மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு குறித்து அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படும்: த.தே.கூட்டமைப்பிடம் ஐ.நா. பிரதிநிதி உறுதி

Google+ Pinterest LinkedIn Tumblr +

போர் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தி அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் உடனடி கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் லின் பஸ்கோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்திற்கு உதவியளிக்கும் எனவும் லின் பஸ்கோ தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 
நேற்று  வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்ற இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு பிரதி தலைவர் மாவை சேனாரதிராஜா, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிக்காந்தா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் வில்லியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
லின் பஸ்கோவுடன் ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல்புகுனே மற்றும் ஐ.நா உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 
இந்த சந்திப்பில் லின் பக்ஸ்கோ தம்மிடம் கூறிய விடயங்கள் தொடர்பாக மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்-
 
“இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குமானால் ஐக்கிய நாடுகள் சபை அதற்கு உதவியளிக்கும். மக்களை சொந்த இடங்களில் மீள குடியமர்த்தி அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியம் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்து கூறியுள்ளோம் என்று லின் பஸ்கோ எம்மிடம் கூறினார்.
 
அத்துடன் ஜனவரி மாதத்திற்கு முன்னர் மக்களை மீள குடியமர்த்துவதாக ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்ததாகவும் லின் பஸ்கோ எம்மிடம் தெரிவித்தார்.
 
மக்களை மீள குடியமர்த்தல் அரசியல் தீர்வு ஆகிய இரண்டு விடயங்கள் உட்ப சகல விடயங்களிலும் ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்துடன் பேசும் என்றும் லின் பஸ்கோ உறுதியளித்தார்.
 
அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. இது வரைகாலமும் தமிழர்களின் அரசியல் வேட்கைகளை உள்ளடக்கி தீர்வு ஒன்றை முன்வைக்க விரும்பாத அரசாங்கம் இனிமேலும் தீர் வை முன்வைக்கும் என எதிர்பாக்க முடியாது.
 
பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமையினால் அரசாங்கம் அதில் கவனம் செலுத்துகின்றதே தவிர அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை.
 
அதன் காரணமாக அரசியல் தீர்வு ஒன்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தயாரித்து வருகின்றது. அந்த தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
 
அதேவேளை இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துகின்ற நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை உதவிபுரிய வேண்டும். அரசாங்கம் எவரையும் அனுமதிக்காது தாங்களே செய்து வருகின்றனர். இதனால் காலதாமதம் ஏற்படும்.
 
கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள தொண்டு நிறுவனங்களின் உதவிகள் தேவை ஆனால் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்க மறுக்கின்றது.
 
எனவே ஐ.நா அந்த விடயத்தில் கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும். கண்ணி வெடிகள் இல்லாத பிரதேசங்களில் கூட மக்கள் இன்னமும் குடியமர்த்தப்படவில்லை.
 
மழைகாலம் ஆரம்பமாகவுள்ளது.  இந்த நிலையில் மீள் குடியேற்றம் இடம்பெறவில்லையானால் மக்கள் இன்னல்களை எதிர்நோக்குவார்கள். 180 நாட்களுக்குள் மீள்குடியேற்றம் இடம்பெறும் என அரசாங்கம் இந்தியாவுக்கு உறுதியளித்திருந்தது.
 
அவ்வாறு உறுதியளித்து 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை அங்குள்ள மக்களில் மிகவும் குறைந்தளவிலான மக்களே முகாமில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களிலும் அனேகமானோர் வீடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை அவர்கள் இடைத்தங்கள் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
யாழ்ப்பாணத்தில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள குடியமர்த்த வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் கூட இன்னமும் பாதுகாப்பு தரப்பு அதற்கு அனுமதி வழங்கவில்லை இந்த நிலையில் வவுனியா நலன்புரி முகாமில் உள்ள மக்களை அரசாங்கம் துரிதமாக மீள குடியமர்த்தும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.
 
முகாம்களில் உள்ள மக்களை சென்று பார்வையிட்டு உதவிகளை வழங்குவதற்கு கூட அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கிவில்லை.

உண்மையில் அரசாங்கத்திற்கு அக்கறை இருக்குமானால் நல்ல அனுகுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் முகாம்களுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை செல்ல அனுமதித்து குடியேறற விடயங்களிலும் எங்களின் ஒத்துழைப்புகளை பெற்று நல்லெண்ணத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்
 
ஆனால் அவ்வாறு எந்தவிதமான ஆரோக்கியமான முயற்சிகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை” என எடுத்து கூறியதாக மாவை சேனாதிராஜ சொன்னார்.
 
இந்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்றது.
 

Share.

Comments are closed.