தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாள் சிட்னி Parramatta பூங்காவில் மிக எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது. மாலை 6.00 மணிக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர் ஒருவரின் சகோதரர் பொதுச்சுடர் ஏற்றிவைத்தலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
தமிழீழ தேசிய கீதம் காற்றில் ஒலிக்க தமிழீழ தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறூப்பாளர் ஜனகன் அவர்களும் அவுஸ்திரேலிய தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு முன்னாள் பொறூப்பாளர் சனஞ்ஜயன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
இதனை அடுத்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை தமிழீழ அரசியல்த் துறை பொறுப்பாளர் நடேசன் அவர்களின் சகோதரி ஏற்றி வைத்தார்.
“எங்கே எங்கே ஒருதரம் உங்கள் விழிகளை திறவுங்கள் உம்மை பெற்றவர் தோழர்கள் வந்துள்ளோம்” என மாவீரர் துயிலும் இல்லப் பாடல் ஒலிக்க பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கனக்கில் வந்த மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மலர் அஞ்சலியை தொடர்ந்து Mt Druitt தமிழ் பாடசாலை மாணவர்கள் வழங்கிய “முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பமே” என்ற நாடகம் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கலாநிதி. முருகர் குணசிங்கம் அவர்களின் சிறப்பு உரை இடம்பெற்றது. இவர் “இலங்கையில் தமிழர்” எனும் முழுமையான வரலாற்று நூலை எழுதி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது உரையினை தொடர்ந்து சிட்னி தமிழ் இளைஞோரின் நாட்டிய நாடகம் இடம்பெற்றது. இவ் நாட்டிய நாடகம் நான்கு காட்சிகளாக உருவாக்கப்பட்டிருந்தது.
தாயகத்தில் இறுதி கட்டத்தில் எமது உறவுகள் பட்ட இன்னல்களையும் எமது விடுதலைப் போராளிகள் திறமையாக களமாடிய காட்சிகளையும் எம்கண் முன்னே இப்படைப்பு கொண்டு வந்தது.
தமிழினத்தின் விடிவுக்காக வித்தாகிப்போன மாவீரரின் கனவை நிறைவேற்ற புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து செயல்படுவோம் என இப்புனித நாளிலே உறுதி எடுத்துக் கொண்டனர்.
எமது மாவீரரின் தியாகமும் எமது தேசிய தலைவரின் வழிகாட்டலும் விரைவில் எமது செல்வப் புதல்வர்களான மாவீரர்களின் இலட்சியத்தை நிறைவேற்றும்.
Video: http://www.lankasri.eu/ta/link.php?3m4340SdCgb6eEIcQ372