பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான மகளிர் முன்னணி – சுவிஸ்

Google+ Pinterest LinkedIn Tumblr +

சுவிஸ்தழுவிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள்வாக்கெடுப்பில் அனைத்து தமிழ் உறவுகளும் ‘ஆம்’ என்று வாக்களித்து தமிழர்களின் சுதந்திர இறைமைகொண்ட தமிழீழ விடுதலைக்கான ஆணையை வழங்குமாறு தயவாகக் கோருகின்றோம். 1948ம் ஆண்டு எமது இறைமை சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்ட நாள்முதல் எமது இனம்பட்ட வேதனைகள் சொல்லில் அடங்கா. அதிலும் தமிழ்பெண்கள் வேட்டையாடப்படுவது தமிழ்ப் பெண்களின் மார்புகளில் சிங்களச் ‘ஸ்ரீ’ பதித்தல்போன்ற மிருகத்தனமான செயல்களில் ஆரம்பித்து கட்டிழந்து வளர்ந்துவந்துள்ளது.

கூட்டுப் பாலியல் வல்லுறவுகள் பாலியல் வல்லுறவுக்குப்பின்னர் கூட்டுப்படுகொலைகள் விசாரணைகளற்ற கொலைகள் குடும்பத் தலைவனை பலிகொடுத்து விதவைகளான இளம்பெண்கள் என்று தமிழ் பெண்கள் படும் துயரப் பட்டியல் நீண்டு செல்கின்றது. போர்க்காலம் நடந்த கொடுமைகளை அள்ளித் தின்னும் அளவிற்கு இன்று உலகின் மனிதாபிமானிகளதும் பெண்ணுரிமைவாதிகளினதும் மௌனத்தோடு எமது தாய்க்குலம் குறிப்பாக இளம்பெண்கள் படும் சித்திரவதை சொல்லில் வடிக்கமுடியாதவை. சிங்களக் காடையர்களுக்கு பலியாகும் எம் பெண்களின் வாழ்வு நம் உடல் கட்டையேறும்வரை ஈரணிக்கமுடியாதது.

இத்துன்பங்கள் நீங்க என்ன தீர்வு? முல்லைத்தீவுக் கடலோடு ஆண்களும் சிங்கள இராணுவச் சிப்பாய்களுக்கு பெண்களும் பலிகொடுக்கப்படும் என்று பகிரங்க அறிவித்தல் விடுத்து கொடூரம் புரியும் சிங்களவனோடு நாம் வாழமுடியாது. எமது பூர்வீகத் தாயகத்தில் எமது பாரம்பரிய விழுமியங்களோடு சுதந்திரமாக வாழ்வதையே நாம் விரும்புகின்றோம். 1833ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பறித்தெடுக்கப்பட்டு பின்னர் 1948இல் சிங்களவனிடம் கொடுக்கப்பட்ட எமது இறைமைகொண்ட சதந்திர தமிழீழ தாயகமே எமக்கான நிரந்தர தீர்வென்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.

எமது உரிமை எமக்கு வேண்டும். 1977ஆம் ஆண்டிற்குப்பின் முதல்தடவையாக ஜனநாயக வழியில் எமது தேசிய உரிமையை வலியுறுத்தும் எமக்கான இச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொள்கையில் எமது உறுதியையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்திநிற்போம். எமது ஆணையை ஏற்று அமையவிருக்கும் மக்கள்அவைகளூடாக சிங்கள இனவெறி அரசிடம் அகப்பட்டுள்ள எமது பெண்களின் மறுவாழ்விற்கு வழிசமைப்பதே எமது உடனடித் தேவையெனக் கருதுகின்றோம்.

எமது தொடர்ச்சியான துன்பம்தோய்ந்த வாழ்விற்கு ஒரு முடிவாக அமையக்கூடியது எமது தேச விடுதலையே. இறைமைகொண்ட ஒரு சமூகமே தன்னைத்தான் பாதுகாக்கும் தார்மீக உரிமையை பெறுகின்றது. இனவிடுதலை ஒன்றே பெண்விடுதலைக்கும் அவளின் பண்பான வாழ்விற்கும் வழிகோலும்.

நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

Share.

Comments are closed.