சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் பாலித கோகன்ன மற்றும் உல்லாசப் பயணத்துறை பிரதி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ‘விசா’ வழங்குவதற்கு கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.
கலாநிதி கோகன்னவும், பிரதி அமைச்சர் ரணதுங்கவும் லண்டன் செல்வதற்கான ‘விசா’வைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை அண்மையில் சமர்ப்பித்திருந்தார்கள்.
இருந்தபோதிலும் அவர்களின் கடவுச்சீட்டுக்கள் விசா மறுக்கப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை திருப்பியனுப்பப்பட்டுள்ளன. இதற்கான காரணம் எதுவும் பிரித்தானிய தூதரகத்தினால் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
விசாவைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் மூலமாகவே பாலித கோகன்னவின் விண்ணப்பம் பிரித்தானிய துதரகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நேரில் வந்து விண்ணப்பத்தை கையளித்தால் மட்டுமே அவருக்கு விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இருந்தபோதிலும், பிரித்தானிய தூதரகத்தின் இந்த விளக்கத்தை சிறிலங்கா அரசு நிராகரித்திருக்கின்றது. பாலித கோகன்ன வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருப்பதால் விசா விண்ணப்பத்தைக் கையளிப்பதற்கு அவர் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் பாலித கோகன்னவுக்கு விசாவைப் பெற்றுக்கொள்வதற்கான இரண்டாவது முயற்சி ஒன்றையும் வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டது. இருந்தபோதிலும் இந்த விண்ணப்பத்தையும் நிராகரித்த பிரித்தானிய தூதரகம், இந்த விண்ணப்பத்தைக் கையாள்வதற்கான நேரம் போது என அதற்குக் காரணம் தெரிவித்திருக்கின்றது.
24 மணி நேர முன்னறிவித்தலுடனேயே இந்த விண்ணப்பத்தை தாம் கையளித்ததாகத் தெரிவித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிடுமாறு கோருவதற்காக பிரித்தானிய தூதுவர், பிரதித் தூதுவர் ஆகியோருடன் தொடர்புகொள்வதற்கு பலமுறை முனைந்தபோதிலும் அவர்களின் தொடர்பு கிடைக்கவில்லை என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், உல்லாசப் பயணத்துறைப் பிரதி அமைச்சருக்கும் ‘விசா’வை வழங்க மறுத்ததன் மூலம் பிரித்தானிய தூதரகம் இராஜதந்திர நடைமுறைகளை மீறியிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துளன்ளன.
ஐ.நா. சபையில் சிறிலங்காவுக்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள பாலித கோகன்ன அந்தப் பதவியைப் பொறுப்பேற்பதற்காக நேற்று இரவு கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் பீற்றர் ஹெய்ஸை விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் இன்று அழைத்து கேள்வி எழுப்புவார் எனத் தெரிகின்றது.