வன்னியில் புதிதாக உருவாகும் அறிவிக்கப்படாத அகதி முகாம்கள்

Google+ Pinterest LinkedIn Tumblr +

வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் வன்னிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதாக அரசாங்கம் கூறினாலும் அவர்களில் பெரும்பாலானோர் சொந்த வீடுகளில் குடியிருக்க அனுமதிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.மன்னாரின் வடக்குப் பகுதி, வவுனியா வடக்கின் சில பகுதிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்து வருகிறது. ஆனால் வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து மீளக்குடியமர்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் பெரும்பாலானோர் அந்தந்தப் பகுதிப் பாட சாலைக் கட்டடங்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை. இராணுவப் பாதுகாப்பு போடப்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் இப்போது அறிவிக்கப்படாத அகதிமுகாம்களாக மாறி வருகின்றன. தடுப்பு முகாம்களில் இருந்து மக்களை விடுவித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் காட்டிக் கொள்வதுடன் அவர்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப் பட்டிருப்பதாகவும் வெளியுலகுக்கு பரப்புரை செய்து வருகிறது.

எனினும் தடுப்பு முகாம்களில் இருந்து கொண்டு செல்லப்பட்டோரில் சிறியளவிலானவர்களே தமது சொந்த இடங்களில் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் இராணுவத்தினரின் கண்காணிப்பில் உள்ள அந்தந்தப் பகுதி பாடசாலைக் கட்டடங்களிலே தங்க வைக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக புளியங்குளம் இந்துக் கல்லூரியில் மட்டும் 300 வரையான பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து சென்ற 29 பேர் கொண்ட பெளத்த யாத்திரைக் குழுவொன்று பெளத்த பிக்கு ஒருவரின் தலைமையில் புளியங்குளம் இந்துக் கல்லூரி முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு பால்மா, இனிப்பு வகைகளை வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கண்ணி வெடிகள் அகற்றப்படாத வன்னிப் பிரதேசத்துக்குள் அரசியல் இலாபம் கருதி அரசாங்கம் அவசர அவசரமாக தமிழ்மக்களை மீளக்குடியமர்த்தி வருவதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.