முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் – மனித உரிமைக் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

Google+ Pinterest LinkedIn Tumblr +

வவுனியாத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைக் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மனித உரிமைக் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ள 280,000ற்கும் அதிகமான தமிழ் மக்களை உடனடியாக சிறிலங்கா அரசு விடுவிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சிறிலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போர் காரணமாகத் தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறிய அனைவரும், அரசால் ‘நலன்புரி நிலையங்கள்’ என்று அழைக்கப்படும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பது அனைத்துலக சட்டவிதிகளை மீறும் செயல்.

இந்த முகாம்களில் இருந்து ஒரு சிறு தொகையினர் மட்டுமே, குறிப்பாக மூத்தவர்கள் மட்டுமே தமது குடும்பங்களுடன் சேர்வதற்காக அல்லது மூதாதையர் இல்லங்களில் சேர்வதற்காக, வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“போருக்கு மத்தியில் அகப்பட்டுக்கொண்ட இலட்சக்கணக்கான மக்கள் இவ்வாறு முகாம்களில் முடக்கப்பட்டிருப்பது கொடுமையானது” என்று கூறுகிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குனர் பிராட் அடம்ஸ்.

“அவர்கள் இதுவரை பட்டதெல்லாம் போதாதா? இலங்கையின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் போன்று அவர்களுக்கும் தமது சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை இருக்கிறது” என மேலும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜூலை மாதம் 17 ஆம் நாள் அறிக்கையின்படி, இலங்கையின் வடபகுதியில் உள்ள நான்கு வவுனியா, திருணோமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் படையினர் நடத்திவரும் 30 முகாம்களில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 621 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முகாமில் உள்ளவர்களர் அவசர மருத்துவத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பின்னர் அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டி இருந்தால் படையினரின் பாதுகாப்புடனேயே செல்ல முடியும்.

மனிதாபிமானப் பணியாளர்கள் முகாம்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்றவை பற்றிய விபரங்கள் அல்லது நடந்திருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து மனிதாபிமானப் பணியாளர்கள், முகாமில் இருப்பவர்களுடன் கலந்துரையாடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள காளிமோட்டை, சிறுகண்டல் முகாம்கள் உருவாக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இந்த நாட்களில் சிலருக்கு மட்டும் குறிக்கப்பட்ட காலம் முகாம்களைவிட்டு வெளியே செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்த முகாம்களில் உள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் இரு தடவைகள் தங்களைத் படையினரிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்குக் கிடைத்த அறிக்கைகளின்படி, படையினரிடம் தங்களைப் பதிவு செய்துகொள்ளத் தவறுபவர்கள் அல்லது தாமதமாகப் பதிவு செய்பவர்கள், உச்சி வெய்யில் அடிக்கும் போது சூரியனுக்குக் கீழே நீண்ட நேரம் நிற்க வைக்கப்படுகிறார்கள். அல்லது கூலித் தொழிலாளர்களாக நடத்தப்படுகின்றனர்.

தடுப்பு முகாம்களில மக்களை வைத்திருக்கும் சிறிலங்கா அரசின் கொள்கை பரவலாக கண்டனத்துக்கு உள்ளானது. ஒரு உதாரணத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் இடம்பெயர்ந்த மக்களுக்கான பிரதிநிதி வோல்ட்டர் கெலின் இது தொடர்பில் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

உள்ளூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் எழுந்த கண்டனங்களுக்குப் பதிலளித்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்த முகாம்களில் உள்ள எந்த ஒரு நபரும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவராக இருக்கக்கூடும் என்று சொல்லி தனது அரசின் கொள்கையை நியாயப்படுத்தினார்.  நிலைமையின் தீவிரத்தைக் குறைப்பதற்காக, முகாம்களில் உள்ளவர்கள் மிக விரைவில் மீளக்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று அரசு தெரிவித்து வருகின்றது.

வன்னி மக்களில் 80 சதவீதத்தினரை இந்த ஆண்டு இறுதிக்குள் மீளக்குடியமர்த்தி விடப்போவதாக கடந்த மே மாதத்தில் அரசு அறிவித்தது. ஆனால், இப்போது அந்த இலக்கு 60 சதவீதம்தான் என்று சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் கூறுகின்றார்.மீள்குடியமர்வுக்கான எந்தவொரு திட்டத்தையும் அரசு இதுவரைக்கும் வழங்கவில்லை. அதேநேரத்தில் எப்போது தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களும் எந்தத் தகவல்களையும் பெறவில்லை.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆயிரக்கணக்கானவர்கள் படையினரால் முகாம்களைவிட்டு அகற்றியுள்ளது. அவர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு அல்லது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  ஆனால், அகற்றப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது பற்றியோ அவர்களுக்கு என்னானது என்பது பற்றியோ முகாம்களில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு எந்தத் தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. இது அவர்கள் காணாமல் போயிருப்பார்கள் அல்லது மோசமாக நடத்தப்படுவார்கள் என்ற கவலையை அதிகரித்துள்ளது.

மனிதாபிமானப் பணியாளர்கள் முகாமில் உள்ள மக்களுடன் பேசக்கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள உத்தரவு, மக்கள் தவறாகப் பயன்படுத்துவதற்கு ஆளாவதில் இருந்து பாதுகாக்கும் அவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி இருக்கிறது.  ஆட்களை சட்டத்திற்குப் புறம்பாகத் தடுத்து வைப்பதையும் நடமாடும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதையும் அனைத்துலகச் சட்டங்கள் தடை செய்கின்றபோதும், போர்ப் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய மக்களில் இருந்து விடுதலைப் புலிகளைப் பிரித்தெடுக்கும் பணி என்று சிறிலங்கா அதிகாரிகள் கூறிக்கொள்ளும் நடவடிக்கை நடந்துகொண்டே இருக்கின்றது.

அனைத்துலகச் சட்ட திட்டங்களின்படி, ஒரு நபர் கைது செய்யப்பட்டால் அவர் உடனடியாக நீதிபதி முன்னிலைப்படுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றங்கள் சுமத்தப்படவேண்டும். இல்லையே அந்த நபர் விடுதலை செய்யப்படவேண்டும். சில பாதுகாப்புக் காரணங்களுக்காக நடமாட்ட சுதந்திரத்தை கட்டப்படுத்துவதற்கான அனுமதியை மனித உரிமைகள் சட்டங்கள் வழங்குகின்ற போதும், கட்டுப்பாடுகள் மிகத் தெளிவாக சட்டரீதியில் அமைந்தவையாக இருக்க வேண்டும் என்றும், எது அவசியம் என்பது தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்றும், ஆபத்து என்ன என்பது எடுத்துரைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றன.

“தடுப்பு முகாம்களில் மக்களை சட்டவிரோதமாக முடக்கி வைத்திருப்பதை நியாப்படுத்துவதற்கு, அவர்களை விரைவில் விடுதலை செய்துவிடுவோம் என்னும் பொய்யான வாக்குறுதிகள் போதுமானவையல்ல” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குனர் பிறட் அடம்ஸ் தெரிவித்தார்.

“முகாம்களை வைத்திருக்கும் ஒவொரு நாளும் அரசு மக்களின் உரிமைகளை மீறும் மற்றொரு நாள்” எனவும் அவர் விவரித்தார்.  முகாம்களின் வாழ்க்கைத் தரம் அங்குள்ள மக்களை பெரிதும் சினமூட்டுகிறது. பல முகாம்கள் மக்களால் நிரம்பி வழிகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தால் வழங்கப்பட்ட எண்களை சிலர் இரண்டு தடவைகள் பெற்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி முகாம்களில் மலசல கூடங்களுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக அங்கு சுகாதாரப் பிரச்சினைகள் மேற்கிளம்புகின்றன.  ஜூன் மாதத்தில் மட்டும் 8 ஆயிரம் பேர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முகாம்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் பதிவேடுகள் கூறுகின்றன. மேலும் பல நூற்றுக்கணக்கானோர் கல்லீரல் அலற்சி, சின்னம்மை, வயிற்று அலைச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு போதாமை, அளவுக்கு மீறிய மக்கள் நெருக்கம், அடுத்த முகாமில் உள்ள உறவினரையோ அல்லது அப்பகுதியில் உள்ளவர்களையோ சென்று பார்த்துப் பேச முடியாத நிலை என்பன காரணமாக முகாம்களில் உள்ள மக்கள் மனஅழுத்தங்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என உள்ளிருந்து கிடைக்கும் அறிக்கைகள் கூறுகின்றன.  இதன் வெளிப்பாடாக, கடந்த மாத இறுதியில் அவர்கள் முகாம்களுக்குள் இரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். படையினரால் அவர்கள் கலைக்கப்பட்டனர்.

வெளியே இருந்து இந்த முகாம்கள் ஆய்வு செய்யப்படுவதில் இருந்து அவற்றை அரசு சிறப்பாக மூடிமறைத்துள்ளது. மனித உரிமை அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் எவரும் முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.  மனித உரிமை அமைப்பு ஒன்று முகாமுக்குச் செல்வதாக இருந்தால், முகாமின் நிலை தொடர்பாக அரசின் அனுமதியின்றி எந்தவொரு விடயத்தையும் வெளிவிட மாட்டோம் என்று, படிவம் ஒன்றில் கையெழுத்திடுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றது.

முகாம்களின் நிலை தொடர்பான விவரங்களை சேகரித்து வெளியிட்ட வெளிநாட்டுப் ஊடகவியலாளர்கள் அல்லது மனிதாபிமானப் பணியாளர்களை பல சந்தர்ப்பங்களில் அரசு நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. அல்லது அவர்களது வதிவிட அனுமதிப் பத்திரத்தை நீடிக்க மறுத்துள்ளது.  அனைத்துலக நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கடந்த 24 ஆம் நாள் சிறிலங்காவுக்கான 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை அங்கீகரித்தது. இது சிறிலங்கா அரசு எதிர்பார்க்காத அளவு அதற்கு நிதியைக் கொடுத்துள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஆர்ஜென்டீனா உட்பட பல்வேறு நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.  மனித உரிமை மீறல்கள் தொடர்பான கவனத்தை வெளிப்படுத்துவதற்காகவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை தவறாக நடத்துவது உள்ளிட்ட தவறான பயன்பாடுகளுக்காகவும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் அந்த நாடுகள் அவ்வாறு நடந்துகொண்டன.

அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் தொகை ஒவ்வொரு மூன்று மாதத் தவணைகளில் வழங்கப்படவுள்ளது.  “சிறிலங்கா தனது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு நிதி அவசியம் என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன” என்று கூறும் பிறட் அடம்ஸ், இருந்தாலும் சிறிலங்கா அரசு கடந்த சில மாதங்களாகத் தனது தமிழ் மக்களை நடத்துகின்ற விதம், அது எதிர்கொள்கிற சவால்கள் குறித்த அனுதாபத்தை வடியச் செய்துவிட்டது எனவும் குறிப்பிட்டார்.

சிலங்கா அரசு தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் அது அனைத்துலகத்தின் கடுமையான பார்வையை எதிர்நோக்க வேண்டி இருக்கும் என பிறட் அடம்ஸ் மேலும் தெரிவித்தார்.

Share.

Comments are closed.