யுத்த காலத்தில் அனுபவித்தவற்றை நினைத்துப் பார்க்க விரும்பவில்லை : கிளிநொச்சியில் மீளக்குடியேறிய மாணவன்

Google+ Pinterest LinkedIn Tumblr +

யுத்தத்தைப் பற்றியோ, நாங்கள் அனுபவித்தவற்றைப் பற்றியோ இப்போது நினைத்துப் பார்க்கக் கூட நான் விரும்பவில்லை. உண்மையில் அது மிகவும் மோசமாக இருந்தது. எனது பெற்றோரை இழந்துவிட்டேன். இதிலும் பார்க்க வேறொரு மோசமான விடயம் இருக்குமென நான் நினைக்கவில்லை என்று ராகவன் சின்னத்துரை (15 வயது) என்ற மாணவன் கூறியுள்ளார்.

யுத்தத்தின் போது இந்த மாணவன் கிளிநொச்சியில் வசித்தார். 2008 இல் அவரும் குடும்பத்தினரும் இடம்பெயர்ந்து சென்றனர். இப்போது கிளிநொச்சிக்குத் திரும்பியிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் இந்த மாணவனும் ஒருவராகும்.

“2008 அக்டோபர் மாதமானது எனது வாழ்க்கையில் மோசமான காலமாகும். அந்த மாதமே எனது வாழ்க்கை மாறியது. பலருடைய வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அக்டோபர், டிசம்பருக்கிடையில் உக்கிரமான சண்டை இடம்பெற்றது. ஷெல் தாக்குதலால் மக்கள் மரணமடைந்தனர். யாரைக் குற்றம் சாட்டுவதென எனக்குத் தெரியாது.

எவரையும் இப்போது குற்றம் சுமத்த விரும்பவில்லை. அதுவொரு மனவருத்தமான காலமாகும். அடுத்த வருடம் பரீட்சை எழுதப்போகிறேன். இப்போது எனது மூத்த சகோதரனுடன் கிளிநொச்சியில் இருக்கிறேன். அவர் இருப்பதால் நான் அதிர்ஷ்டசாலி.

நல்ல கல்வியைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன். சிறப்பான எதிர்காலத்துக்காக முயற்சிக்கிறேன். பாடசாலைக்குப் போகவுள்ளேன். சிலவேளை துன்பமான நினைவுகளுடன் இருப்பது கஷ்டமானதாகும். பாடசாலையில் அதிகமானவற்றை நான் இழந்துவிட்டேன். உண்மையில் அதுவொரு கெட்டகாலமாகும்.

இப்போது எங்களுக்கு இருக்கும் பாரிய பிரச்சினை வீட்டுப் பிரச்சினையாகும். அதுவே எமக்கு முக்கியான தேவையாக உள்ளது. வீட்டு வசதி சிறப்பாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. நாம் இருந்ததிலும் பார்க்க சிறப்பான நிலையிலிருக்கின்றோம் என்றாலும் எமக்கு அதிகளவு உதவி தேவைப்படுகிறது.

எனது பெற்றோரை இழந்து விட்டேன். ஆனால், தினமும் அவர்களைப் பற்றி நினைப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும். இந்த நினைவுகளிலிருந்து நாம் விடுபட்டு அப்பால் செல்ல வேண்டும் என்று எனது சகோதரர் கூறுகிறார். அதனை நான் செய்வேன் என்று அந்த மாணவன் ஐ.ஆர்.ஐ.என்.னுக்கு கூறியுள்ளார்.

 

Share.

Comments are closed.