வட்டுக்கோட்டைத் தீர்மான மீள் வாக்கெடுப்பு ஏன்? எதற்காக? யாருக்காக?

Google+ Pinterest LinkedIn Tumblr +

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மீள்வாக்களிப்பினையும் ஏகோபித்த மக்களின் ஆணையாக்க அனைவரையும் வாக்களிப்பில் பங்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

‘காலம் கருதி இடத்தாற் செயின் ஞாலம் கருதினும் கைகூடும்’ என்கிறது நம் வள்ளுவம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இக்குறட் கருத்தினைப் பொருத்திப் பார்க்க வேண்டிய தருணம்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பு ஆகும். சில சமயம், ‘Ballot is more powerful than the bullet என்பதும் ஒரு வரலாற்றுப் படிப்பினை ஆகும். 

      இந்திய விடுதலைப் போராட்டத்தில் தனது இஸ்லாமிய மக்கள் மீது, முகமது அலி ஜின்னா கொண்டிருந்த அக்கறை, இலங்கை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தலைவர்களுக்கு இல்லாமற் போனது பெரும் வரலாற்றுப் பிழையாகும். அந்த முதற்கோணல் இன்று வரை ஈழத் தமிழர்களுக்கு முற்றும் கோணலாகவே அமைந்துவிட்டது.

      தமிழ்த் தேசிய கூட்டணித் தலைவர்களின் முப்பது ஆண்டுக்கால அறவழிப் போராட்டங்கள், ஈழத்தமிழர்களிடமிருந்து 1956 முதல் பறிக்கப்பட்டு வந்த குடியுரிமை, மண்ணுரிமை, மொழியுரிமை, படிப்புரிமை என எவ்வித உரிமைகளையும் மீட்டுத் தருவதற்கு மாறாக, சிங்கள பேராதிக்க பேரிண கோட்பாட்டாளர்களால் தமிழின அழிப்பு வேலை மூலம் பாதுகாப்பற்ற வாழ்க்கை அச்சமே பலனாக கிடைத்து வந்தன.

      அரசியல் போராட்டங்கள் கையறு நிலைக்குப் போன பிறகு மாணவர்களும் இளைஞர்களும் வதைப்பவனை உதைப்பதில் தவறில்லை எனும் முடிவில் 1974 க்குப் பிறகு ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தமிழின அழிப்புக்கு எதிராக, அரச பயங்கரவாதத்திற்கு பதிலடி தரமுடியும் என்பதை இளைஞர்கள் நிருபித்துவந்த வேளையில், தமிழ் மக்களின் காவல் தெய்வங்களாக செல்வாக்கு பெற்று வந்தனர். ஈழத்தமிழ் பிரச்சினைக்கு தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என்றனர்.

      இத்தகைய வரலாற்று அழுத்தத்தால், மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த தமிழ்த் தேசிய அரசியல் கூட்டமைப்பினர், தந்தை செல்வா தலைமையில், வட்டுக்கோட்டை – பண்ணாகம் என்னுமிடத்தில் 1976-ல் அறவழி மக்கள் ஆயுதமான ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பதைப் பிரகடனப்படுத்தினர். 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் உயிர்க்கரு இதுதான்:- தமிழ்த்தேசிய எல்லைப் பரப்பான வடக்கு கிழக்கு மாநிலங்கள் இணைக்கப்பட்டு அப்பகுதியில், தமிழ் பேசும் மக்கள் தன்மானத்துடன் வாழ சுதந்திரமான, இறையாண்மையுள்ள, தன்னுரிமைப் பெற்ற தனித்தாயக தமிழீழ தனியரசை அமைக்கப் போராடுவதே தமிழ் மக்களின் ஒரே குறிக்கோள் என்பதே அது. 

      இத்தீர்மானத்தை முன்வைத்து, 1977-ஆம் ஆண்டு, இலங்கை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அனைவரும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகும் தகுதிக்கு உயர்த்தப்பட்டனர். தமிழீழத்திற்கு ஆதரவான முதல் பொது வாக்கெடுப்பு இதுவென்றால், அது மிகையாகாது.

      பிரதமர் இந்திராகாந்தி காலத்தில், 1971-ல் வங்க தேச விடுதலைக்கு உதவியதுபோல், ஈழப்போராளிகளுக்கும் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்தபோது, இந்திய இராணுவம் பயிற்சிகள் அளித்தது. இவர்கள் மூலமாக இந்தியாவின் அரச தந்திரம் உலகம் முழுவதும் செல்வாக்குப் பெற்றது. அதே சமயம், சர்வதேச சதி வேலைகளும் தமிழீழ விடுதலைக்கு எதிராக பின்னப்பட்டு வந்தன. 

      தமிழீழ விடுதலைக்குப் பதிலாக இலங்கை ஒற்றையாட்சியின் கீழ் சில அதிகாரங்களை மட்டும் பெற்றுத்தரும் கபட நாடகங்கள் அரங்கேறின. 1985 திம்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தமிழீழத்தைத் தவிர, வேறெதற்கும் உடன்படாத ஒரே போராளி இயக்கமாக தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் விடுதலைப் புலிகளின் இயக்கம் இருந்த காரணத்தால், பெரிய அண்ணன் மனப்பான்மையில் மிதந்த இந்தியா, பிரதமர் இராஜிவ் காந்தி காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையின் தாக்குதல்களின் மூலம் தமிழர் – இந்தியர் உறவில் விரிசலை ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு இராஜிவ் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்துக் கொண்டே வளைக்குடா போரில் அமெரிக்க விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பக்கூடாது என்று அன்றைய பிரதமர் சந்திரசேகருக்கு தந்த நெருக்கடி, சர்வதேச சதிவலைகள் பின்னப்பட்டு இராஜிவ் காந்தியின் உயிருக்கே உலை வைத்தது. ‘பழி ஓரிடம் பாவம் ஓரிடம்’ என்பது ஈழத்தமிழர் பிரச்சனையில் மெய்யானது. இராஜிவ் கொலையில் இதுவரை இந்தியா வெளிநாட்டு புலனாய்வு விசாரணை (Foreign Probing) கோராதது சதியின் உண்மைப் பின்னனியை மூடி மறைப்பதாகவே உள்ளது.

      இந்தியாவின் நிலைப்பாடு எதிராக இருந்த போதும், சிங்கள இராணுவத்திற்கு எதிராக பல வெற்றிக்களங்கடைப் படைத்த விடுதலைப் புலிகளின் இயக்கம் படிப்படியாகத் தமிழ் அரசியல் தலைவர்கள் – பிறப் போராளிக் குழுக்கள் – ஈழமக்கள் ஆகிய அனைவரதும் ஒரே பிரநிதியாக அங்கீகரிக்கப்படும் அளவிற்கு தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் அரசியல் நிலையை மாற்றிக்காட்டி தமிழீழத்திற்கு வலுவூட்டினார்.

      எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) மாதிரி, கத்தர் (Qatar) நாட்டில் எரிவாயு அதிகம் கிடைப்பதால் அதை மையமாக வைத்து, எரிவாயு வள நாடுகளின் கூட்டமைப்பு (GOPEC) உலக வணிகத்தை மாற்றியமைத்திடும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டு வருவதால், வல்லாதிக்க நாடுகள் இலங்கையின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அதற்கு உதவுவதுபோல் நடித்து, இந்துமாக் கடல் பரப்பை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க காயை நகர்த்தி வருகின்றன.

      சமாதான பேச்சுகளின் மூலம் சர்வதேசம், தமது ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு நெருக்கடிகளை உருவாக்கி வருவதையும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்னும் போர்வையில், சிங்கள மேலாதிக்க அரச பயங்கரவாதத்திற்கு முட்டுக்கொடுத்து வந்தததையும் முள்ளிவாய்க்கால் போருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் தெளிவாக உணர்ந்த காரணத்தால், ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை இடைக்காலமாக நிறுத்த வேண்டிய நிலைமை உருவாவதற்குள், தமிழீழத்திற்கு ஆதரவாக சர்வதேசத்தை ஈர்க்கின்ற பணிகளை மேற்கொள்ளும் பணிகளை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டார்கள்.

      2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சமாதானத் தூதுவராக வந்த நார்வே அமைச்சர் எரிக் சோல்கிம் அவர்கள், அமெரிக்கத் தூதுவராக இலங்கையில் இருந்த இராபர்ட் ஓப்ளேக் போன்றோர் ‘தமிழீழம் என்பது ஒரு தனி நபரின் (தேசியத் தலைவரின்) கனவு: மக்களின் விருப்பம் அல்ல’ என்று கொச்சைப்படுத்தி ஊடகங்களில் பிதற்றி வந்த வேளையில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பிற்கு ஓர் அரசியற் தேவை ஏற்பட்டது.

      10-05-2009 அன்று நார்வே வாழ் தமிழ் மக்கள் நடத்திய மீள்வாக்கெடுப்பு 99.9 % வெற்றியைத் தந்து ‘தனித்தாயக தனியரசை அமைப்பது ஒன்றே எங்களது இலட்சியம்’ என்பதை 33 ஆண்டுகளுக்கு பின்னால் மீண்டும் மீளுறுதிப்படுத்தினர். 2009 டிசம்பரில் தொடர்ந்து பிரான்ஸ், கனடா வாழ் தமிழ் மக்கள் பொதுவாக்கெடுப்பின் மூலம் 99.9 % உறுதி செய்தனர். 2010 ஜனவரித் திங்கள் 24-ல் சுவிஸ், டென்மார்க், ஹாலந்து மற்றும் ஜெர்மனி போன் நாடுகளிலும், 30-ம் நாள் இலண்டனிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீள்வாக்கெடுப்பு நடத்த ஆர்வத்துடன் மக்கள் ஆயத்தமாகி வருவதை நேரில் பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்ததால் உறுதியாகச் சொல்கிறேன் ‘முள்ளிவாய்க்கால் போர் முடிவல்ல: ஓர் திருப்புமுனை’. சூழ்ச்சிதனை, வஞ்சகத்தை பொறாமை தன்னை தொகையாக எதிர்நிறுத்தி தூள் தூளாக்கும் காழ்ச்சிந்தை மறச்செயல்கள் யாவும் கொண்டு நம் தொப்புள் கொடி உறவுகளாம் உலகின் ஒன்பது கோடி தமிழர்களும் தேசியத் தலைவரின் காலக்கட்டத்திலேயே ஐ.நா.வில் அங்கம் வசிக்கும் தகுதியை தமிழீழம் அடைவதன் மூலம் பெறப் போகின்றார்கள் என்பது தெளிவாகியது.

      வேதியியல் மாற்றங்களை துரிதப்படுத்தும் கிரியா ஊக்கிப் போல தமிழீழ விடுதலையை வட்டுக்கோட்டைத் தீர்மான மீள்வாக்கெடுப்பு துரிதப்படுத்தும் ஒரு மக்கள் நாயக துருப்புச் சீட்டு என்பதும், அறப்போராட்ட ஆயுதமென்பதும், இதனால் தெளிவாகத் தெரியப் போகிறது. ‘மாறுதல் ஒன்றே மாறாதது’ என்கிற அறிவியல் அடிப்படையில் இதன்மூலம் பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. 

      கண்மூடிக் கிடந்துவிட்டு வரலாற்றின் கதவுகள் மூடப்பட்டு விட்டதாக முணகிக்கொண்டிருப்பது பேதமையிலும் பேதமை ஆகும். பத்தாவது முறை விழுந்தவனைப் பார்த்து பூமித்தாய் சொன்னாளாம் ஒன்பது முறைகள் ஏற்கனவே எழுந்தவனல்லவா நீ! எனவே ‘எழு! விழி! இலக்கு அடையும்வரை ஓயாதே!’ என்ற விவேகானந்தரின் வழியில் தமிழீழ விடுதலைப் பயணம் தொடர வேண்டும்.

      ஆயுதத்தைக் கைவிட்டு அமைதிப் பேச்சுக்கு வாருங்கள் என்று நாடகமாடியவர்களுக்குச் சனநாயக வழியில், அந்தந்த நாட்டின் சட்டத்திட்டங்களுக்குட்பட்டு நாம் விடும் சவால்தான் இந்த மீள்வாக்கெடுப்பு. ஜனநாயக நெறிமுறைகளுக்குச் சர்வதேசம் மதிப்பளிப்பது உண்மையானால், தமிழீழத்திற்கு நாம் நடத்தும் மக்கள் வாக்கெடுப்பிற்கும் மதிப்பளித்துத்தான் தீரவேண்டும். 1990 முதல் கொசாவா, கிழக்கு திமோர் என 15க்கும் மேற்பட்ட நாடுகள் பொது வாக்கெடுப்பின் மூலம் தனித்தாயகம் பெற்றுள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பரப்புரை செய்தவர்களின் வாயடைக்கும் வழிமுறைதாம் இந்த மீள்வாக்கெடுப்பு.

      தாவரங்களும், விலங்குகளும் அழிக்கப்படுவதற்கே எதிர்ப்பைக் காட்டிவரும் உலகம், அப்பட்டமான இனஅழிப்புக் கொடுமைகள் முள்ளிவாய்க்கால் போரில் நடைபெற்றதைக் கண்டும் காணாததுபோல் நடந்துக்கொண்ட சர்வதேசத்தின் மௌனத்தை இது கலைக்கும்.

      இந்தியா போன்ற நாடுகள் நடுநிலை தவறி, மனிதாபிமானத்தைக் கொன்று, சூழ்ச்சி செய்து தடுத்த சிங்கள இனவெறி அரசின் மீதான போர்க்குற்ற விசாரணையை இது மீண்டும் உயிர்ப்பிக்கும். பிரித்தானியா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் முயற்ச்சியால் இலங்கையில் நடைபெறவிருந்த பொதுநல வாய மாநாடு (Commonwealth) ஆஸ்திரேலியாவிற்கு மாற்றப்பட்டதுபோல், நிறுத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணை தொடர நாம் இம்மீள் வாக்கெடுப்பின் மூலம் எழுப்பும் ஜனநாயகக் குரல் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் ஓர் எச்சரிக்கையாக அமையும்.

      நேரு காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்ட இந்தியாவின் நடுநிலை கொள்கைகளுக்கு சமாதி கட்டிய சோனியாவின் சுய உருவம் வெளிப்படவும், அன்னநடை நடக்கப்போவதாகச் சொல்லி சொந்த நடையையும் இழந்தததைப் போல, இலங்கை இறையாண்மைக்கு முட்டுக் கொடுக்கப் போய், தனது சொந்த இறையாண்மைக்கே சீனா மூலம் சிக்கலைத் தேடிக் கொண்ட, ஆப்பசைத்து மாட்டிக் கொண்ட குரங்கின் கதை போல ஆகிவிட்ட இந்தியாவிற்கே அயலுறவுக் கொள்கையில் ஒரு வெளிச்சத்தைத் தந்து வழிகாட்டும் ஆற்றல் படைத்தது நம் மீள்வகெ;கெடுப்பு.

      சிவன் பட்ட பிரம்படி பாண்டிய மக்களின் முதுகெல்லாம் பட்ட வலியானது போல், முள்ளிவாய்க்காலில், பல்லாயிரக்கணக்கில் பொது மக்கள் அழிக்கப்பட்டக் கொடுமையானது உலகத்தின் ஒன்பது கோடி தமிழர்களையும் பாதித்து, ஒன்றுபட வைத்திருப்பதை இந்த மீள் வாக்கெடுப்பிலும் நீங்கள் காட்டும் ஒற்றுமையின் மூலம் உலகிற்கே எடுத்துக்காட்டப் போகிறீர்கள். 

      ஈழத்தமிழினத்தை அழிக்க ஆணையிட்டவரும், அதனைச் செயற்படுத்தியவரும், இந்த இணைப் படுகொலைகளுக்குத் துணைபோன உள்ளக – வெளியக துரோகிகளும் தண்டிக்கப்படவும், கண்டிக்கப்படவும் இந்த மீள்வாக்கெடுப்பு சர்வதேசத்திற்கு ஒரு நெருக்கடியைத் தரப்போகிறது. ஓவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்கிற நீயூட்டனின் அறிவியற்விதிப்படி தமிழீழத்திற்கு எதிரான காரணிகளை, சாதகமாக மாற்றிக் காட்டும் ஒரு ஜனநாயக வழிமுறைதான் இந்த மீள்வாக்கெடுப்பு.

      எனவே, நம் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் ‘நீ பெரிதா, நான் பெரிதா எனப் பார்ப்பதைவிட, நம் எல்லோரையும்விட நாடு (தமிழீழம்) பெரிதெனப் பார்த்து அதற்காக உழைக்க வேண்டும்’ என அறிவிருத்திப்பதை ஒவ்வொரு தமிழனும் நெஞ்சிற் பதித்துக் கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பை ஒற்றுமையுடன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மறைந்த மாவீரர்களை மனதிற்கொண்டு இந்த மீள்வாக்கெடுப்பின் மூலம் ஒற்றுமையையும், ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற உறுதிப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக்காட்டுங்கள். மாவீரர்கள் உயிர்க்கொடைத் தந்தார்கள்! தமிழீழம் வெல்ல நாம் உழைப்புக்கொடைத் தருவோம், வாருங்கள்!
 
 
 

      (இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டள்ளார்)
 

Share.

Comments are closed.