சரத் பொன்சேகா கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த சமயம் அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு சென்று சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் கசிந்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி சரத் பொன்சேகா தனது அமெரிக்க பிரஜா உரிமைக்கான பத்திரத்தை காலநீடிப்பு செய்வதற்காக அங்கு சென்றிருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அவர் அங்கு சென்றிருந்தசமயம், அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தபோதும் விசாரணைகள் எதற்கும் முகம்கொடுக்காமல் நாடு திரும்பியினார் என்று செய்தி வெளியாகியிருந்தது.
ஆனால், பொன்சேகா அமெரிக்காவில் தங்கியிருந்த சமயம் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அரச முகவர்கள் சிலருடனும் பல சுற்றுப்பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும் இந்த பேச்சுக்களின்போது சிறிலங்கா அரசியல் விவகாரம் மற்றும் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் தொடர்பாகவும் விரிவாக பொன்சேகா எடுத்துக்கூறியிருந்தார் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்களில் ஒன்றின்போது, சிறிலங்கா படைகள் வன்னியில் மேற்கொண்ட போர்க்குற்றங்கள், சரணடைந்த விடுதலைப்புலிகளித் தலைவர்களுக்கு என்ன நடந்தது? விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என்ன நடந்தது? விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது? விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் நிலைகொண்டிருந்த படையணிகளின் விவரங்கள் ஆகியவை உட்பட பல விவரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை பொன்சேகா அமெரிக்க அதிகாரிகளிடம் கையளித்துள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது.
இந்த சந்திப்புக்களை நிறைவுசெய்த பின்னர், கடந்த நவம்பர் 4 ஆம் திகதி நாடு திரும்பிய பொன்சேகா, கொழும்பில் அமெரிக்க தூதுவர் பற்றிக்கா அம்மையாரை சந்தித்து இரகசிய பேச்சு நடத்தியிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களில் திட்டமிட்டபடியே கடந்த நவம்பர் 12 ஆம் திகதி படைகளின் பிரதானி பதவியிலிருந்து பொன்சேகா இராஜினாமா செய்துகொண்டார் என்றும் அதன் பின்னர் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார் என்றும் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஏற்றுக்கொள்ளும்படி ஐக்கிய தேசிய கட்சிக்கு அமெரிக்க தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டதாகவும்கூட அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.