத்தை எமது மக்கள் விரும்பவில்லை.

சோறா சுதந்திரமா என்ற கேள்வி எழுந்த கடந்த காலங்களில் எல்லாம் சுதந்திரம்தான் பெரிதென்று பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தாங்கிக் கொண்டு தமிழீழ விடுதலைப்பயணத்தில் கைகோர்திருந்த மக்களை ஆட்டு மந்தைகளை விட கொடுமையான வாழ்க்கைக்கு தள்ளிசுதந்திர வேட்கையினை நீர்த்துப் போகும் வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றது சிங்கள அரசு.

முகாமில் இருந்து விடுவிக்கப்படுபவர்களது நடமாடும் சுதந்திரம் எவ்வளவு தூரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது விடுவிக்கப்பட்டவர்கள் அனுபவித்துவரும் பயணக்கட்டுப்பாடுகளில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

உலக மக்களின் நல்வாழ்வினை உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட உலக மகா சபையும் தமிழர்களை வஞ்சித்து விட்டது.

கடந்த மே மாதம் 17ம் திகதிக்கு பின்னர் தமிழர்கள் தலைமை அற்றவர்களாக்கப் பட்டுள்ள சூழ்நிலையில் அந்த பொறுப்பை ஏற்று எமது மக்களிற்கு நீதியான சுதந்திரமான வாழ்வை அமைத்து கொடுக்கவேண்டிய உலக மகா சபையான அய்க்கிய நாடுகள் சபையோ அல்லது மேற்குலக நாடுகளோ இதுவரை செயலற்ற நிலையிலையே உள்ளன.

இறுதிப்போர் நடைபெற்ற போது மக்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுவதால் அனைத்துலக நாடுகள் தலையிட்டு போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் போர்ப்பகுதியில் இருந்து மக்களை வெளியேறி வருமாறு கூறினார்களேதவிர போரை நிறுத்துவதற்கு முயற்சிகளேதும் எடுத்திருக்கவில்லையே!

அவ்வாறு வெளியேறி வந்தவர்களது பாதுகாப்பினையோ அடிப்படை உரிமைகளையோ பெற்றுக் கொடுப்பதற்கு போர்ப்பகுதியைவிட்டு வெளியே வா வா என்றவர்கள் ஏன் முன்வரவில்லை.

எமது விடுதலைப்போராட்டத்தை முற்றிலுமாக அழித்தொழிப்பதிலையே குறியாக இருந்தனரே தவிர அரச பயங்கரவாதத்தினால் நசுக்கி அழிக்கப்படும் பூர்வகுடிகளான தமிழர்களை பாதுகாப்பதிலோ, அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதிலோ இருக்கவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தமது கட்டுப்பாட்டில் இருந்து மாற்று சக்திகளது கைப்பாவையாக சிறிலங்கா மாறிவரும் நிலையினை தடுத்து நிறுத்துவதனையே முதன்மை நோக்கமாக கொண்டு சிறிலங்காவிற்கு அரசியல், பொருளியல் ரீதியிலான நெருக்கடிகளை தோற்றுவித்துவரும் மேற்குலக நாடுகள், வதைபடும் எமது மக்கள் பக்கம் கரிசனை கொள்வதற்கும் நிரந்தர தீர்வை பெற்று தருவதற்குமான ஏது நிலை இதுவரை தோன்றவில்லை என்பதையே இவை உணர்த்தி நிற்கின்றன.

உலக வல்லரசுகளை எதிர்த்து நின்று புதிய சகாப்தம் படைத்த புலிகள் சேனை.

உலகப்போர்கள் இடம்பெற்ற பேதெல்லாம் எதிர் எதிர் நிலையில் பல வல்லரசு நாடுகளைக் கொண்ட பெரும் பலம்மிக்க அணிகளே மோதிக் கொண்டுள்ளநிலையில் தமிழீழ போர்க்களத்தில் உலக வல்லரசுகளெல்லாம் சிங்களத்தின் பக்கம் நின்றபோதும் ஒரு நாடாகவே அங்கீகர்கப்படாத தேசியத் தலைவரது வழிநடத்துதலில் போராடிய விடுதலைப்பலிகள் படை இரண்டு ஆண்டுகள் எதிர்த்துப்போராடி புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளனர்.

அவ்வாறு உலக வல்லரசு நாடுகளையே எதிர்து நிற்கும் வல்லமை பெற்ற தலைவனை கண்டதனால் ஏற்பட்ட ஆச்சரிய, அச்சநிலையின் வெளிப்பாடாகவே முள்ளிவாய்யகால் இனப்படுகொலைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியும், அதனை இன்றுவரை மூடிமறைப்பதற்கு ஏதுவாகவும் செயற்பட்டுவருகின்றன இவ் வல்லரசு நாடுகள்.

ஒப்பற்ற தலைவனையும் புலிப்படைகளையும் அழிப்பதற்கே சிங்களத்துடன் அணிசேர்ந்து களமாடிய நிலையில் இன்றுவரையில் அந்த நிலையில் எந்த மாறுதல்களும் ஏற்படாத சூழ்நிலையில் எமது தலைமை வெளிப்படுமாக இருந்தால் என்ன நடக்கும் என்பது வெளிப்படையானதே. புதுமையான காரணகாரியங்களை உருவாக்கி மீண்டும் தேடி அழித்தலுக்கு தயாராகிவிடும் இவ்வல்லரசு நாடுகள்.

இந்நிலையினை உணர்ந்து கொண்டதனால் தான் தலைவரும் அவரோடினைந்த தளபதிகளும் பாதுகாப்பாக வேறு தளத்திற்கு சென்று தமது இருப்பை உறுதி செய்துள்ளனர்.
உலக வல்லரசு நாடுகளையே கதிகலங்கவைக்கும் போர்- இராசதந்திர வியூகங்களை வகுத்து தமிழீழ தனி அரசை நிறுவுவதற்கு வல்லமைமிக்க தலைவனும் தளபதிகளும் தக்கநேரத்தில் வெளிப்படுவார்கள். அதுவரை அனைத்துலக ரீதியாக அரசியல் பலம் பெற்றவர்களாக உருவாகுவதற்குரிய வகையில் எமது செயற்பாடுகளை திட்டமிட்டு செயலாற்றுவோம்.

அனைத்துலக ஆதரவு நிலையினையும், நயவஞ்சகத் தனத்தினையும், துரோகத்தனத்தினையும் நேருணர்து கொண்ட தலைவரிடம் அந்த சூழ்சி மிக்க பிராந்தி வல்லாதிக்க போக்கிலிருந்து எப்போது வெளிப்பட வேண்டும் என்பதை தீர்மாணிக்கும் வல்லமையும் உண்டு.

எனவே கார்த்திகை 27ல் வெளிப்பட்டு மாவீரர் நாள் உரையாற்றுவதா… இல்லை தற்போதுபோன்று ஏதுமற்ற வெறுமை நிலையினை தொடர்வதா… எதுவானாலும் தீர்க்கரிசனத்துடன் தலைவர் முடிவெடுத்து கொள்ளட்டும். நாம் எமது பணியை தொய்வின்றி தொடர்வோம்.

கடந்தமுறை தலைவர் உரைத்தது போன்று…

எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

இந்த வரலாற்று சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்த கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாக குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாரளமான உதவிகளையும் வழங்கி தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த சந்தர்பத்திலே தேச விடுதலைபணியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம் பெயர்ந்து வாழும் எமது இளைய சமூகத்திற்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்திய இலட்சியத்தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியமான சுதந்திர தமிழீழத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

இரா.மயூதரன் (18-11-2009)

 

Share.

Comments are closed.