திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட சிறை; கருணாவுக்கு அமைச்சர் பதவியா?: ஊடக அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேள்வி

Google+ Pinterest LinkedIn Tumblr +

திஸ்ஸநாயகம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்தார் என 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கருணாவிற்கு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதே என்று நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிடம் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் குறித்து ஊடக அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது;

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பானது, ஊடக சுதந்திரத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. அவருக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தொடர்பில் எனக்கு தெரியாது.

இலங்கையில் நீதிமன்றம் சுயாதீனமாகவே செயற்படுகின்றது. அதில் அரசியல் தலையீடுகள் இல்லை அரசாங்கம் தனது கொள்கையை நீதித்துறையில் கையடிப்பது இல்லை,

ஊடகவியாளர் திஸ்ஸநாயக்கத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக இரண்டு மேன்முறையீடுகளை செய்யலாம்.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழங்கில் அவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவினார் என்றே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது என்றார்.

இதனிடைய குறுக்கிட்ட ஊடகவியலாளர், உண்மையில் திஸ்ஸநாயகம் பயங்கவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்தார் என்று வைத்துக்கொண்டாலும் அவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கருணாவிற்கு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதே என்றனர்.

இக்கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் குற்றச்சாட்டுகள் இருக்கவேண்டும் இருவேறு சம்பவங்களை ஒப்பிடவேண்டாம் என்றார்.

Share.

Comments are closed.