யாழ். பல்கலைக்கழக இடம்பெயர் மாணவனும் மாணவியும் சடலங்களாக மீட்பு

Google+ Pinterest LinkedIn Tumblr +

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிகப்பீடத்தின், முதலாம் வருட மாணவனும் மற்றும் முதலாம் வருடம் முகாமைத்துவ பீட மாணவியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறையைச் சேர்ந்த 21 வயதான ரவீந்திரதாசன் விக்டர் அருள்தாசன் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 21 வயதான வேலாயுதம் திருவிழி ஆகியோரே இவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த இருவரும் வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின்போது அவயவங்களை இழந்த நிலையில் வவுனியா இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்து  அண்மையிலேயே வெளியேறி யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 20.08.1988 இல் பிறந்த 2009 – முதலாம் வருடம் முகாமைத்துவ பீட மாணவன் ரவீந்திரதாசன் விக்டர் அருள்தாசன் ஷெல் தாக்குதலில் இடுப்பின் கீழ் கால் பகுதி படுகாயமடைந்திருந்தது.

இந்தநிலையில் சடலங்கள் மீட்கப்பட்ட குளக்கட்டு பகுதியில் இருந்து இவர்களால் எழுதப்பட்டதாக கருதப்படும் கடிதம் ஒன்றும், இவர்களது அடையாள அட்டைகளும் கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தாம் போர்க் காலத்தில் பலதை இழந்துள்ளோம். தற்போது சாதாரண மக்கள் போல் எங்களால் வாழ முடியவில்லை எனவும், அகதி முகாமில் முடங்கியுள்ள தமது பெற்றோரை எண்ணி கவலையடைவதாகவும், தாம் எவ்வளவு காலத்துக்கு நிவாரணங்களையும் கொடுப்பனவுகளையும் நம்பி கல்வி கற்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இத்துயர சம்பவம் யாழ் பல்கலைக்கழக சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

Share.

Comments are closed.