யாழில் இந்தியத் தூதரகம் திறப்பு – முன்னதாக திலீபனின் நினைவுதூபி தகர்ப்பு

Google+ Pinterest LinkedIn Tumblr +
இந்தியத் தூதரகம் திறக்கப்படுவதற்கும், நினைவு தூபி தகர்க்பப்பட்டதற்கும் காரணங்கள் ஒற்றுமையாக இருக்கின்றன என பரவலான குற்றச்சாட்டுக்கள் எழத்தொடங்கியுள்ளன என நேற்று வெளியான ஈழமுரசு செய்தி தெரிவித்துள்ளது.
மேலும் அவ்விதழ் தெரிவிக்கையில்:
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசு முடிவு செய்திருக்கின்றது. அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ் இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன், இது தொடர்பான ஆலோசனைகளையும் கொழும்பிலுள்ள தமது தூதரகத்துடன் மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து, யாழ்குடாவில் இந்தியத் துணைத் தூதரகத்தை திறப்பதற்கு சிறீலங்கா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் மே மாதம் திறந்துவைக்கப்பட உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூரகம் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியிலுல் அமைந்திருந்த தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவு தூபி தகர்க்கப்பட்டு, அலோங்கோலப்படுத்தப்பட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலங்களிலும் சரி, அதன் பின்னரான சமாதான காலத்திலும் சரி சிறிய சேதங்களுக்கு உள்ளான இந்தத்தூபி முற்றாக தகர்க்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால், போர் முடிவடைந்துவிட்டதாக கூறப்பட்டு பத்து மாதங்களை எட்டியுள்ள நிலையில், திலீபனின் நினைவுதூபி தகர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தகர்ப்பிற்கு யாழ்ப்பாணத்தில் வந்து குவிந்துள்ள சிங்களக் காடையர்களே காரணம் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், இந்த நினைவுதூபித் தகர்ப்பினை சிங்களக் காடையர்களோ அல்லது அவர்களின் இராணுவமோ மேற்கொண்டிருந்தாலும் தகர்ப்பிற்கான பின்னணிக் காரணம் வேறு என கருதப்படுகின்றது.
குறிப்பாக இந்தியத் தூதரகம் திறக்கப்படுவதற்கும், இந்த நினைவு தூபி தகர்க்பப்பட்டதற்கும் காரணங்கள் ஒற்றுமையாக இருக்கின்றன என பரவலான குற்றச்சாட்டுக்கள் எழத்தொடங்கியுள்ளன. தியாகி திலீபன் இந்திய இராணுவத்தினர் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டவர்.
இறுதிவரை தனது உறுதியில் தளராது போராடிய திலீபனை, இந்தியா கவனத்தில் எடுக்கத் தவறியது. திலீபன் சாவை அணைத்துக்கொண்டார். இதனால், அகிம்சைக்கு பெயர் போன நாடு என தன்னைப் பெருமைப்படுத்திய இந்தியாவிற்கு, பெருத்த அவமானமே மிஞ்சியது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் தூதரகம் அமைத்து தங்கப்போகும் இந்தியாவிற்கு திலீபனின் நினைவுதூபி தமது தூதரகத்திற்கு அருகில் அமைந்திருப்பது நெருடலாகவும் ஒரு அவமானச் சின்னமாகவும் இருக்கும் என்ற நிலையிலேயே இந்தத் தகர்ப்பு இடம்பெற்றிருப்பதாக கருதப்படுகின்றது.
இந்த உண்மையை வெளிப்படையாக சொல்லமுடியாது போனாலும், யாழில் உள்ள ஊடகம் ஒன்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளது. திலீபனின் அகிம்சைப் போராட்டம் சிறீலங்கா அரசுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது என்பதை அந்த ஊடகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
எனவே, இந்த நினைவுதூபி தகர்ப்பிற்கும் இந்தியத் தூதரகத் திறப்பிற்கும் ஒற்றுமையான காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகின்றது. இதற்கிடையே, சிறீலங்காவிற்கான இந்தியதூதர் அசோக் காந்தா கடந்த 19ம் திகதி வவுனியாவுக்கு சென்று பின்னர் ஒட்டுசுட்டான், முல்லைதீவுக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, ஓர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல், சிறீலங்கா விடயத்தில் இந்தியாவும், சீனாவும் கடும் போட்டிபோட்டுக்கொண்டு உதவுவதால் சிறீலங்கா பெரும் வருமானத்தையும் இலாபங்களையும் அடைந்துவருவதாக கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு சீனாவே மிக அதிகமான உதவிகளை சிறீலங்காவிற்கு வழங்கியதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவே அதிகமான உதவிகளை வழங்கியதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
சீனா 2.5 பில்லியன் டொலர்களை உதவியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியா கடந்த ஆண்டு சிறீலங்காவிற்கு சுமார் 12.5 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக எவ்வாறு போட்டி போட்டுக்கொண்டு இருவரும் சிறீலங்காவிற்கு உதவிகளை செய்து வந்தார்களோ அவ்வாறே இப்போது அபிவிருத்தி என்ற பெயரில் சிறீலங்காவிற்கு இரு நாடுகளும் அள்ளி கொட்டிக்கொடுக்கின்றன.
இந்த போட்டியில் குளிர்காயும் சிறீலங்கா இருவரையும் பகைக்காமல் பெரும் நிதிகளைப் பெற்று வருகின்றது. பல்வேறு புனரமைப்பு உடன்படிக்கைகளையும் இரு நாடுகளுடனும் மகிந்த அரசு மாறிமாறி செய்து வருகின்றது. குறிப்பாக யாழ்குடா நாட்டில் அனைத்து வீதிகள், பாலங்களை திருத்தும் பணி சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியா கொதிப்படைய தற்போது மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி வரையிலுமான தொடரூந்து பாதைகளை அமைக்கும் பணிக்கான உடன்படிக்கையை சிறீலங்கா இந்தியாவுடன் செய்துகொண்டுள்ளது.
அத்துடன், யாழ்குடாவில் துணைத் தூதரகத்தை அமைக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், சிறீலங்காவின் விசுவாசம் என்பது சீன சார்பாகவே இருக்கும் என்பதால் இந்தியா சிறீலங்காவை விட தமிழ் ஒட்டுக்குழுக்களையே தனது கைகளுக்குள் போட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் கிழக்கில் பிள்ளையான், வன்னியில் ஈ.என்.டி.எல்.எவ், வடக்கில் சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு ஆகியவற்றை பயன்படுத்தினாலும், தென்னிலங்கையை கைகளுக்குள் போட்டுக்கொள்ளும் எந்த வசதியும் தற்போது இந்தியாவிடம் இல்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் அம்பாந்தோட்டை பகுதியில் அமைக்கப்படும் அனைத்துலக விமான நியைத்தின் ஒப்பந்தப் பணிகளை பெறுவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டபோதும், மகிந்த அரசு அதனை சீனாவுக்கு வழங்கிவிட்டது. இவ்வாறு, இந்தியாவை ஓரங்கட்டி சீனா தென்னிலங்கையில் தனது கால்களை ஆழமாக ஊன்றிவிட்டது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் ஒரே நாடு என்பது மட்டுமல்ல, ஒரே ஆட்சி என்ற கொள்கையையும் வைத்திருக்கும் சீனா, மகிந்த ராஜபக்ச குடும்பத்தை நிரந்தர ஆட்சியாளர்களாக்கி தமது ஆதிக்கத்தை இலங்கையில் நிரந்தரமாக்கும் திட்டத்துடன் செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது. எனினும், இவ்வாறான கருத்துக்களை முறியடிக்கும் வகையில் சிறீலங்கா ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
அண்மையில் சிங்கப்பூர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்தியா தமது நட்பு நாடு என்றும் அமைதி காலத்திலும் சரி, யுத்த காலத்திலும் சரி இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அத்துடன், இந்தியாவிடம் இருந்து சிறீலங்கா ஆயுதங்களை கொள்முதல் செய்யுமா என்று அந்த இதழ் கேள்வி எழுப்பியபோது, இப்போதைக்கு வெளிநாட்டிலிருந்து ஆயுதங்கள் வாங்க வேண்டிய அவசியமில்லை என்றார். உடனே அந்த இதழ், போருக்கு பின்னர் சீனாவிலிருந்து கப்பலில் ஆயுதங்கள் வந்தது என்று பதில் கேள்வி எழுப்பியபோது, அது எனது நண்பர் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் வேலை. ஆனால் அவற்றை நான் திருப்பி அனுப்பிவிட்டேன். இனி அதிக அளவில் ஆயுதங்கள் தேவையில்லை என்றார் மகிந்த ராஜபக்ச.
 

நன்றி: ஈழமுரசு (26.03.2010)

Share.

Comments are closed.