பிரான்சு, சென்டெனிஸ், ஸ்ராஸ்பூர்க் நகரங்களில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2009

Google+ Pinterest LinkedIn Tumblr +

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு பிரான்சின் புறநகர்ப்பகுதியான சென் டெனிஸ் பகுதியில் அமைந்துள்ள LSC மண்டபத்தில் நடைபெற்றது. அதேபோன்று பிரான்சின் கிழக்குப் பாகத்திலிருக்கும் ஸ்ராஸ்பூர்க் நகரத்திலும் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.
சென் டெனிஸ் பகுதியில் நடைபெற்ற மாவீரர் நாள்:-

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு பிரான்சின் புறநகர்ப்பகுதியான சென் டெனிஸ் பகுதியில் அமைந்துள்ள LSC மண்டபத்தில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.ஜோசப் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியினை ஐரோப்பிய தமிழர் ஒன்றிய சார்ஸ்பூக் வெளியகத் தொடர்பாளர் திரு.சச்சி ஏற்றி வைத்தார்.

தாயக தேசம் எதிரியால் வல்வளைப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில் நாம் தாய் மண் நெஞ்சு பிளந்து உரிமை மண்ணிட்டு புதைத்த எமது தெய்வங்களின் கல்லறைகள் நடுகற்கள் இன்று இரக்கமற்ற முறையில் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் மண்ணில் துயிலும் மாவீரர்களான லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் கல்றையிலிருந்து மதியம் 12.00மணிக்கு சிறப்பு நிகழ்வுகள் ஆரம்பமானது.

மாவீரர் பற்றிய விவரணம், மற்றும் தலைமைச் செயலகத்தின் கொள்கைப் பிரகடன உரையுடன் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் கடந்த காலங்களில் மாவீரர் நாளில் ஆற்றியிருந்த கொள்கைப் பிரகடனத் தொகுப்பும் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

தொடர்ந்து மணி ஒலிக்கப்பட்டு மாவீரர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் திரு.விக்ரர் அவர்கள் பிரதான ஈகைச்சடரை ஏற்றி வைக்க, கப்டன் கஜன் அவர்களின் சகோதரர்கள் ஏனைய ஈகைச்சடரினை ஏற்றி வைத்தனர்.

மாவீரர் துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க அனைத்து மக்களும் கல்லறையிலும் பிரதான நிகழ்வு மண்டபத்திலும் சமகாலப்பொழுதில் மலர் வணக்கம் செலுத்தினர்.
கல்லறையில் நேரடி ஒளிபரப்பு நிறைவடைந்ததும் மண்டபத்தில் மாவீரர் நினைவு சுமந்த அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

பிரான்சு கலைபண்பாட்டு கழக கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும், மாவீரர் நாள் கலைத்திறன் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களின் சிறப்பு பேச்சுக்களும் இடம்பெற்றதோடு வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும், வெற்றிக் கிண்ணங்களும், முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு வெற்றிப் பதக்கங்களும் வழங்கியதோடு இவ்வாண்டு கலைத்திறன் போட்டிகளுக்கு அதிக மாணவர்களை பங்குபெறச் செய்ததன்முகமாக முவாசி கிறமயல், சார்சல், வில்லிய லுபெல் ஆகிய தமிழ்ச்சோலைகள் சிறப்பு மதிப்பளிக்கப்பட்டது.

காலத்திற்கேற்ற வகையில் தெரிவு செய்யப்பட்ட விடுதலைப் பாடல்களுக்கு சோதியா கலைக்கல்லூரி, செவ்றோன் தமிழ்ச்சோலை, ஒன்லே சுபுவா தமிழ்ச்சோலை, ஆர்ஜெந்தை தமிழ்ச்சோலை மாணவர்களின் சிறப்பு நடனங்கள் இடம்பெற்றது. அதனைத்தெடர்ந்து டிசம்பர் மாதம்12,13ம் திகதிகளில் பிரான்சு நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்படும் வட்டுகோட்டைத் தீர்மானத்தின மீழ் கருத்துக்கணிப்பு சம்பந்தமான விளக்கவுரை வழங்கப்பட்டதை தொடர்ந்து பிரான்சு கலைபண்பாட்டுக்கழக கலைஞர்களின் ‘எங்கே என் தேசம்” எனும் சிறப்பு நாடகம் மேடையேற்றப்பட்டது.

தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்து மிகவும் கருத்தாழத்துடனும்,சிந்தனைச்சிறப்புடனும், செப்பனாகவும் எமது மானமாவீரர்களின் மகத்தான திருநாளில் நெஞ்சு நிறைய நம்பிக்கையை ஏற்படுத்தி தமிழின உணர்வாளராய், பத்திரிகையாளராய் இன்னும் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் திரு.நடராஜன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.

அவர் குறிப்பிடுகையில் மாவீரர்களின் மகத்தான தியாகங்களும், மக்களின் அர்ப்பணிப்புக்களும், ஒருபோதும் வீண்போகாது எனவும், ஈழத்தமிழர் விடயத்தில் தமிழ் நாட்டரசின் கபடத்தனத்தை தோலுரித்துக் காட்டியதோடு தமிழ் நாட்டில் வெகு விரைவில் பாரிய அரசியல் மாற்றம் தோன்றும் எனவும், அந்த மாற்றம், தமிழின உணர்வாளர்களுக்கும், தமிழீழ உணர்வாளர்களுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்த்து தமிழீழ தேசம் உருவாக கை கொடுக்கும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர் தெய்வங்களை நெஞ்சில் நிறுத்தி தமிழ் மக்களின் வரலாற்றுக்கடமையாகவும் வரித்துக்கொண்டு குளிரையும் பொருட்படுத்தாது மிக நீண்ட வரிசையில் பலமணி நேரமாக காத்திருந்து புனிதமான மாவீரர்களின் நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவுப் படங்களுக்கும், நடுகற்களுக்கும் மக்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

சுமார் 15,000 ஆயிரத்திற்க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இந்த நிழ்வின் இறுதி வரையும் நின்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு விடயங்களை உள்வாங்கியதோடு
தமிழீழ தாய் நாட்டிற்க்காக தமது இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை நினைவு கூரும் இப்புனித நாளில். நான் மேற் கொள்ளும் உறுதிமொழியாவது:-

ஈழத்தமிழனாகிய நான் உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும் தமிழீழமே எனது இலட்சியம்! இந்த இலட்சியத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதுடன் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழ தனியரசான எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்பேன் என இந்நாளில் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறேன்!

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

எனும் உறுதி மொழி எடுக்கப்பட்டு பின் தமிழீழ தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் எம் தாரக மந்திரத்துடன் 19.45 ற்கு நிகழ்வு நிறைபெற்றது.

ஸ்ராஸ்பூர்க் நகரில் தேசிய மாவீரர் நாள்.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு பிரான்சின் கிழக்குப் பாகத்திலிருக்கும் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் நடைபெற்றிருந்தது.

சிறப்பாக மாதிரியாக அமைக்கப்பட்டிருந்த துயிலுமில்லத்தில் மாவீரர் பற்றிய விவரணம், மற்றும் தலைமைச் செயலகத்தின் கொள்கைப் பிரகடன உரையினைத் தொடர்ந்து மணி ஒலிக்கப்பட்டு மாவீரர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வீரவேங்கை இனியவளின் சகோதரி  பிரதான ஈகைச்சடரை ஏற்றி வைக்க, ஏனைய உரித்துடையோரும் மெழுகு தீபங்களை ஏற்ற, மாவீரர் துயிலும் இல்லப்பாடல் ஒலித்தது.

அதனைத் தொடர்ந்து அனைத்து மக்களும் உறுதி மொழி எடுத்ததின் பின்னர், கல்லறையிலும் பிரதான  நிகழ்வு மண்டபத்திலும் மலர் வணக்கம் செலுத்தினர்.

வணக்க நிகழ்வுகளின் பின்னர் கலைநிகழ்வுகள் ஆரம்பமாயிருந்தன.

மாவீரர் நினைவைச் சுமந்த நடனங்கள், பாடல்கள், கவிதைகள், தற்காலச் சூழலை நினைவு படுத்தும் நாடகம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதுடன், தேசிய மாவீரர்நாளை ஒட்டி நடைபெற்றிருந்த ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டன.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்துடனும் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.


 

Share.

Comments are closed.