தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழ் மரபுத் திங்கள்

Google+ Pinterest LinkedIn Tumblr +

உலகளாவிய தமிழ் இளையோர் அவை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இளையோர்கள் மற்றும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. இந்நாளில் தமிழர்கள் இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவித்து, புதிய ஆடைகள் அணிந்து, தமது உற்றார் உறவினர்களுக்கு பரிசுகள் வழங்கி மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

இந்த முக்கிய திருநாளில் உலகளாவிய தமிழ் இளையோர் அவை, ஆண்டுதோறும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக கொண்டாட வேண்டுமென தமிழ் இளையோரையும் தமிழ் மக்களையும் கேட்டுக்கொள்கின்றது. செழுமைமிக்க தமிழ் மரபு, பண்பாடு, மற்றும் வரலாறு போன்றவை தமிழ் அடையாளத்தை பேணுவதற்கு இன்றியமையாதவையாக உள்ளன. இவற்றை உலகளவில் எடுத்துக்கூறுவதே உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் நோக்கமாகும்.

தை முதலாம் நாளும் தைப்பொங்கல் திருநாளும் இடம்பெறுவதாலேயே சனவரி மாதம் தமிழ் மரபுத் திங்களுக்கு உகந்த மாதமாக உள்ளது. தமிழரது மரபு முறைகள் உலகெங்கும் பரந்து காணப்படுவதற்கு புலம்பெயர் தமிழர்களின் பணி முக்கிய பங்கை வகிக்கின்றது. தொல்பொருள் ஆர-hய்ச்சிகளும் தமிழ் மொழி உலகில் மிகவும் தொன்மை வாய்ந்த மொழி என்பதற்கு பல சான்றுகளை சுட்டிக்காட்டுகின்றன. இவையனைத்தும் தமிழர் மரபின் மதிப்பீட்டை மென்மேலும் உலக அரங்கில் உயர்த்துபவையாக உள்ளன.

உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் நோக்கம் இளையோரை அணுகி, ஒன்றிணைத்து அவர்களை சிறந்த தலைமைத்துவ பண்புள்ளவர்களாகவும் எமது நாட்டின் சிறந்த சிற்பிகளாகவும் உருவாக்கப் பாடுபடுதலாகும். எனவே தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியங்கள், வரலாறு போன்றவற்றின் மூலம் ஒன்றுபட்ட அடையாளத்தை தமிழ் இளையோர் மத்தியில் உருவாக்கி அவர்களை என்றென்றும் ஒன்றுபட்ட ஒரு சக்தியாக நிலைகொள்ளச் செய்வது அவசியமாகும். அதுமட்டுமன்றி தமிழர் மரபு எமது அடுத்த தலைமுறையினரிடமும் தவறாது கொண்டுசெல்லுதல் புலம்பெயர் வாழ் அனைத்துத் தமிழ் உறவுகளினதும் கடமையமாகும்.

இதன் பொருட்டு சனவரி மாதத்தினை தமிழ் மரபுத் திங்களாக அறிவிப்பதில் உலகளாவிய தமிழ் இளையோர் அவை மிகவும் பெருமை கொள்கின்றது. அத்துடன் உலகெங்கிலுமுள்ள தனது உறுப்பினர்களையும் தமிழ் மரபுத் திங்களை முன்னெடுத்துச் செல்லுமாறும் தமிழர் அடையாளத்தை வலுப்படுத்துமாறும் உலகளாவிய தமிழ் இளையோர் அவை கேட்டுக்கொள்கின்றது.

Share.

Comments are closed.