பொன்சேகாவுக்கு உதவியதாக கோத்தபாய சுமத்திய குற்றச்சாட்டை, அமெரிக்காவும் நோர்வேயும் கடும் தொனியில் மறுத்துள்ளன

Google+ Pinterest LinkedIn Tumblr +

இலங்கையில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவின் பிரசாரங்களுக்கு நிதியளித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நோர்வேயும் அமெரிக்காவும் மறுத்துள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தக்குற்றச்சாட்டை சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ஸ்ரெயிட் டைம்ஸ் செய்திதாளுக்கு இன்று வழங்கிய செவ்வியில் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நோர்வே, ஏனைய நாடுகளின் தேர்தல்களிலும் ஜனநாயகத்திலும் தமது நாடு தலையிடாது என தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நோர்வேயின் தூதுவர் டோர் ஹட்ரம் இன்று வெளியுறவுத்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதேவேளை கோத்தபாயவின் குற்றச்சாட்டை அமெரிக்க தூதரகம் கடுமையான தொனியில் மறுத்துள்ளது.

எனினும் கோத்தபாயவின் குற்றச்சாட்டில் எவ்வித உண்மைகளும் இல்லை என அந்த தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலங்கை அரசாங்கம், எதிர்க்கட்சியின் ஆதரவாளர்களின் பாதுகாப்பையும் ஊடகங்களின் சுதந்திரத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

சுதந்திரமாக கருத்து தெரிவித்தல், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பனவற்றில் அனைத்து இலங்கையர்களும் சந்தோசமாக ஈடுபடுவது ஜனநாயக உரிமை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்காவுக்கு எதிராக பொன்சேகா போர்க்குற்றங்களை சுமத்திய நடவடிக்கைக்கு பின்னணியில் மேற்குலகின் மிகப்பெரிய சதி உள்ளது. பொன்சேகாவின் இந்த பிரசாரங்களுக்கு அமெரிக்கா, நோர்வே போன்ற‌ நாடுகள் பெருமளவு நிதியை வழங்கியுள்ளன. அது எமக்கு நம்பகரமாக தெரியவந்துள்ளது. அரசுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்வதற்கு ஊடகவியலாளர் ஒருவருக்கு நோர்வே நிதி வழங்கியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

சிங்கப்பூர் ஊடகமான ஸ்ரெய்ட் ரைம்ஸிற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் மேற்கண்டவாறு குற்றச்சாட்டியிருந்தார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

Share.

Comments are closed.